Ad

சனி, 14 ஆகஸ்ட், 2021

''காங். தலைவர்களுக்கும் மக்களுக்கும் நிறைய இடைவெளி உள்ளது!'' - ஒப்புக்கொள்கிறார் செல்வப் பெருந்தகை

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், யார், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார்கள் என்ற பரபர வாதம் வலுத்துவருகிறது. இந்தநிலையில், 'காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கும்' என்று செய்திகள் பரபரக்கவே... தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்தேன்....

''கடந்த சட்டமன்றத் தேர்தலில், கூட்டணியோடு ஏற்பட்ட மனக் காயத்தினால்தான், உள்ளாட்சித் தேர்தலை தனித்து எதிர்கொள்ள தயாராகிவிட்டீர்களோ?''

ராகுல் காந்தி

''உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போகிறது என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. பத்திரிகைகள்தான் செய்தியை திரித்துப் போட்டுவிட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், 'எண்ணிக்கை முக்கியம் இல்லை; எண்ணம்தான் முக்கியம்' என்பதில் ராகுல்காந்தி தெளிவாக இருந்தார். அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதே, 'தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க ஆட்சி அமையவேண்டும்' என்று ஏற்கெனவே தான் கொடுத்திருந்த சத்தியத்தை நிறைவேற்றியிருக்கிறார் ராகுல்காந்தி. எனவே, எங்களுக்குள் எண்ணிக்கைப் பிரச்னையும் இல்லை; எந்த மனக் காயமும் இல்லை!''

''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சீட் ஒதுக்கீடு விஷயமாக கட்சித் தலைவர்களே வெளிப்படையாக கட்சி மீது குற்றம் சாட்டினர். ஆனால், இதுவும்கூட 'உள்கட்சி ஜனநாயகத்தின் ஒரு பகுதி'தான் என்றாரே கே.எஸ்.அழகிரி?''

''உள்கட்சி ஜனநாயகம் என்பது கட்சிக்கு உள்ளேதான் பேசவேண்டும். பொதுவெளியில் எப்படிப் பேசலாம்? இப்படிப் பேசுவதென்பதே ஒரு வியாதிதானே! என் குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை நான் என் குடும்பத்தினரோடு அமர்ந்துதானே பேசவேண்டும். எனவே, கட்சித் தலைவரிடம்தான் மனக்குறையை சொல்லவேண்டும்!''

கே.எஸ்.அழகிரி

''தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விரைவில் மாற்றப்படவிருக்கிறார் என்று காங். தலைவர்களே பேச ஆரம்பித்திருக்கின்றனரே?''

''மாற்றம் ஒன்றே மாறாதது... எனவே மாற்றம் வந்துதான் ஆகும். கட்சியிலும் தலைவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எதுவென்றாலும் ராகுல்காந்திதான் முடிவு செய்யவேண்டும்!''

''2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை எதிர்கொள்ள மம்தா பானர்ஜியிடம் இருக்கும் ஆர்வம்கூட ராகுல்காந்தியிடம் இருப்பதாகத் தெரியவில்லையே?''

''தேர்தலைப் பொறுத்தவரையில், வெற்றியைத் தீர்மானிக்கப்போகிறவர்கள் மக்கள்தான்! அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் 'ஒரு முகம்; ஒரு குரல்' ஆக இருப்பவர் ராகுல்காந்திதான். இப்போதும்கூட, ராகுல்காந்தி என்ற ஒரு தலைவர் மட்டுமே மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறார், கேள்வி கேட்கிறார், நாடு முழுக்க சுற்றிவருகிறார்! எனவே, மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்.''

காவிரி ஆறு

''கர்நாடகாவில், 'மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம்' என்று சொல்வதும், தமிழ்நாட்டிலோ 'அணையைக் கட்டவே கூடாது' என்று சொல்வதும்தான் மக்கள் பக்கம் நிற்பதா?''

''இது கொள்கை கோட்பாடோடு சம்பந்தப்பட்டது கிடையாது. கர்நாடகாவின் ஜீவாதாரத்துக்காக அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள், போராடுகிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கான கட்சி. எனவே டெல்டா விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் போராடுகிறோம்.

'கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர் இப்படி சொல்லிவிட்டார். அதனால், அவருக்காக நாம் விட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது பரிசீலனை செய்யவேண்டும்' என்றெல்லாம் நாங்கள் செயல்படமுடியாது. எங்கள் மாநில ஜீவாதார உரிமையை நாங்கள் எப்படி விட்டுத்தர முடியும்?

சென்னை மக்களின் தாகம் தீர்க்க வீராணம் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போது கடலூர் மாவட்ட மக்கள், 'சென்னைக்கு தண்ணீரைக் கொண்டுசென்றுவிட்டால், நாங்கள் என்ன பண்ணுவது...' என்று அவர்களது உரிமையை கேள்வியாக்கி போராடினார்கள்தான். ஆக, மாவட்ட அளவிலேயே மக்கள் போராடும்போது மாநில அளவில் போராட்டங்கள் நடைபெறத்தான் செய்யும்!''

''கர்நாடகாவில் ஆதரவு, தமிழ்நாட்டில் எதிர்ப்பு என்ற காங்கிரஸ் கட்சியின் அரசியலைத்தான் தற்போது பா.ஜ.க-வும் செய்துவருகிறது. எனில், இதைமட்டும் எப்படி நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?''

''இப்போது மத்தியிலும் கர்நாடகாவிலும் ஆளுங்கட்சியாக இருப்பது பா.ஜ.க-தான். ஆக, தமிழ்நாட்டு பா.ஜ.க., ஆளுங்கட்சியாக இருக்கும் தங்கள் கட்சியினரிடம் நேரிடையாகப் பேசி இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டியதுதானே? காமராஜர் முதல்வராக இருந்தபோது, கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பாவிடம் தொலைபேசியில் பேசி, காவிரியில் தண்ணீரை வரவழைத்தாரே... அதுபோல் ஆக்கபூர்வமாக செயல்படாமல், தமிழக பா.ஜ.க-வினர் ஏன் இப்போது உண்ணாவிரத நாடகம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்?

கடந்தகாலத்தில், 'காங்கிரஸ் கட்சி செய்யவில்லை' என்று எங்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க-வினர், நாங்கள் செய்யாததையெல்லாம் செய்துகாட்ட வேண்டியதுதானே... யார் தடுத்தார்கள்?''

ராஜீவ் காந்தி

''ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை, 'தயான் சந்த் கேல் ரத்னா விருது' என பெயர் மாற்றி அறிவித்திருக்கிறதே மத்திய பா.ஜ.க அரசு?''

''பெகாசஸ் செயலி மூலம், தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் மத்திய பா.ஜ.க அரசு உளவு பார்த்தது குறித்து, 'உள்துறை அமைச்சரும் பிரதமரும் விளக்கம் அளிக்க வேண்டும்' எனக்கோரி போராட்டம் நடைபெறுவதால், நாடாளுமன்றமே முடங்கிக்கிடக்கிறது. இதனால் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டுள்ள உச்சகட்ட வெறுப்பின் காரணமாகவே 'ராஜீவ்காந்தி'யின் பெயரை எடுத்திருக்கிறார்கள். ஆனால், 'மக்கள் விரும்பியதால்தான் இந்தப் பெயர் மாற்றம்' என்று மத்திய அரசு சொல்கிறது. அப்படியென்றால், புதிதாக ஒரு பெயரில் விருதை அறிவிக்கவேண்டியதுதானே... ஏற்கெனவே இருந்துவருகின்ற தலைவரது பெயரை ஏன் மாற்ற வேண்டும்?

மோடி, அருண்ஜெட்லி பெயர்களில்கூட நாட்டில் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் கவாஸ்கர், கபில்தேவ் பெயர்களுக்கு ஏன் மாற்றம் செய்யவில்லை? அவ்வளவு ஏன்.... 'பெட்ரோல் - டீசல், எரிவாயு விலையைக் குறையுங்கள்' என்று நாட்டுமக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால், அதையெல்லாம் செய்யாமல், விலையை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டுதானே இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு!''

''பெகாசஸ் பிரச்னையில், நாங்கள் உளவு பார்க்கவில்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது எனும்போது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம்தான் என்ன?''

''அப்படியென்றால், 'பெகாசஸ் என்ற மென்பொருளை இந்திய அரசு வாங்கவேயில்லை' என்று பிரதமரே நேரிடையாக செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்கவேண்டியதுதானே? ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூட தயங்குகிறதே... இதையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு செய்திருந்தால், இப்படி வாரக்கணக்கில் நாடாளுமன்றம் முடங்கிக்கிடக்கும் சூழலே ஏற்பட்டிருக்காதே!''

பெகாசஸ்

''காங்கிரஸ் கட்சியில், தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி இன்னும் ஏற்காதது கட்சியிலுள்ள இரண்டாம்கட்டத் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதுதானே?''

''கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் தங்கள் அதிருப்தியை கட்சிக்கு உள்ளேதான் பேசவேண்டும். மாறாக பொதுவெளியில் போய் பேசும்போதுதான் தேவையற்ற சங்கடங்கள் உருவாகின்றன.

கட்சியில் யார் யாரோ செய்த தவறுகளால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைய நேரிட்டது. ஆனாலும் அனைவரது தவறுகளையும் தன் மீது சுமந்துகொண்டு, தார்மீக அடிப்படையில் தலைவர் பதவியிலிருந்து விலகி தன்னையே பலிகொடுத்துக்கொண்டார் அல்லது தியாகம் செய்துள்ளார் ராகுல்காந்தி!''

''கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையே கட்டுப்படுத்த முடியாத ராகுல்காந்தி, 2024 தேர்தலில் மக்களை எப்படி கவர்ந்திழுத்து வெற்றி பெற முடியும் என்று நம்புகிறீர்கள்?''

ராகுல்காந்தி

''இல்லையில்லை... காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையேதான் நிறைய இடைவெளி இருக்கிறது. ஆனால், ராகுல்காந்திக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி என்பதே இல்லை. நாட்டு மக்கள் அனைவரும் ராகுல்காந்தியை உளமாற நேசிக்கின்றனர்! எனவே, காங்கிரஸுக்கான வெற்றி என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டது.

கட்சியிலுள்ள எங்களைப் போன்ற தொண்டர்கள், ராகுல்காந்தியின் உழைப்பை மதிக்கிறோம்... அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறோம். இதேபோல், இரண்டாம் கட்டத் தலைவர்களும் செயல்படுவார்களேயானால், கட்சி இன்னும் வேகமாக எழுச்சிபெறும் என்றுதான் நான் சொல்லவருகிறேன்!''



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-congress-there-is-a-lot-of-space-between-leaders-and-people-says-selva-perunthagai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக