கொரோனா பெருந்தொற்றால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. இதனால் பல லட்சம் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், பஞ்சாப், பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. ``தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அப்போதைய சூழலைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும். முதல்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் சில தினங்களில் வெளியிடப்படும்" என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார்.
`மாணவர்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். குழந்தைகளுக்கும் படிப்புக்கும் இடையேயான நெருக்கம் குறையத் தொடங்குவதால், தகுந்த முன்னேற்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்க வேண்டும்' என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களில் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர். `இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியிருப்பதால், மூன்றாம் அலைக்கான சூழல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே, பள்ளிகள் திறப்பை தற்போதைக்குத் தவிர்க்கலாம்' என்கிறது மற்றொரு தரப்பு. இதுபோன்ற தனிப்பட்ட கருத்துகள் ஒருபக்கம் இருக்க, பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ ரீதியான காரணங்களை ஆராய்ந்தும் முடிவெடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
``பள்ளிகளைத் திறப்பது சரியான முடிவுதான்" என்று அழுத்தமாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரான அருணாசலம். இதுகுறித்து விரிவாகப் பேசுபவர், ``கோவிட் பாதிப்பின் முடிவு மற்றும் தீர்வு குறித்து இப்போதைக்கு யாராலும் கூற இயலாது. ஆனால், அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால், தடுப்பூசியின் மூலம் கோவிட் பாதிப்புக்கு எதிரான போராட்டத்தில் வெற்றியைக் கண்டுள்ளோம். தொற்றுப் பரவல் விகிதம் குறையும் நேரத்தில், வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்புவதும், தொற்றின் வேகம் அதிகரிக்கும்போது வழக்கமான செயல்பாடுகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதும்தான் சரியானதாக இருக்கும்.
வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருப்பது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தடையாக மாறிவிடக் கூடாது. தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கட்டுக்குள்தான் உள்ளது. அதனால், பள்ளிகள் திறப்பதற்கு இப்போதைய சூழல் சரியானது என்பது என் கருத்து. வருங்காலத்தில் தமிழகத்தில் தொற்றின் வேகம் உயர்ந்தாலும், முழுமையாக எல்லாப் பள்ளிகளையும் மூடுவதைத் தவிர்க்கலாம். கிராமப்புறங்கள் உட்பட பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளிலுள்ள மாணவர்கள் முன்னெச்சரிக்கையுடன் பள்ளிக்குச் செல்வதற்கு வழிவகை செய்யலாம். தொற்றுப் பரவல் மற்றும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து, சூழலுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்புக்கான முடிவெடுக்கும் அதிகாரத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம்.
பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், ஏ.சி பயன்பாடு இல்லாமல், பள்ளி வகுப்பறையில் காற்றோட்ட வசதி இருக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் 20 - 30 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும். பள்ளி வாகனம், ஆட்டோ போன்ற வாகனங்களிலும் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டிலிருந்து நேராகப் பள்ளிக்குச் சென்று, கூட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லாமல் மாணவர்கள் வீடு திரும்புவதை வழக்கப்படுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகள், கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிகள் கடைப்பிடித்தால்தான், இந்தச் சூழலில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று படிக்கும் நோக்கம் முழுமை பெறும். இதை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு, மருத்துவக் குழுவினரை நியமித்து உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு" என்று முடித்தார்.
பவானியைச் சேர்ந்த குழந்தைகள் நல அரசு மருத்துவரான கோபாலகிருஷ்ணன், பள்ளிகள் திறப்பு குறித்து வரவேற்பதுடன், அதற்கான அடிப்படை வழிகாட்டுதல்களையும் முன்வைக்கிறார்.
`` `மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது. அதன் பிறகு, பள்ளிகளைத் திறக்கலாம்' என்று சிலர் கூறுகின்றனர். ஒருவேளை மூன்றாம் அலை உருவாகும்பட்சத்தில், அதன் பிறகு மற்றோர் அலை பரவக்கூடும். அப்போது மீண்டும் காத்திருக்க முடியுமா? அடுத்த சில ஆண்டுகளுக்கு கொரோனா குறித்த அச்சம் அதிகமாக இருக்கத்தான் போகிறது. நம் நாட்டில் பெருவாரியான மக்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா பரவலும் கட்டுக்குள் வந்துவிட்டது. வீட்டிலேயே அடைபட்டுள்ள குழந்தைகள், தங்கள் இயல்புத்தன்மையிலிருந்து விலகி வருவதாகப் பெற்றோர்கள் பலரும் கூறுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பது, நண்பர்களுடன் நேரில் பேசி மகிழ்வதுதான் ஆரோக்கியமானது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காதவாறு, பள்ளிகளைத் திறக்கலாம்.
Also Read: Covid Questions: வீட்டுக்கு வாங்கி வரும் பொருள்களை இனியும் கிருமிநீக்கம் செய்ய வேண்டுமா?
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் தடுப்பூசி போட்டுள்ளனர். அவர்களில், இன்னும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பள்ளிகளில் பணியாற்றும் காவலர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரையிலான பாடம் சொல்லிக்கொடுக்காத பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். 9 முதல் 12-ம் வகுப்புவரையிலான ஒவ்வொரு வகுப்பு மாணவர்களையும் இரண்டு முதல் தேவைக்கேற்ப சில பிரிவினராக வகைப்படுத்தி, காலையில் ஒரு பிரிவினரையும் மாலையில் ஒரு பிரிவினரையும் பள்ளிக்கு வர வைக்கலாம். அல்லது ஒருநாளில் காலை முதல் மாலைவரை ஒரு பிரிவினருக்கு மட்டுமே பாடம் சொல்லிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பிரிவினரை அடுத்த நாள் வரவைப்பது எனச் சுழற்சி முறையில் மாணவர்களை வர வைக்கலாம்.
வகுப்பு நேரத்தைக் குறைக்கலாம் அல்லது மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் நாள்களைக் குறைக்க வேண்டும். தொற்றுப் பரவல் அதிகமுள்ள, தடுப்பூசி அதிகம் போடாத மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களின் உடல்நலனில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்தப் பகுதிகளைக் கண்டறிந்து, அங்குள்ள 18 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தலாம். இணை நோய்கள் இல்லாத பெற்றோர்கள் நிச்சயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பள்ளியிலிருந்து மாணவர்கள் வீட்டுக்கு வந்ததும், குளித்த பின்னரே மற்ற வேலைகளில் கவனம் செலுத்தப் பழக்கப்படுத்த வேண்டும்.
Also Read: டெல்டா ப்ளஸ் வைரஸ்: `மூன்றாம் அலை இன்னும் மோசமாக இருக்குமா?' - விளக்கும் மருத்துவர்
வகுப்பறையில் ஒரு பெஞ்சில் ஒருவர் அல்லது இடைவெளி விட்டு இரண்டு மாணவர்கள் மட்டுமே அமரவைக்கப்பட வேண்டும். மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு ரீதியாகத் தொட்டுப் பேசுவதையும், நண்பர்கள் கட்டிப்பிடித்துப் பேசுவதையும், கண், மூக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகளைத் தொடாமல் தவிர்க்கும்படியும் வலியுறுத்த வேண்டும். பள்ளியில் அன்றாடம் பல முறை சானிடைசர் பயன்படுத்த மாணவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவ்வப்போது கை கழுவவும் ஏற்பாடு செய்வதுடன், ஒரே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும், தண்ணீர் குடிக்கவும் செல்வதையும் தவிர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்குத் தவறாமல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் உள்ள மாணவர்களை ஆன்லைன் முறையில் வகுப்புகளைக் கவனிக்க ஊக்கப்படுத்தலாம்.
நேரடி வகுப்பிலோ, ஆன்லைன் வகுப்பிலோ, தினமும் 15 நிமிடங்கள் ஒதுக்கி மாணவர்களுக்குப் புரிந்துகொள்ளும் பக்குவத்துக்கு ஏற்ப சுகாதாரக் கல்வியில் தன் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரம் குறித்து ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவை, இந்த இக்கட்டான சூழலில் பயமின்றியும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் மாணவர்கள் கல்வி பயில உதவியாக அமையும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே இந்தியாவில் கோவிட் தடுப்பூசி போடப்படும் நிலையில், 12 - 18 வயதினருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
என் கணிப்புப்படி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்கான சூழல் உருவாகலாம். அதன் பிறகு குழந்தைகளுக்கு வரக்கூடிய கோவிட் தொற்று குறித்த அச்சங்கள் படிப்படியாகக் குறையும். தொற்றின் வேகம் அதிகமுள்ள பகுதிகளிலும் சூழலைப் பொறுத்து ஆன்லைன் கல்வியை நடைமுறைப்படுத்தலாம். 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள்தான். அதனால், வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் பழக்கப்படுத்தலாம். நேரடி வகுப்புமுறை சரியான முறையில் செல்லும் பட்சத்திலும், தொற்றின் பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்திலும், படிப்படியாக அனைத்து வகுப்பு மாணவர்களையும் நேரடி வகுப்புமுறைக்கு அனுமதிக்கலாம்" என்கிறார் மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.
மாணவர்களின் கல்வி, உடல்நலன் இரண்டுமே முக்கியம். எனவே, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையுடன், மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமை.
source https://www.vikatan.com/government-and-politics/education/doctors-explains-about-precautions-we-should-take-before-send-our-kids-to-schools
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக