'' அவர் அமைச்சராக இருந்த காலத்தில் 148 விருதுகள் பெற்று சிறந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற பெயரெடுத்திருக்கிறார். ஒரு லட்சத்து 2 ஆயிரம் கி.மீட்டர் கிராமச் சாலைகள் சீர்செய்யப்பட்டிருக்கின்றன. புதிதாக 50 ஆயிரம் கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக, ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் எங்கெல்லாம் குடிநீர் பிரச்னை இருந்ததோ, அதனைச் சரிசெய்வதற்காக பாடுபட்டவர். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணிக்கு நூற்றுக்கு நூறு சதவிகித வெற்றியைத் தேடித் தந்தவர்''
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு குறித்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உணர்ச்சி பொங்க, உரத்த குரலில், அளித்த பதில் இது.
முதல்வராக இருந்தவர்கள், தங்கள் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய திட்டங்களை பொதுவாக தங்கள் பெயரில் வரவு வைப்பதுதான் வழக்கம். குறைந்தபட்சம், 'என்னுடைய ஆலோசனையின் பேரில், என்னுடைய வழிகாட்டுதலில்' என்கிற வார்த்தைகளையாவது சேர்த்துவிடுவார்கள். ஆனால், தாராளமாக, அதை அமைச்சரின் சாதனையாக ஒரு முன்னாள் முதல்வர் விவரிக்கிறார் என்றால், கட்சியில் அந்த நபருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்று அர்த்தம். இல்லை, கட்சியில் தலைமையையும் மீறி செல்வாக்குச் செலுத்தும் ஆளுமையாக அவர் வளர்ந்திருக்கிறார் என்று பொருள். இதில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க சட்டமன்றக் கொறடாவுமான வேலுமணி யார், நகர்மன்றத் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று அ.தி.மு.கவில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக அவர் வளர்ந்தது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
அரசியல் என்ட்ரி:
கோவை மாவட்டம், குனியமுத்தூர் அருகில், சுகுணாபுரம் என்கிற கிராமத்தில், பழனிசாமி – மயிலாத்தாள் தம்பதியின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் வேலுமணி. சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி என்பதன் ஆங்கிலச் சுருக்கம்தான் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு, அன்பரசன் என்ற மூத்த சகோதரரும், செந்தில்குமார் என்கிற இளைய சகோதரரும் உள்ளனர். இவர்களில் அன்பரசனுக்குச் சொந்தமான இடங்களிலும் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே. இப்போது மட்டுமல்ல, ஆரம்பம் முதலே வேலுமணியின் அரசியல் வளர்ச்சியில் அவரின் அண்ணன் அன்பரசனுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், தன் ஊரில் உள்ள, எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தில் ஒரு உறுப்பினராகத்தான் வேலுமணியின் அரசியல் வாழ்க்கைத் தொடங்கியது. 1996-ல் ஜெயலலிதாவின் மீதான தி.மு.கஅரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் கோவையில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் கலந்துகொள்கிறார் வேலுமணி. அப்போது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் 1991-96 -ல் பேரூர் எம்.எல்.ஏவாகவும் இருந்த கே.பி.ராஜூவின் அறிமுகம் அவருக்குக் கிடைக்கிறது.
குனியமுத்தூர் நகர சேர்மன்:
ராஜூவின் சொந்த ஊரான குனியமுத்தூரும் வேலுமணியின் சொந்த ஊரான சுகுணாபுரமும் அருகருகே இருக்க ராஜூவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு வேலுமணிக்குக் கிடைக்கிறது. நாளடைவில் கே.பி.ராஜூ சென்னைக்கு சட்டமன்றத்துக்கு வரும்போதெல்லாம் வேலுமணியையும் அழைத்து வருமளவுக்கு இருவருக்குமிடையிலான நட்பு வளர்கிறது. தொடர்ந்து, ராஜூவின் சிபாரிசில் குனியமுத்தூர் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர், நகர துணைச் செயலாளர் என அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்கிறார் வேலுமணி. தொடர்ந்து, 2001 காலகட்டத்தில் பொங்கலூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் அப்போதைய ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராகவும் இருந்த பா.வை. தாமோதரனுடன் பழக்கமாகிறார் வேலுமணி. அவரின் மூலம் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளராகவும், குனியமுத்தூர் நகர்மன்றத் தலைவராகப் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் வேலுமணிக்குக் கிடைக்கிறது. பொருளாதார ரீதியாக அடுத்த கட்டத்துக்கு அவர் வளர்ந்ததும் இதே காலகட்டத்தில்தான் என்கிறார்கள் விபரம் அறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள்.
கிடைத்த எம்.எல்.ஏ வாய்ப்பு!
அதே காலகட்டத்தில், வணிகவரித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த செ.ம.வேலுசாமியின் அறிமுகமும் வேலுமணிக்குக் கிடைக்கிறது. அவரின் மூலம் தனக்கு வேண்டப்பட்ட பல காரியங்களைச் சாதித்தும் அவரின் சிஷயனுமாகவே எங்கும் வலம் வந்திருக்கிறார். 2006-ல் கோவை மாநகர் மாவட்டச் செயலாளரான வேலுசாமி, புறநகர் மாவட்டச் செயலாளரான தாமோதரன் இருவரின் ஆதரவோடு, கே.பி.ராஜூவுக்கு அறிவித்த பேரூர் தொகுதி சீட்டு இரண்டு நாள்களில் வேலுமணிக்குக் கை மாற்றப்பட்டிருக்கிறது. அப்போதுதான், முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறார் வேலுமணி. அ.தி.மு.க அப்போது எதிர்க்கட்சியாக இருந்ததால், ஜெயலலிதாவுக்கும் நேரடியாக அறிமுகமாகிறார் வேலுமணி.
அடித்த அமைச்சர் லக்!
2011 சட்டமன்றத் தேர்தலில் சூளூர் தொகுதி தே.மு.தி.க கூட்டணிக்கு ஒதுக்கப்பட, செ.ம.வேலுசாமிக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அமையவில்லை. அதேபோல, பொங்கலூர் தொகுதியும் மறு சீரமைப்பில் காலியாக தாமோதரனுக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதன் மூலம் அமைச்சராகும் யோகம் அடித்தது வேலுமணிக்கு. இதுகுறித்து, அ.தி.மு.க நிர்வாகிகள் பேசும்போது, '' அதே தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் நின்று பொள்ளாச்சி ஜெயராமனும் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், வேலுமணியும் அவரின் அண்ணனும் இராவணனுக்குப் பணம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்தனர். தெலுங்கு செட்டியாரான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதைவிட கவுண்டருக்குக் கொடுத்தால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என சசிகலாவின் மூலம் ஜெயலலிதாவின் காதுக்கு செய்தியைக் கொண்டு சேர்த்தனர். வேலுமணியின் அமைச்சர் பதவிக்கு ஜெயலலிதா ஓகே சொன்னபோதும், தலைவர் காலத்து ஆளான பொள்ளாச்சி ஜெயராமனை அப்படியே விடமுடியாது என்பதால்தான் அவருக்கு துணை சபாநாகர் பதவி தந்தார் அம்மா. அப்போது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரானார் வேலுமணி'' என்றவர்கள், தொடர்ந்து மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
பதவி பறிப்பும் அடித்த யோகமும்!
'' வேலுமணியின் அமைச்சர் பதவி சில மாதங்களிலேயே பறிக்கப்பட்டது. பண விவகாரத்தால், இராவணனின் மீது பயங்கரக் கோபத்தில் இருந்த அம்மா, அவரின் மூலமாக அமைச்சரான வேலுமணியின் பதவியையும் பறித்துவிட்டார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டம்மியாகத்தான் இருந்தார். பிறகு, 2013 காலகட்டத்தில் சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரரான ராமச்சந்திரனைப் பிடித்து, சசிகலாவின் ஆதரவில் கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் ஆனார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளராகவும் அறிவிக்கப்பட்டார் வேலுமணி. கோயம்புத்தூர், பொள்ளாச்சி இரண்டு தொகுதியிலும் கட்சியை வெற்றி பெறவைத்ததும் அப்போது வேளாண்துறை அமைச்சராகப் பதவிவகித்த கிணத்துக்கடவு தாமோதரன் குறித்து தனது ஆதரவாளர்களால், தலைமைக்கு புகார் அனுப்பியும், சசிகலாவின் மூலம், கே.பி.முனுசாமி வசம் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி, மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறையோடு கூடுதலாக சட்டத்துறைக்கும் அமைச்சரானார் வேலுமணி. அப்போதிருந்து கடந்த 2021 தேர்தலுக்கு முன்புவரை உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியில் அவர் நீடித்து வந்தார். அதன் மூலம் பொருளாதார ரீதியாக அசைக்க முடியாத உச்சத்தை அடைந்தார்'' என்றார்கள்.
கட்சியிலும் கொடிகட்டிப் பறக்கும் ஆதிக்கம்!
இது ஒருபுறமிருக்க, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கட்சியிலும் வேலுமணியின் செல்வாக்கு உயர்ந்தது. அதற்கான காரணங்களை விவரித்த அ.தி.மு.கவினர், '' எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, எம்.எல்.ஏக்களைத் தக்கவைத்துக் கொண்டதில் வேலுமணியின் வைட்டமின் `ப’ தான் விளையாடியது. கட்சியில அவரது கை ஓங்கியதுக்கு இரண்டு காரணம். கட்சியோட கொடுக்கல், வாங்கல் எல்லாம் அவர்தான் பார்த்தார். அடுத்ததா, உள்ளாட்சித்துறை அமைச்சரா இருந்ததால, எல்லா தொகுதி எம்.எல்.ஏக்களுக்கும் அவரோட தயவு தேவைப்பட்டது. அதை வச்சே தனக்கு ஆதரவா ஒரு கூட்டத்தை உருவாக்கிட்டாரு. இப்போ கட்சியில எடப்பாடி பழனிசாமி சொல்றத விட வேலுமணி சொல்றதைத்தான் கட்சி நிர்வாகிகளே கேட்பாங்க. அதற்கு ஒருவகையில எடப்பாடியும்தான் காரணம்.
Also Read: வேலுமணி ரெய்டு... கோட்டைவிட்டதா லஞ்ச ஒழிப்புத்துறை?
கோயம்புத்தூர் மாவட்டத்துல மட்டுமில்ல, தமிழ்நாடு முழுவதும் தனக்குப் பிடிக்காத ஆள்களை எல்லாம் அவர் கொஞ்சம் கொஞ்சமா ஓரம் கட்டிட்டாரு. அவரால பாதிக்கப்பட்டவங்க, எடப்பாடிகிட்ட போய் நிப்பாங்க. ஆனா, அவரோ, 'வேலுமணியைக் கூப்பிட்டுப் பேசுறேன், பேசி சரி செஞ்சுக்கலாம்'னு ஆறுதலா ஒரு வார்த்தையும் பேச மாட்டாரு. வேலுமணிதான் கட்சி செலவை எல்லாம் பார்த்துக்குறாருன்னு அவருக்கு சப்போர்ட்டாதான் பேசுவாரு. அவர் என்ன அவரோட சொந்தப் பணத்தையா செலவு செஞ்சாரு. கடந்த நாலு வருஷத்துல, `அமைச்சராக சம்பாதிச்சதை’ தான் செலவு செஞ்சாரு. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சரி, 2021 சட்டமன்றத் தேர்தல்'லயும் அந்தப் பணத்தைதான் செலவு செஞ்சாங்க.
ரெய்டு வரப் போறதையும் முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு, முந்தின நாளே சகல ஏற்பாடுகளையும் பண்ணிட்டாரு,. அவர் கோயம்புத்தூர் போய் இறங்கின நாளும் ஆளுக்கு ஒரு குவார்ட்டர், முன்னூறு ரூபாய் கொடுத்து ஏர்போட்டுக்கு வெளியிலயும் ஒவ்வொரு 2 கி.மீட்டருக்கு ஒரு ஜங்ஷன்லயும் ஆள்களை நிறுத்தி, தனக்கு இவ்வளவு ஆதரவு இருக்குன்னு காட்டிக்குறாரு.
அரசியல்ல தனக்கு அஸ்திவாரம் போட்டுக்கொடுத்த கே.பி.ராஜூ, சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட வாய்ப்புக் வாய்ப்பு வாங்கிக் கொடுத்த செ.ம.வேலுசாமி, வேளாண்துறை அமைச்சரா இருந்த கிணத்துக்கடவு தாமோதரன்'னு வேலுமணியால அரசியல் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம். ஆனா, சட்டமன்றக் கொறடா, கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்னு ஏகப்பட்ட பதவிகளை தன்வசம் வச்சிருக்காரு. கட்சியோட அவைத்தலைவர் பொறுப்பை எடப்பாடி எடுத்துக்கிட்டு, வேலுமணி இணை ஒருங்கிணைப்பாளர் ஆனாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல'' என்கிறார்கள் ஆதங்கமாக.
source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-how-former-admk-minister-sp-velumani-became-a-power-sector-in-admk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக