Ad

சனி, 21 ஆகஸ்ட், 2021

ஆப்கன்: `150 இந்தியர்களைக் கடத்தி வைத்திருக்கிறார்களா?' - தாலிபன்களின் பதில் என்ன?!

20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபன்களின் வசம் சென்றிருக்கிறது ஆப்கானிஸ்தான். இதனால் வெளிநாட்டவர்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆப்கனிலிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணிகளைச் செய்து வருகின்றன.

தாலிபன்கள்
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் அருகே காத்துக் கொண்டிருந்த இந்தியர்களைத் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. காபூலில் இயங்கி வரும் `காபூல் நவ்' என்ற செய்தித் தளம் இது குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.

அந்தச் செய்தியில், ``ஆகஸ்ட் 21-ம் தேதியன்று காபூல் விமான நிலையம் அருகே காத்துக்கொண்டிருந்த 150-க்கும் மேற்பட்டோரை தாலிபன் அமைப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று கடத்திச் சென்றிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் கிடைத்திருக்கின்றன. நள்ளிரவு 1 மணியளவில், 8 மினி வேன்களில் வந்தவர்கள் 150-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்றிருக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அவர்களை விமான நிலையத்துக்குள் வேறு வழியாக அழைத்துச் செல்வதாக தாலிபன்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், எங்கு சென்றனர் என்பதற்கான சரியான தகவல்கள் இல்லை'' என்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

இந்தச் செய்தி வெளியான சில மணி நேரத்தில் இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறது தாலிபன் அமைப்பு. ``காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்தவர்களைக் கடத்தவில்லை'' என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா வாசிக் தெரிவித்திருக்கிறார்.

காபூல் விமான நிலையம்

Also Read: `முல்லா பராதர் டு சிராஜுதீன் ஹக்கானி வரை' - ஆப்கனை ஆளப்போகும் தாலிபன் தலைவர்களின் பின்னணி?!

இதற்கிடையில் இன்று காலை, இந்திய விமானப் படையின் விமானம் ஒன்று, ஆப்கானிஸ்தானிலிருந்து 85 இந்தியர்களுடன் புறப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/international/is-150-indians-abducted-by-taliban-in-afghanistan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக