தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது 50 வருடத்துக்கும் மேலான அரசியில் வாழ்க்கையில் முதல்முறையாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை கோட்டையில் ஏற்றவிருக்கிறார். இதுகுறித்தும், இந்திய தேசியக்கொடி ஏற்றும் உரிமையை மாநில முதல்வர்கள் பெற்ற வரலாற்றையும் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.
முதலமைச்சர்கள் கொடியேற்ற உரிமை கோரிய கருணாநிதி:
1973 ஆம் ஆண்டு வரை குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வந்தது. மாநில முதலமைச்சர்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. இவ்வழக்கத்தை மாற்றியமைத்த பெருமை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியையே சாரும்.
1969 ஆம் ஆண்டு முதன்முறையாக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட கருணாநிதி, "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற தத்துவத்தை மாநிலம் முழுவதும் முழங்கி வந்தார்.
அதன் தொடர்ச்சியாக, ஆட்சிக்கு வந்த அதே வருடம், அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம், மாநில முதலமைச்சர்களும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவதற்கான உரிமை வழங்க கோரி கடிதம் எழுதினார் கருணாநிதி.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திரா காந்தி, ``மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்றும் கவர்னர்கள் குடியரசு தினத்தன்றும்" கொடியேற்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1974 ஆம் ஆண்டு முதல்வராக மு.கருணாநிதி முதன்முறையாக இந்திய சுதந்திரக்கொடியை ஏற்றினார். தமிழக முதல்வராக ஆட்சியில் இருந்த சமயத்தில் மு.கருணாநிதி 14 முறையும், அவரைத் தொடர்ந்து முதல்வராக பதவிவகித்த எம்.ஜி.ஆர். 11 முறையும், ஜெ.ஜெயலலிதா 16 முறையும், எடப்பாடி பழனிசாமி 4 முறையும் கொடியேற்றி உள்ளனர்.
முதல்வராக கொடியேற்றவுள்ள ஸ்டாலின்:
மிக இளம் வயதிலேயே அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டவர் மு.க ஸ்டாலின். தனது 14 வயதிலேயே முரசொலி மாறனுக்காக தேர்தல் பிரசாரம் செய்தார். 1973 ஆம் ஆண்டு தி.மு.க பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி ஆட்சியின் பொது கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்து மு.க ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். அதன் விளைவாக 1976-ல் மிசா (MISA) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பின்னர், கட்சியில் இளைஞர் அணியை உருவாக்கி 1982-ல் தி.மு.க இளைஞர் அணி செயலாளரானார்.
1966-ம் ஆண்டு சென்னையின் 37 வது மேயராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். அவர் மேயரான போது பல்வேறு வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை சுலபமாக்க 10 மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிட்டார். தனியார் குப்பை அகற்றும் நிறுவனத்தை நியமித்தார். மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தினார். 2006-ல் கிராமப்புற வளர்ச்சி மாற்றும் உள்ளூர் நிர்வாக அமைச்சரான போது ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். 2008-ல் தி.மு.க வின் பொருளாளர் ஆனார். பிறகு 2009-ல் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016-ல் கொளத்தூர் தொகுதியில் நின்றவர், வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். 2018-ல் மு.கருணாநிதி மறைவுக்குப் பின் தி.மு.க தலைவரானார்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, முதன்முறையாக தமிழக முதல்வரானார். இந்நிலையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினமான இன்று, முதல்முறையாக இந்திய சுதந்திரக்கொடியை ஏற்றவிருக்கிறார் மு.க ஸ்டாலின். அதுமட்டுமில்லாமல், மு.க. ஸ்டாலின் தனது ஆட்சியின் 100-வது நாளையும் ஆகஸ்ட் 14-ல் நிறைவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/independence-day-mk-stalin-to-be-flagged-off-for-the-first-time
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக