நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க தான் வென்றது. சில தொகுதிகளில் வெற்றியை நெருங்கி வந்தாலும், தி.மு.க ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை. கோவையில் தி.மு.க-வுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிடினும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவதாக பல புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
Also Read: `25 ஆண்டுகளாகத் தொடரும் சோகம்!' - கோவை மாவட்டத்தில் தி.மு.க படுதோல்விக்குக் காரணம் என்ன?
முக்கியமாக, அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கிவைப்பது, அரசு ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் அமைச்சருக்கு இணையாக அமர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது என புகார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
கொரோனா தடுப்பூசி டோக்கன் விநியோகம் முதல் அரசுப்பணிகள் வரை தி.மு.க-வினர் அட்ராசிட்டி செய்வதாக அ.தி.மு.க-வினர் மற்றும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகையை தி.மு.க-வினர் கட்சி அலுவலகமாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி அ.தி.மு.க மற்றும் பொதுமக்கள் கூறுகையில், “கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் வரதராஜன் சமீபத்தில் பதவியேற்றார். அதன்பிறகு சில வாரங்களிலேயே கட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்காக விருந்தினர் மாளிகையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
அவரது கட்சிப் பணிக்காக ஒரு பெண்ணையும் பணியமர்த்தியுள்ளனர். அங்கு எப்போதும் தி.மு.க கரைவேட்டியே தென்படுகிறது. ஆரம்பத்தில் வரதராஜன் அவரது இல்லத்தில்தான், தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வந்தார். தனிப்பட்டரீதியாக அவருக்கு அதில் அசௌகரியம் இருந்துள்ளது. உடனடியாக அரசு விருந்தினர் இல்லத்துக்கு வந்துவிட்டார்.
கட்சி சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் இங்குதான் நடக்கிறது. இத்தனைக்கும் பொள்ளாச்சி நகர தி.மு.க-வினருக்கு தனி அலுவலகம் உள்ளது. அப்படி இருக்கும்போது, அரசு இயந்திரத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாமல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அத்துமீறி வருகின்றனர்.
இந்த விஷயம் வெளியில் தீவிரமாக பேசப்பட்டவுடன், வரதராஜன் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரத்திடம் ஒரு கடிதத்தை வாங்கி, அதனடிப்படையில் எம்.பி அலுவலகம் சம்பந்தப்பட்ட பணிகளை செய்வதாக கூறுகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்காக எம்.பி டெல்லி சென்றுவிட்டார். அவரே இல்லாமல் இங்கு என்ன பணி நடக்கும்?.
தவிர எம்.பி சம்பந்தப்பட்ட பணியாக இருந்தால் பொதுமக்கள் வரவேண்டுமல்லவா..? அங்கு ஒரு பொதுமக்கள் கூட வருவதில்லை. தி.மு.க கரைவேட்டிகள் மட்டுமே வந்து செல்கின்றனர். இதுபோன்ற அத்துமீறல்களுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்றனர்.
வரதராஜன் செயல்பாடுகளில் அ.தி.மு.க-வினர் மட்டுமல்ல.. தி.மு.க.-வினரும் அதிருப்தியில் உள்ளனர். “சமீபத்தில் கருணாநிதி நினைவு நாளின்போது வரதராஜன் பொள்ளாச்சியிலேயே இல்லை. தனது ஆதரவாளர்களுடன் வால்பாறை சென்றுவிட்டார். அங்கும் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி சுற்றிப் பார்த்து கறி விருந்து நடத்தியுள்ளனர். வரதராஜன் கலந்து கொண்ட கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி அழைப்பிதழில், அவரது நினைவு நாள் ஆகஸ்ட் 7-க்கு பதிலாக ஜூலை 7 என்று அச்சிட்டனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் தங்களுக்கு தெரியாமல் எந்தப் பணியும் நடக்கக் கூடாது என அதிகாரிகளை தி.மு.க பிரமுகர்கள் மிரட்டியுள்ளனர். டாஸ்மாக் தொடங்கி அனைத்திலும் கல்லா கட்டுவதில்தான் குறியாக உள்ளனர். இது தொடர்ந்தால் அடுத்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற முடியாது” என்கின்றனர் சில உடன்பிறப்புகள்.
Also Read: `விடியலைக் கொடுத்திருக்கிறோம் - திமுக; விடியல் காணாமல்போய்விட்டது - அதிமுக!' - ஓர் அலசல்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தண்டபாணி கூறுகையில், “இவர்கள் ஆளுங்கட்சி. பொதுமக்களிடம் மனு வாங்க எம்.பி எங்களிடம் கோரிக்கை வைத்தார்” என்றவரிடம், “அங்கு பொது மக்கள் வருவதேயில்லை. தி.மு.க.வினர் தான் இருக்கின்றனர்..” எனக் கேட்டோம், “எம்.பி அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் இருக்கின்றனர்.
எம்.பி-யும் கட்சிக்கார் தானே..? அதனால், அலுவலகத்தில் இருப்பவர்களை வழிநடத்த கட்சிக்காரர்கள் வருகின்றனர். எம்.பி கேட்டதால் கொடுத்துள்ளோம். மூன்று நாளுக்கு ஒருமுறை எம்.பி-யிடம் வரும் கோரிக்கை அடிப்படையில் அதை நீட்டிப்பு செய்துள்ளோம்” என்றார்.
Also Read: காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதற்கு முன்பு நடந்த சம்பவம்! - கோவை அன்னூர் வழக்கில் திருப்பம்
இதுகுறித்து கோவை புறநகர் தெற்கு தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜனிடம் விளக்கம் கேட்டபோது, “தனிப்பட்ட ரீதியாக என் பெயரிலோ வேறு யாரின் பெயரிலோ பயன்படுத்தவில்லை.
எம்.பி பெயரில் தான் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த வாரத்துக்குள் அங்கிருந்து மாற்றிவிடுவோம்” என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/pollachi-government-guest-house-controversy-over-dmk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக