உலகின் வேறு எந்த மைதானத்தில் வெற்றி பெற்றாலும், அது லார்ட்ஸ் மைதானத்தில் பெரும் வெற்றிக்கு ஈடாகாது. கிரிக்கெட்டின் புன்னிய பூமியாய் கொண்டாடப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றிருக்கிறது கோலியின் படை.
365 நாட்களிலும், நமக்கான வாய்ப்பு ஒளிந்திருப்பதைப் போல், 360 பந்துகளில், பத்து விக்கெட்களை வீழ்த்தும் பந்துகளும் ஒளிந்திருக்கும் என்று உறுதியாக நம்பிய கோலியின் படை அதை செய்தும் காட்டி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது!
லார்ட்ஸ் டெஸ்ட்டின் கடைசி நாள் சுவாரஸ்யங்கள் என்னென்ன?
ஏமாற்றிய பன்ட்!
மொயின் அலி உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களில் இருந்து, ரசிகர்கள் வரை, இறுதி நாளில், இந்தியா சார்பாக, போட்டியை மாற்றக் கூடிய ஒரே வீரராக, ரிஷப் பன்ட்டை மட்டுமே கணித்திருந்தார்கள். "பன்ட்டுக்கு பதிலடி கொடுக்க, எங்களிடம் புதுப் பந்துடன் ஆண்டர்சன் இருக்கிறார்" என்று போட்டிக்கு முன்பாக மொயின் அலியே செய்தியாளர்களிடம் சொல்லியிருந்தார். ஆனால், "நீங்கள் கணித்தபடி எல்லாம் நடந்தால், எனக்கென்ன மரியாதை?" என டெஸ்ட் கிரிக்கெட், இன்னொரு திருப்பத்தை கொண்டு வந்தது. ஆண்டர்சன் பந்தில் இறங்கி வந்து, கவர் டிரைவ் பவுண்டரி அடித்தவர், அடுத்த ஓவரிலேயே, ராபின்சனுடைய பந்தில், கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பன்ட்டை நம்பி பட்டாசு வெடிக்கக் காத்திருந்த ரசிகர்கள் ஏமாந்துபோனார்கள்.
ஈகோவாய் வந்து விழுந்த பவுன்சர்கள்!
முதல் இன்னிங்சில், ஆண்டர்சனை பும்ரா திணறடித்த, நோ பால்களும், பவுன்சர்களும், ததும்பி வழிந்த அந்த ஓவர் பற்ற வைத்த நெருப்பு, இருபுறமும், இரு நாட்களாக, பற்றி எரிந்து கொண்டுதான் இருந்தது. ஸ்டூவர்ட் பிராட், ட்விட்டர் மூலமாக மறைமுகமாகப் போர் தொடுத்திருந்தார் என்றால், சாம் கரண் உள்ளிட்ட அனைவரிடமுமே அந்த பகையின் வெப்பத்தை, உணர முடிந்தது. பும்ராவை இங்கிலாந்து பெளலர்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்கிற பரபரப்பு தொற்றிகொண்டது. நினைத்தது போலவே, பும்ராவை, மார்க் உட், ஷார்ட் பால்களால் தாக்கினார். கடும் வார்த்தைகள் பிரயோகம், பார்வைகள் பரிமாற்றம் என களத்தில் அனல் தகித்தது. அம்பயர் நடுவில் வந்து, சமாதானப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், இங்கிலாந்து போட்டியின் மொமன்ட்டத்தைத் தவறவிட்ட தருணம் இதுதான். விக்கெட் விழுந்ததால் எதிரணியில் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி, ஆல் அவுட் ஆக்கும் வேலைகளில் இறங்காமல், பகை முடிக்க பவுன்சர்களை ஆயுதமாக எடுத்தவர்களின் கவனம் சிதற, அந்தக் கால அளவே, பும்ரா செட்டில் ஆகப் போதுமானதாக இருந்தது.
சர்ப்ரைஸ் ஷமி!
படைத்தளபதி மட்டுமல்ல, கடைசி சிப்பாய் வரை, பின்வாங்காமல், நின்று போராடுவதை, ஆஸ்திரேலியத் தொடரிலேயே இந்தியா காட்டி இருந்ததுதான். எனினும், அங்கே நடந்ததன், இரண்டாவது பாகத்தை, ஷமியும் - பும்ராவும் லார்ட்ஸில் எழுதினர். ஆரம்பத்தில், 'விக்கெட் விழத்தானே போகிறது?!' என ஆர்வமின்றி பார்க்க வைத்த இந்த பார்ட்னர்ஷிப், சற்றுநேரம் நிலைத்த பின், விக்கெட் விழுந்து விடக்கூடாது என்ற பதற்றத்துடன் பார்க்க வைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து, இந்தியாவை நல்ல முன்னிலைக்கு எடுத்துச் சென்ற பின்னர், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களையே பந்தாடி, ரசிகர்களை, கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு போனது இந்த ஜோடி.
தலையில் கைவைத்து அமர்ந்திருந்த ரசிகர்களை, தலைதூக்க வைத்து, பின் தலைநிமிரச் செய்து, இறுதியாக, ஆனந்தக் கூத்தாட வைத்தது. இருவரது கவர் டிரைவ்கள் எல்லாம், ரசிகர்கள், காலத்துக்கும் நினைவுகூரப் போவதாய் இருந்தன. இந்த 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த வெற்றிக்கான நம்பிக்கையை மனத்தின் ஆழத்தில் இருந்து மொத்தமாக உருவி எடுத்தது. இந்திய இணை ஒன்று, லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுதான். அதிலும் ஷமியின் அரைசதம் வேற லெவல் சாதனை. இங்கிலாந்தில் வைத்து, இங்கிலாந்தின் வேகப் பந்து படை ஏவும் ஏவுகணைகளான, டியூக் பந்துகளை எதிர்கொள்வதே கடினமெனில், டெய்ல் எண்டர்கள், அதுவும் தங்களது இரண்டாவது இன்னிங்சில், எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற நிலையில், அணியை மீட்டெடுத்தது காலம் கடந்தும் நிற்கப்போகும் மாபெரும் சாதனை!
கோலி கணக்கு!
எதிரிக்கு யோசிக்க நாம் தரும் ஒவ்வொரு கணமும், வெற்றியை, நம்மை விட்டு அங்குலம் அங்குலமாக எடுத்துச் செல்லும். இதை கோலி நன்றாகவே உணர்ந்திருந்தார். முதல் செஷன் முடிவிலேயே, டிக்ளேர் செய்வார் என எதிர்பார்க்கப்பட, இரண்டாவது செஷனில், ஒன்பது பந்துகள் வீசப்பட்ட பின்தான் டிக்ளேர் செய்தார் கோலி. இது இந்தியாவுக்கு பௌலிங் செய்யக் கிடைத்திருக்க வேண்டிய ஓவர்களில், 2 - 4 ஓவர்களைக் குறைத்து விட்டதே என விவாதங்களைக் கிளப்பியது. ஆனால், இங்கிலாந்தை ஆற அமர அடுத்த நகர்வு பற்றி யோசிக்க விடாமல் அடிப்பதற்கான கோலியின் ஸ்மார்ட் மூவ்தான் அது. இது இந்தியா என்ன செய்யப் போகிறது என்ற குழப்பத்தையும், பதற்றத்தையும், இங்கிலாந்தின் பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. லார்ட்ஸில் நடந்த ஒரு டெஸ்ட்டில், இந்தியா டிக்ளேர் செய்ததும், இதுவே முதல்முறை.
ஓப்பனர்கள் டக் அவுட்!
சிந்திக்க நேரமே இல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா இங்கிலாந்தை இறங்க வைத்ததன் பலனை, உடனடியாகப் பார்க்க முடிந்தது. ஓப்பனர்கள், பர்ன்ஸ், சிப்லி இருவருமே, ரிங்கில், கடைசி நொடியில் இறக்கி விடப்பட்ட, பயிற்சியற்ற மாணவர்கள் போலவே, பதற்றத்தோடும், நம்பிக்கையற்றும் காணப்பட்டனர். அதன் பலனாக, ஓப்பனர்கள் இருவரையுமே, டக் அவுட்டாக்கி, இந்தியா அனுப்பியது. இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டி ஒன்றில், இங்கிலாந்து ஓப்பனர்கள் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறுவது, இதுவே முதல்முறை. பேட்டிங்கில் இணைந்த ஷமி - பும்ராவின் கரங்கள், பௌலிங்கிலும் தொடர, விளைவு இரு விக்கெட்டுகள்.
டெஸ்டுக்கான இலக்கணம்!
இந்தியா தப்பிப் பிழைக்குமா என தொடங்கிய நாள், இங்கிலாந்தால், டிராவாவது செய்ய முடியுமா என்ற ரீதியில் நகரத் தொடங்கியது. டெஸ்ட் கிரிக்கெட்டின் தனித்தன்மையே அதுதானே?! ஒரு செஷனில் எல்லாமே மாறும்! இரண்டாவது செஷனின் முடிவிலேயே, நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்தது இந்தியா. 2014-ஆம் ஆண்டு, தோனி தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்ற, லார்ட்ஸ் டெஸ்டில், உணவு இடைவேளைக்கு முன்னதாக, மொயின் அலியின் விக்கெட்டை வீழ்த்தி, திருப்புமுனை ஏற்படுத்திய அதே இஷாந்த்தான், தேநீர் இடைவேளைக்கு முன்னதாக, இப்போட்டியில், பேர்ஸ்டோவின் விக்கெட்டின் வாயிலாக, திருப்புமுனை கொடுத்திருந்தார்.
ரூட் க்ளியர்!
முதல் இன்னிங்ஸில், இந்தியாவுக்கு பகிரங்க சவால் விட்டதைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட்டின் விக்கெட்தான், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் வெற்றிப் பயணத்துக்கு, 'ரூட் க்ளியர்' என்று சொல்லி, பச்சைக் கொடி காட்டியது. பும்ராவினால்தான் அதுவும் நிகழ்ந்தது. இந்தியா வென்று விடும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது இதற்குப் பின்னால்தான்.
கோலியின் ஆக்ரோஷம்!
ஆக்ரோஷத்தின் மொத்த உருவம் கோலிதான் என்பது தெரிந்த கதைதான் என்றாலும், இப்போட்டியில், அதன் உச்சக்கட்டத்தை, உணர்ச்சிப் பிழம்பாக கோலி, விழுந்த ஒவ்வொரு விக்கெட்டுக்கும் காட்டினார். அவரிடம் இருந்த அதே ஆக்ரோஷத்தை மற்ற வீரர்களிடமும் பார்க்க முடிந்தது. இந்த வெற்றி, அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை, அதுவே காட்டியது. குறிப்பாக, பந்து பவுண்டரிக்குப் போனாலே சிரித்துக் கொண்டே சென்று விடும், பும்ராவின் பார்க்கப்படாத பக்கங்களை, இப்போட்டி வெளிக்கொண்டு வந்தது. வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும் என்றாலும், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்களது ஸ்லெட்ஜிங், கேலிகள் எல்லாமே இந்திய வீரர்களை இன்னும் வெறியேற்றியது. வெற்றிக்காக களத்தில் என்னவும் செய்யத் தயாராக இருந்தார்கள்.
கேட்ச் டிராப்!
விடப்படும் ஒவ்வொரு கேட்சும், வெற்றியின் விழுக்காட்டை பன்மடங்கு குறைத்து விடும் என்பது தெரிந்த கதைதான். ஆனாலும், அதே தவறைத்தான் தவறின்றிச் செய்தது, இந்திய அணியும். ரோஹித், தொடக்கத்திலேயே ஒரு கேட்சை தவற விட, கோலியும் தன் பங்குக்கு, பட்லர் தந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். அது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை தள்ளிப் போடச் செய்யக் காரணமாக இருந்தது.
சிராஜ் ராஜ்யம்!
இந்திய ரெட் பால் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆளுமையாக உருவெடுத்து வரும் சிராஜ், இரட்டைத் தாக்குதலுக்கான இலக்கணக் குறிப்புகளை எழுதி வருகிறார். மொயின் அலி, சாம் கரண் ஆகிய இரண்டு விக்கெட்டுகளை நடுவில் வீழ்த்தி, போட்டியை இந்தியாவின் போக்கில் நகர வைத்த அவர்தான், இறுதியாக எஞ்சியிருந்த பட்லர் மற்றும் ஆண்டர்சனின் விக்கெட்டுகளை விழச் செய்து, வெற்றியை உறுதி செய்தார். ஆண்டர்சனின் ஸ்டம்ப் சிதறிய அந்த நொடி, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும், மெய் சிலிர்க்க வைத்த தருணம்.
கோலியின் வேகப்பந்து வீச்சுப் படை!
கோலிக்கு தன் வேகப் பந்து வீச்சுப் படையின் மீதான அளவில்லாத நம்பிக்கைதான், அவரை 4:1 என்ற பெளலிங் காம்பினேஷனோடு களமிறங்க செய்தது. அவர் வைத்த நம்பிக்கை பொய்க்காதவாறு, ஜடேஜாவுக்கு கூட மிச்சம் வைக்காது, 20 விக்கெட்டுகளையும் தாங்களே கபளீகரம் செய்துள்ளனர் வேகப்பந்து வீச்சாளர்கள். சிராஜ் ஒட்டு மொத்தமாக, 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டி இருந்தாலும், மற்ற பௌலர்களிடமும் அதே உந்தமும், உத்வேகமும் காணப்பட்டது. அதுதான், வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவளிக்காத ஒரு பிட்சில் கூட, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை, சாதிக்க வைத்துள்ளது.
வலிமையான டெஸ்ட் அணி!
விடக் கூடாதென்ற வெற்றி வேட்கை, நம்பிக்கை, இறுதிவரை போராடிப் பார்த்து விடுவோம் என்ற மன உறுதி, இவை எல்லாம் இந்திய அணியை வலிமைமிக்க அணியாகக் கட்டமைத்துள்ளது. கோலி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கே புது பரிமாணத்தை கொடுத்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும்.
"இந்தியாவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது" என சொந்த மண்ணில் தொடரை இழந்ததும் சொல்லியிருந்தார் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். அதை மறுபடியும் நிரூபித்துள்ளது இந்தியப் படை. சாதாரண வெற்றி அல்ல, 151 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி இது. இதன் மூலம், இந்தியா 1-0 என தொடரில் முன்னணி பெற்றது சிறப்புதான் என்றாலும், இது அவர்களது நம்பிக்கையை, பல மடங்கு அதிகமாக்கி உள்ளதென்பதும், தொடர் வெற்றிக்கான வித்தை, அது விதைத்துள்ளது என்பதும்தான் இதில் மிக முக்கியமானது.
பீஸ்ட் மோடுக்கு மாறிய இந்தியா, ஸ்லெட்ஜிங் முதலிய சீண்டல்களுக்கு, சரியான பதிலடியாய், லார்ட்ஸ் சரித்திரத்தில், தங்கள் பெயரைப் பதிவேற்றியுள்ளது. இனிவரும் போட்டிகள், இன்னமும் ஆக்ரோஷம் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
source https://sports.vikatan.com/cricket/india-won-the-lords-test-because-of-english-players-ego
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக