Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

`இதை வாங்க அதிகாரம் இல்லை!' - தமிழக அரசின் கடனை அடைக்க செக் கொடுத்த நபர்; திருப்பி அனுப்பிய ஆட்சியர்

தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, 'ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ. 2,63,976 கடன் இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்த நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த 'யோகா' ரமேஷ் என்பவர், அந்த தொகைக்குரிய செக்கை, நாமக்கல் ஆர்.டி.ஓவிடம் கொடுக்க முயற்சித்தது, வைரலானது. இந்த நிலையில், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங்கை சந்தித்து, அந்த செக்கை கொடுக்க முயல, 'இதை வாங்கும் அதிகாரம் எனக்கில்லை' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், 'முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த செக்கை அனுப்ப இருக்கிறேன்' என்று 'யோகா' ரமேஷ் அனுப்ப இருப்பதாக சொல்ல, விவகாரம் நான்ஸ்டாப்பாக தொடர்கிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் 'யோகா' ரமேஷ்

Also Read: திருச்சி உலா: ஒரே பாறையில் அமைந்த கோட்டை; மதநல்லினக்க தலங்கள்... நாமக்கல் கோட்டையின் கம்பீர வரலாறு!

நாமக்கல் மாவட்டம், மேற்கு பாலப்பட்டியைச் சேர்ந்தவர் 'யோகா' ரமேஷ். யோகா மாஸ்டரான இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, 'ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ. 2,63,976 கடன் இருக்கிறது' என்று தெரிவித்தார். இந்த நிலையில், 'என் குடும்பத்தின் தலையை அடமானமாக வைத்து, தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்குரிய தொகையை நான் கொடுக்கிறேன். ஆனால், அந்த கடனுக்குரிய வரவு செலவு கணக்கு டீடெயிலை எனக்கு கொடுக்கணும்' என்று நாமக்கல் ஆர்.டி.ஓ கோட்டைக்குமாரிடம் ரூ. 2,63,976 க்கான செக்கை வழங்கினார்.

செக்கோடு 'யோகா' ரமேஷ்

அதைக்கண்டு ஜெர்க்கான ஆர்.டி.ஓ பதறிபோய், 'இதை வாங்கும் அதிகாரம் எனக்கு இல்லை' என்று கூறி, அவரை அனுப்பி வைத்தார். கையோடு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்திக்கச் சென்றார். ஆனால், அவரது உதவியாளர், மேடம் பிஸியாக இருக்காங்க' என்று கூறினார். இந்த விவகாரம், சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், விடாக்கண்டனாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்தித்த 'யோகா' ரமேஷ், அந்த செக்கை கொடுக்க, 'இதை வாங்கும் அதிகாரம் எனக்கு இல்லை' என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து, 'யோகா' ரமேஷிடம் பேசினோம். "ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போதும், 'இவ்வளவு லட்சம் தனிநபர் கடன் வாங்குறோம், அவ்வளவு லட்சம் தனிநபர் கடன் இருக்கு'னு சொல்றாங்க. ஆனா, எதுக்காக வாங்குறாங்க, என்ன விசயத்துக்காக செலவு பண்ணினாங்கனு பொதுமக்களுக்கு விவரம் தெரிவிப்பதில்லை. ஒருபக்கம், நம்ம தலையை வச்சு கடன் வாங்கும் அரசு இயந்திரத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திடீர்னு கோடீஸ்வரர்களாக ஆவுறாங்க. ஆனால், நாம இன்னும் ஏழையாகுறோம். தனிப்பட்ட முறையிலும், அரசாங்கம் வாயிலாகவும் கடன்காரங்களாக ஆகுறோம். அதனால்தான், என் தலையை அடமானம் வச்சு, அரசு வாங்கிய கடனை அடைக்க இந்த செக்கை கொடுத்தேன். நாமக்கல் ஆர்.டி.ஓ கோட்டைக்குமாரிடம் கொடுத்தேன். 'எனக்கு இதை வாங்கும் அதிகாரம் இல்லை'னு சொல்லி, என்னை வெளியே அனுப்பிட்டார்.

'யோகா' ரமேஷ்

அதனால், கலெக்டரை பார்க்கப் போனேன். 'மேடம் பிஸி'னாங்க. இரண்டாவது நாளும் போனேன். ஆனால், விடாமல் 16 - ஆம் தேதியும் ஆட்சியரை சந்தித்து, செக்கை கொடுத்தேன். 'எனக்கு இதை வாங்கும் அதிகாரம் இல்லை'னு சொல்லிட்டாங்க. அதனால், நேரடியாக முதல்வருக்கு கடிதம் எழுதி, அவருக்கு இந்த செக்கை அனுப்ப இருக்கிறேன். அதோடு, 'எங்க குடும்பத்தின் பேரில் அரசு வாங்கிய கடனுக்கான வரவு செலவை கொடுக்கணும்னு கோரிக்கை வைக்க இருக்கிறேன். அதோடு, இந்த செக்கை ஆட்சியரும், ஆர்.டி.ஓவும் வாங்க மறுத்ததையும் அந்த கடிதத்தில் குறிப்பிட இருக்கிறேன். அப்பாவி மக்களை வைத்து அரசுகள் லட்சங்களில் நடத்தும் விசயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வரை, இந்த செக் அனுப்பும் மேளாவை தொடர்வேன்" என்றார்!

Also Read: வெள்ளை அறிக்கை உணர்த்தும் உண்மைகள்!



source https://www.vikatan.com/news/controversy/namakkal-social-activist-give-cheque-to-collector

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக