Ad

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

`தந்தையின் நினைவு நாளுக்காக சேமித்த பணம்..!’ - சுதந்திர தின விழாவில் மாணவியை பாராட்டிய ஆட்சியர்

தஞ்சாவூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தந்தையின் நினைவு நாளுக்காக சேமித்து வைத்த உண்டியல் பணம் ரூ 8,300 கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய மாணவியை கலெக்டர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கொரோனா நேரத்திலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 209 பேர் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டதும் குறிப்பிடதக்கது.

பள்ளி மாணவியை பாராட்டும் கலெக்டர்

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக் கொடியை ஏற்றி போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஏற்றுக் கொண்டார். இதில் தஞ்சாவூர் சரக டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா காந்தபுனேனி, கூடுதல் ஆட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் விவசாயிகளை பாராட்டி இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து கொரோனா காலத்திலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 209 பேருக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ்கள் வழங்கினார்.பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. இவரது கணவர் திருநீலகண்டன்.இவர்களது ஒரே மகள் சாம்பவி தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.திருநீலகண்டன் நான்கு ஆண்டுளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து விட்டார். இதையடுத்து தனக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பாக்கியலெட்சுமி விவசாயம் செய்து வருகிறார்.மேலும் பல்வேறு சமூக செயல்களையும் செய்து வருகிறார்.

மாணவி சாம்பவி

இந்நிலையில் சாம்பவி தான் சேர்த்து வைக்கும் உண்டியல் பணத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் தனது தந்தையின் நினைவு நாளில் ஆதரவற்ற முதியோர்கள் வசிக்கும் இல்லத்திற்கு சென்று உணவளித்து உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதே போல் இந்த ஆண்டும் நினைவு நாளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதற்காக ரூ. 8,300 பணம் சேமித்து வைத்திருந்தார்.இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் உள்ளிட்ட பலரிடம் நிவாரணம் வழங்குமாறு அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சாம்பவி தான் சேமித்து வைத்த பணம் ரூ 8,300 கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த தன் அம்மா பாக்கியலெட்சுமியுடன் வந்து தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் அப்போது வழங்கினார். தந்தையின் நினைவு நாளுக்காக சேர்த்து வைத்த பணம் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியதை அறிந்து நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர் அப்போதே பெரிதும் பாராட்டி வாழ்த்தினார். சுதந்திர தின விழாவிலும் மாணவி சாம்பவியின் செயலை பாராட்டி சான்றிதழ் கொடுத்து வாழ்த்தினார்.

விவசாயியை வாழ்த்திய கலெக்டர்

அதே போல், தஞ்சாவூர் அருகே வல்லம்புதூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் என்பவர் குருவாடிப்பட்டி மக்களுக்கு தேவையான அரசின் அனைத்து உதவிகளை தாமாக முன்வந்து செய்து கொடுத்து வந்தார். இதற்காக அந்த கிராம மக்கள் தங்கள் ஏற்பாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் விஏஓவின் பிறந்தநாளை கேக் வெட்டி வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்த செயல் சமூக வலைதளங்கலில் பெரும் பாராட்டை பெற்றது. இவருடைய சேவையை பாராட்டியும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Also Read: கேரளாவில் சுதந்திர தினம்: தலைகீழாக தேசியக்கொடி ஏற்றிய பாஜக தலைவர்; தேசியக் கொடியை அவமதித்த சிபிஎம்?

தஞ்சாவூர் டி.பி.எஸ் நகரை சேர்ந்தவர் பிராங்கிளின். இசை கலைஞரான இவர் அரசு அமைத்திருந்த கொரோனா சிகிச்சை மையங்களுக்கு சென்று கொரோனா பாதித்தவர்களின் மன இறுக்கம் போக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பாட்டு, நடனம் என பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை மறந்து உற்சாகமடைந்துடன் அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கும் பெரும் உதவியாக இருந்தது. கிட்டதட்ட 14 வாரங்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது பலராலும் பாராட்டப்பெற்றது. இந்நிலையில் அவருக்கும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். இதே போல் மொத்தம் 209 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/tamilnadu/collector-appreciated-student-for-her-help-during-civid-situations

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக