தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலைப் பொருட்கள், தமிழகம் முழுக்க சர்வ சாதாரணமாகப் புழங்குவதை சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். அதனையடுத்து தமிழகம் முழுக்க தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக போலீஸார் சோதனையில் இறங்கி அதிரடித்து வருகின்றனர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் அதிகமாக இருக்கும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு, கர்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் பெங்களூருவில் இருந்து, ஈரோட்டிற்கு குட்காவை கடத்தி வரும் நெட்வொர்க் ஒன்று போலீஸில் வசமாய்ச் சிக்கியுள்ளது.
குடியரசு தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி காலை, ஈரோட்டின் முக்கியப் பகுதியாக ‘கொங்காலம்மன் கோயில் வீதி’யில், ஈரோடு டவுன் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் பார்சல் மூட்டையுடன் வந்த ஒருவரை பிடித்து போலீஸார் சோதனை செய்துள்ளனர். ‘என்ன பார்சல்?’ என போலீஸார் கேட்க, அந்த இளைஞருக்கு பதற்றத்தில் வியர்த்துக் கொட்டியிருக்கிறது. போலீஸாருக்கு குட்கா வாசனை எட்ட, பார்சலை பிரிக்கச் சொல்லியிருக்கின்றனர். பார்சலின் உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் பாக்கெட் பாக்கெட்டாக இருந்திருக்கிறது. அதனையடுத்து குட்கா கொண்டு வந்த ஜிதேந்தர் குமார் என்ற அந்த வாலிபரை போலீஸார் கைது செய்து, துருவியெடுத்திருக்கின்றனர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் உள்ள கூரியர் அலுவலகத்தில் இருந்து இந்த பார்சல் எடுத்து வரப்பட்டது தெரிய வந்திருக்கிறது. அங்கிருந்து நூல் பிடித்து யார் யாருக்கெல்லாம் குட்கா, புகையிலைப் பொருட்கள் சப்ளை ஆகியுள்ளது என போலீஸார் விசாரித்துள்ளனர். அதில் ஈரோடு மணிக்கூண்டு சொக்கநாத வீதியைச் சேர்ந்த பிரகலாத் பட்டேல் (22), ஈரோடு ராமசாமி லைன் இரண்டாவது வீதியைச் சேர்ந்த தாராராம் (37), அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமண ராம் (37) ஆகியோர் சிக்க, அவர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கருங்கல்பாளையம் கோட்டையார் வீதியில், குடோன் ஒன்றினை வாடகைக்கு எடுத்து அதில் குட்கா, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்தது தெரிந்திருக்கிறது. அதனையடுத்து குடோனில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 4.41 லட்சம் மதிப்பிலான 468 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, குற்றவாளிகளை பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பெங்களூருவிலிருந்து பார்சல் லாரிகள் மூலமாக ஈரோட்டிற்கு குட்காவை கொண்டு வந்து, குடோன்களில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்திருக்கின்றனர். இப்படி லாரிகளில் பார்சல் மூலமாக குட்கா கடத்தி வரப்படுவதை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. இருப்பினும் அதனை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பல்க்காக குட்கா, புகையிலைப் பொருட்களை இறக்குமதி செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விசாரித்து வருகிறோம்” என்றனர்.
Also Read: திருச்சி: 550 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது!
source https://www.vikatan.com/government-and-politics/crime/police-seized-468-kg-gutka-and-tobacco-in-erode
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக