Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

சுனாமி, எபோலா வைரஸ், தாலிபன்... முன்பே கணித்த கமல் ஒரு தீர்க்கதரிசியா?!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபன்கள் சமீபத்தில் கைப்பற்றிய பிறகு இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரல் ஆனது. சில தாலிபன்கள் உடற்பயிற்சிக் கூடத்தில் ஆர்வமாக பயிற்சி செய்த காட்சி அது. அதில் வெள்ளந்தியான சிரிப்புடன் ஓர் இளைஞர் குறுக்கே ஓடி வந்தது பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கலாம். இந்தக் காட்சியை அப்படியே நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

இப்போது கமல்ஹாசன் இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்திற்கு வருவோம். அதில் ஒரு முதிரா இளைஞன், கமல்ஹாசனை அழைத்து தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டச் சொல்வான். ஊஞ்சல் ஆடும்போது கண்களை மூடிக் கொண்டு அந்தக் கணத்தை முழுமையாக அனுபவிப்பான். அதற்கு அடுத்த நாளில் அவன் ஒரு தற்கொலை போராளியாக பலியாகப் போகிறான் என்கிற தகவலையும் இத்துடன் இணைத்துக் கொண்டால் அந்த இளைஞனின் பரவசத்தை இன்னமும் அழுத்தமாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

விஸ்வரூபம் கமல்

தாலிபன்களின் காட்டுமிராண்டித்தனங்களை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அந்தப் படையிலுள்ள பல இளைஞர்கள், அவர்களின் பதின்ம வயதிலேயே பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி வரப்பட்டு மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். மதத்தின் பெயரால் வன்முறை திணிக்கப்பட்டவர்கள். தங்களின் இயல்பான சிறார் அனுபவங்களை இழந்தவர்கள் என்பதையும் இணைத்துத்தான் இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டியிருந்தது.

உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்த இளைஞனின் சிரிப்பையும் விஸ்வரூபம் படத்தில் வந்த பையனின் பரவசத்தையும் நாம் ஒரே புள்ளியில் இணைக்க முடியும். 2021-ல் நிகழும் ஒரு சம்பவத்தை 2013-ல் வெளிவந்த ஒரு திரைப்படத்திலேயே கமல்ஹாசன் சித்திரித்துக் காட்டிவிட்டார் என்று இரண்டையும் ஒப்பிட்டு அவரின் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள்.
இது மட்டுமல்ல, கமல்ஹாசனின் சில திரைப்படங்களில் வெளிப்பட்ட தகவல்கள், சித்திரிக்கப்பட்ட காட்சிகள் போன்றவை 'காலத்தால் முன்கூட்டியே சொல்லப்பட்டவை' என்றும் நெடுங்காலமாக புகழப்படுகிறது. இந்த வகையில் 'சினிமாவுலகின் நாஸ்ட்ரடாமஸ்' என்று கூட கமல் சிலாகிக்கப்படுகிறார். இந்தப் பாராட்டுக்களில் எத்தனை தூரம் உண்மை உள்ளது? விரிவாகப் பார்ப்போம்.

"இதெல்லாம் பெரியவங்க முன்னாடியே சொல்லி வெச்சுட்டாங்க" என்று சொல்வதில் நமக்கு எப்போதுமே ஒரு கிளர்ச்சியும் பெருமையும் உள்ளது. பாரம்பரியத்தை கண்மூடித்தனமாக முன்நிறுத்தி நவீனத்தை ஆராயாமல் நிராகரிப்பதில் உள்ள பழைமைவாத மகிழ்ச்சி இது. இதே பெருமித மனோபாவம்தான் கமல்ஹாசனின் திரைப்பட சமாச்சாரங்களை 'முன்பே கூறப்பட்டதாக' முன்நிறுத்துவதில் செயல்படுகிறதா?

அன்பே சிவம்

ஒரு சராசரி மனிதன் தான் வாழும் குறுகிய காலத்திற்கான, எல்லைக்கான வட்டத்தில் மட்டுமே சிந்திப்பான். அப்போது கூட அவனுடைய சிந்தனை முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்போ, பின்போ செல்லாது. தன்னுடைய கிணற்றுத் தவளை மனோபாவத்தில் அமர்ந்திருப்பதே அவனுக்குச் செளகரியமாக இருக்கும். அதையொட்டியே 'உலக விஷயங்கள்' அனைத்தையும் ஆராய்ந்து அபிப்ராயங்களை உதிர்த்துக் கொண்டேயிருப்பான்.

ஆனால், சமூக அறிஞர்கள், அறிவியலாளர்கள் என்பவர்கள் அப்படியல்ல. அவர்கள் எப்போதுமே பெரிய கேன்வாஸில் சிந்திப்பவர்கள். ஒரு சமகால விஷயத்தையொட்டி கடந்த கால வரலாற்றை நூற்றாண்டுகளுக்காவது முன்பு தாவிச் சென்று ஆராய்ந்து பார்ப்பார்கள். ஏனெனில் நிகழ்கால வரலாறு என்பதே கடந்த கால வரலாற்றின் மீதுதான் நின்று கொண்டிருக்கிறது. எனவே கடந்த கால வரலாற்றை சரியாக அறிந்து கொண்டால்தான் நிகழ்காலச் சம்பவங்களை துல்லியமாக ஆராய முடியும். இதைப் போலவே எதிர்காலத்தில் இது என்னவாக மாறவிருக்கிறது என்பதையும் ஏறத்தாழ உத்தேசமாகச் சொல்லி விட முடியும்.

Also Read: ’கற்றதும் பெற்றதும்’-ல் சுஜாதா சொன்ன எவையெல்லாம் நிஜமாகியிருக்கின்றன?

குறிப்பாக அறிவியல் அறிஞர்கள், அறிவியல் கதைகள் எழுதுபவர்கள் காலத்தைக் கடந்து யூகிப்பதில் கில்லாடிகள். அவர்களின் யூகங்கள் வருங்காலத்தில் நிறைய சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது. வரலாறு எப்போதுமே இதைத்தான் நிரூபித்திருக்கிறது. ஆனால் ஜோசியர்கள் போல குருட்டாம் போக்கில் அல்லாமல் தர்க்கரீதியான யூகங்களைத்தான் இவர்கள் முன்வைப்பார்கள்.

தமிழ் எழுத்தாளர்களில் இதற்கான முன்னோடி என்று சுஜாதாவை சொல்லலாம். அவரும் மேற்கத்திய அறிவியலாளர்களின் கருத்துக்களிலிருந்து பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவற்றில் தன்னுடைய பார்வையையும் இணைத்தே பல விஷயங்களை பதிவு செய்தார். உதாரணத்துக்கு 'வருங்காலத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது, செய்திகளைத் தேடுவது, தட்டச்சு செய்வது, சினிமா பார்ப்பது உள்ளிட்ட பல விஷயங்களையும் ஒரு கையடக்க இயந்திரத்திலேயே செய்து விட முடியும்' என்பதை 'லேண்ட்லைன்' மட்டும் இருந்த காலத்திலேயே சொல்லிவிட்டார். இன்று அது நிதர்சனம் ஆகியிருக்கிறது.

தசாவதாரம்

கமலின் திரைப்படங்களிலும் இப்படிக் காலத்துக்கு முந்தைய பல விஷயங்கள் பதிவாகியிருக்கின்றன. இணையத்தில் தேடினால் பெரிய பட்டியலே கிடைக்கும். அவற்றில் எது சரியானது, எது மிகையானது, எது வலிந்து சொல்லப்பட்டது என்பதை அவரவர்களின் ஆராய்ச்சிக்குத்தான் விட வேண்டியிருக்கும்.

உதாரணத்துக்கு, 2003-ல் வெளியான திரைப்படம் 'அன்பே சிவம்'. இதில் 'சுனாமி' பற்றிய தகவலை மாதவனிடம் சொல்வார் கமல். அப்போது இந்த வசனத்தை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். சுனாமி என்கிற வார்த்தையே நமக்கு அப்போது பரிச்சயமில்லை. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டிலேயே, அதாவது 2004-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஆழிப்பேரலையானது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைத் தாக்கிய போதுதான் 'சுனாமி' என்கிற வார்த்தையின் அர்த்தமும் அபாயமும் மிக ஆழமாக நமக்கு உறைத்தது. அதன் பிறகுதான் இந்தக் காட்சியை மேற்கோள் காட்டி பலரும் சிலாகித்தார்கள்.

இப்படியாக, ‘சிகப்பு ரோஜாக்கள்’ (சைக்கோ கொலைகாரன்), ‘சத்யா’ (இளைஞர்களுக்கு வேலையின்மை), ‘தேவர் மகன்’ (சாதிக்கலவரம்), ‘மகாநதி’ (ஃபைனான்ஸ் கம்பெனிகளின் மூடுவிழா), ‘ஹேராம்’ (மதக்கலவரம்), ‘தசாவதாரம்’ (எபோலா - மார்பர்க் காம்போ வைரஸ்) போன்று பல விஷயங்களை தன் திரைப்படங்களில் கமல் முன்பே சொல்லிவிட்டார் என்கிறார்கள்.

இதில் சைக்கோ கொலைகாரன், மதக்கலவரம் போன்ற விஷயங்கள் எல்லாம் காலங்காலமாகத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பவைதான். இதை கமல்தான் முதன்முறையில் திரையில் சொன்னார் என்றுசொல்ல முடியாது. சுனாமி, எபோலா வைரஸ் போன்ற விஷயங்களை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் கமல் ஹீரோவாக நடித்தார் என்பதற்காக இதற்கான கிரெடிட்டையும் அவருக்கு மட்டுமே தந்துவிட முடியாது. அந்தத் திரைப்படங்களில் பணியாற்றிய எழுத்தாளர்கள், திரைக்கதையாசிரியர்கள், இயக்குநர்கள் கூட தொலைநோக்குப் பார்வையோடு சில விஷயங்களைச் சேர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு 'அன்பே சிவம்' திரைப்படத்தில் எழுத்தாளர் மதன் பணிபுரிந்திருக்கிறார். பல சிக்கலான அறிவியல் சமாச்சாரங்களை தனது பிரத்யேகமான எளிய எழுத்தின் மூலம் விளக்கம் தந்தவர் மதன்.

சிகப்பு ரோஜாக்கள்
கமல் என்றல்ல, சூர்யாவின் திரைப்படங்களில் கூட இவ்வகையான 'முன்னோடி கண்டுபிடிப்புகளை' ரசிகர்கள் நிகழ்த்தியிருக்கார்கள். ‘ஏழாம் அறிவு’ (கொரானோ வைரஸ்), ‘காப்பான்’ (வெட்டுக்கிளி தாக்குதல்) என்று அந்தப் பட்டியலும் பெரிதாக நீள்கிறது.

ஒரு படைப்பில் இம்மாதிரி வருங்காலத்தில் நிகழக்கூடிய சமாச்சாரங்கள் வருவதற்காக நாம் மிகையாக ஆச்சரியப்படத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட துறைகளில் நிகழும் லேட்டஸ்ட் தகவல்களை தேடி வாசிக்கும் ஆர்வம் மட்டுமே ஒருவருக்குத் தேவை. இம்மாதிரியான தகவல் சம்பந்தப்பட்ட அறிவுலகத்தில் நெடுங்காலமாக உரையாடப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் பொதுசமூகத்திற்கு மிக தாமதமாகத்தான் அவை அறிமுகமாகும். துறைசார் உலகத்தில் நெடுங்காலமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தகவல், ஒரு நடிகரின் வழியாக நமக்கு அறிமுகமாகும் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுகிறோம். இதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட தகவல்களை நாமே தேடி வாசிக்கும் ஆர்வம் இருந்தால், இவை பெரிய ஆச்சரியம் தராது.

Also Read: தாலிபன்களின் கதை - 4 | தாலிபன்களின் ஆட்சி ஏன் கொடூரத்தின் உச்சமாக இருந்தது?!

நாம் தமிழ் சினிமாக்களில் இன்று கண்டு வியக்கும் பல விஷயங்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் ஏற்கெனவே வெளியானவையாகத்தான் இருக்கும். உதாரணத்துக்கு சமீபத்தில் வெளியான 'நவரசா' என்கிற ஒன்பது குறும்படங்களில் ஒன்றான 'பிராஜக்ட் அக்னி' என்கிற குறும்படத்தில் கார்த்திக் நரேன் பேசியிருக்கும் விஷயங்கள் எல்லாம் கிறிஸ்டோபர் நோலனின் பல திரைப்படங்களில் இன்னமும் ஆழமாக, சிக்கலாக பேசப்பட்ட விஷயம்தான். மட்டுமல்லாமல் ஐரோப்பிய சமூகம் என்பது பல விஷயங்களிலும் நம்மை விட குறைந்தபட்சம் ஒரு நூறாண்டாவது முன்னே நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையையும் இதில் இணைத்துப் பார்க்கவேண்டும்.

எனில் கமலின் திரைப்படங்களில் வெளிப்பட்டிருக்கும் 'முன்னோடி விஷயங்களில்' கமலின் பங்களிப்பு இல்லவே இல்லையா என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் அவரின் பங்களிப்பு இருந்திருக்கும். ஏனெனில் கமலும் ஒரு மிகச் சிறந்த வாசகர். தொழில்நுட்பம், அறிவியல், வரலாறு, இலக்கியம் போன்ற பல விஷயங்களை தேடித் தேடி அறிபவர். துறைசார் அறிஞர்களை தமது நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களின் ஞானத்தை தனக்குள் கடத்திக் கொள்ள முயல்பவர். தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை அறிமுகப்படுத்திய முன்னோடி அவர்.
கமல் - விஸ்வரூபம் - 2

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் "உங்களுக்குப் பிடித்த gadget என்ன?" என்றொரு கேள்வியை கமல்ஹாசனிடம் கேட்டார். நாமாக இருந்தால், நாம் சமீபத்தில் விரும்பி வாங்கிய செல்போன், லேப்டாப் என்று எதையாவது சொல்லியிருப்போம். ஆனால் கமல் சொன்ன பதில் அற்புதமானது. '’மனித மூளைதான் எனக்குப் பிடித்த இயந்திரம். மனித குலத்தால் அதன் இயக்கத்தை இன்னமும் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை தந்த பிரத்யேகமான பரிசு அது'’ என்பது போல் பதில் சொன்னார் கமல். ஒரு விஷயத்தை சம்பிரதாயமாக யோசிக்காமல் 'Out of the box' பாணியில் சிந்திக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் இது.

எனவே தன்னுடைய சில திரைப்படங்களில் பல முன்னோடியான விஷயங்கள் அமைந்திருப்பதற்கு கமலும் ஒரு பிரதான காரணமாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இணையத்தில் வெளியாகும் பட்டியலை விடவும் அவரது திரைப்படங்களில் உள்ள 'முன்னோடி'யான விஷயங்கள் பெரிது.


source https://cinema.vikatan.com/tamil-cinema/how-kamal-haasan-predicted-the-global-events-before-they-happened

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக