Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

கொடநாடு காட்சிமுனை: அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள்; கண்டுகொள்ளாத வனத்துறை!

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், வனத்துறை என அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் செயல்பட்டுவருகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத்துறைக்கு இரண்டாவது ஆண்டாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொடநாடு காட்சிமுனையில் அத்துமீறி நுழைந்த சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சுற்றுலா நோக்கில் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றனர். இதையும் மீறி ஒவ்வொரு நாளும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டியை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா போன்ற சுற்றுலாத்தலங்களில் அரசின் உத்தரவைக் கடைப்பிடித்து பயணிகளுக்கு அனுமதி மறுத்துவருகின்றனர். ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்களில் அரசு உத்தரைவை மீறி, பயணிகளை அனுமதிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடநாடு காட்சிமுனைக்கு மாலை வேளையில் சாரல் மழையுடன் பயணித்தோம்.

கொடநாடு காட்சிமுனையில் அத்துமீறி நுழைந்த சுற்றுலாப் பயணிகள்

Also Read: சுற்றுலா தடையால் ரூ.35,000 கோடி வருமானம் இழப்பு - வாழ்விழந்த மக்கள், தள்ளாடும் கேரள பொருளாதாரம்!

கொடநாடு காட்சிமுனைக்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்பே சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான கார்களை நிறுத்தி தேயிலைத் தோட்டங்களையும் பள்ளத்தாக்குகளையும் மொபைலில் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். காட்சிமுனை நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறையின் கேட்டின் முன்பு நிறுத்தி உள்ளே அனுமதிக்குமாறு வாக்குவாதம் செய்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் விவரத்தைச் சொல்லி உள்ளே சென்றோம். ஆர்மி என்று எழுதப்பட்டிருந்த இரண்டு மூன்று சொகுசு கார்களைக் கடந்து காட்சிமுனைக்குச் சென்றோம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக உலவிக்கொண்டிருந்தனர்.

தடையை மீறி இவர்களை அனுமதித்தது எப்படி என வனத்துறையினரிடம் கேட்டோம். ``ஆர்மி, போலீஸ், அரசியல்வாதி என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உள்ளே அனுமதிக்கக் கேட்டு சண்டையிடுகிறார்கள். `அனுமதிக்கவில்லையென்றால் அதிகாரிகளிடம் கூறுவோம்’ என்கிறார்கள். வேறு வழியில்லாமல் அனுமதிக்கிறோம்" என்றார்.

கொடநாடு காட்சிமுனையில் அத்துமீறி நுழைந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த அத்துமீறல் குறித்து கொடநாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ``பல மாசமா டூரிஸ்ட் இல்லாததால வியூபாய்ன்ட் ஏரியாவுல கரடி, சிறுத்தை நடமாட்டம் அதிகமா இருக்கு. இது தெரியாம டூரிஸ்ட்டுங்க உள்ளே போறாங்க‌‌. அதுமட்டுமில்லாம தேவையில்லாத வேலையெல்லாம் செய்யறாங்க. அரசு உத்தரவு கொடுக்கும் வரை கட்டுப்பாடா இருந்தா நல்லது" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tourists-illegally-entered-into-kodanad-viewpoint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக