Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கொடூரக் கொலை; 30 நிமிடத்தில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய டாபர்மேன் நாய்!

குஜராத்தின் மூன்றாவது பெரிய நகரம் வதோதரா. இந்த நகரின் கீழ் வரும் கிராமப்புறக் காவல்துறையைச் சேர்ந்த நாய் ஒன்று, தனது மோப்ப சக்தியின் மூலம் 30 நிமிடங்களுக்குள் ஒரு பெண்ணைக் கொலைசெய்த ஆறு கொலைக்குற்றவாளிகளை அடையாளம் காட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பெண் டாபர்மேன் நாய்க்கு ஒன்றரை வயது ஆகிறது.

கொலை செய்யப்பட்ட பெண், குஜராத்தின் கர்ஜன் தாலுகாவிலுள்ள டேதன் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். மூன்று குழந்தைகளின் தாயான இவர் கிராமத்திற்குச் சற்றுத் தள்ளியிருக்கும் விவசாயப் பண்ணை ஒன்றில் புல் வெட்டிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஆறு ஆண்கள் இவரை கூட்டுப் பாலியல் வதை செய்தனர். அத்தோடு அவர்கள் நின்றுவிடவில்லை. அந்தப் பெண்ணை வெளியே விட்டால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர்கள், அப்பெண்ணைக் கொடூரமாகக் கொலையும் செய்திருக்கின்றனர்.

Doberman (Representational Image)

Also Read: தூத்துக்குடி: கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர்! - முன்பகை காரணமா?

வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால் கவலையுற்ற அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரைத் தேடி அலைந்திருக்கின்றனர். கடைசியாக இரவு 9 மணி அளவில் அப்பெண்ணின் இறந்த நிலையில் உடல் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

அதன் பின்னரே இது குறித்த வழக்கு கர்ஜன் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையைச் சேர்ந்த பல குழுக்கள், கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் தடயவியல் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று, `ஜாவா' என்கிற மேற்சொன்ன மோப்ப நாயுடன் அப்பெண்ணின் உடல் இருந்த இடத்திற்குச் சென்றுள்ளது.

குற்றம் நிகழ்ந்த இடத்தில் கிடந்த துப்பட்டா மற்றும் பாட்டிலை மோப்பம் பிடித்த ஜாவா, அங்கிருந்து வடக்கு திசை நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கிறது. வயல்களையும் புதர்களையும் தாண்டி கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரம்வரை நடந்த ஜாவா, அகமதாபாத் - மும்பைக்கு இடையிலான ரயில்வே லைனைக் கடந்து, ஒரு கூடாரத்தின் முன்பு நின்றிருக்கிறது. அங்கு மொத்தமாக ஐந்து கூடாரங்கள் இருக்க, அதில் குறிப்பிட்ட அந்த ஒரு கூடாரத்தின் முன்பு தொடர்ந்து நின்றிருந்த ஜாவா, விடாமல் குறைக்கவும் செய்திருக்கிறது. அதன் பின்னரே அந்தக் கூடாரத்திலிருந்த, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுக் குற்றவாளியான லால் பகதூர் கிரிஜாராம் என்பவரை கைது செய்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக இக்குற்றத்துடன் தொடர்புடைய மேலும் ஐந்து ஆண்களையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இப்படி அரை மணி நேரத்துக்குள்ளாகவே குற்றவாளிகளைக் கண்டறிய உதவிய ஜாவாவை காவல்துறையினருடன் சேர்ந்து பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Man walking with dog (Representational Image)

Also Read: திருமணம் மீறிய உறவு; இரண்டரை வயது குழந்தையைக் கொலை செய்த தாய்!

ஓர் ஆண்டிற்கு முன்புதான் ஜாவா மோப்ப நாய்கள் குழுவில் இணைந்ததாகவும், ஆனால் இயல்பாகவே கூர்மையான புத்திகொண்ட ஜாவா சொல்லிக் கொடுத்ததை மிக விரைவாகக் கற்றுக்கொண்டதாகவும் ஜாவாவுக்குப் பயிற்சியளித்த தலைமைக் காவலர் ஹரேஷ் மொஹானியா பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக `Tracker dogs' எனப்படும் கண்காணிப்புக்குப் பயன்படும் நாய்கள், குற்றங்கள் சார்ந்த விசாரணைகளுக்குத்தான் உதவும். ஆனால் ஜாவா குற்றவாளியை அடையாளம் காட்டியதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பான விசாரணைக்கும் பயன்பட்டு மற்ற குற்றவாளிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது என்று வதோதரா காவல் அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.

வெல்டன் ஜாவா!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/news/india/police-doberman-dog-helped-to-identity-criminals-in-murder-case-within-30-minutes-in-gujarat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக