Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

75-வது சுதந்திர தினம் : ஆலந்தூர் மெட்ரோவின் புதிய முன்னெடுப்பு!

நம் இந்தியத் திருநாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று விமரிசையாகத் தொடங்கியுள்ளன. இந்தத் தருணத்தில் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் பற்றிய ஒரு செய்தி நமக்கு வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்துகிறது.

பாரதியாரின் பாடல்

‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோ மென்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே’, இந்தப் பாடல் சுதந்திரம் அடைவதற்கு 39 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி பாடிய பாடல். 1908-ம் ஆண்டில் மார்ச் 9-ம் தேதி மதராஸ் கடற்கரையில் சுரேந்திரநாத் ஆர்யா ஏற்பாடு செய்திருந்த 20 ஆயிரம் பேர் கூடிய கூட்டத்திற்கு ஊர்வலமாகச் சென்றபோது நாதஸ்வர இசையுடன் பாரதியார் பாடிய பாடல் இது. மகாகவி பாரதியின் தீர்க்க தரிசனத்துக்கு இப்பாடல் ஒரு சான்று. இந்தத் தகவலுடன் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பதாகைகள், மூவர்ணக் கொடியுடன் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சென்னையின் பல இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 75-வது ஆண்டு சுதந்திரம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 75-வது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுதந்திரத்தைக் குறிக்கும் வகையில் பதாகைகள் உள்ளும் புறமும் அமைந்துள்ளன. மெட்ரோ ரயில் நிலையத்தின் உள்ளே இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், அண்மையில் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களின் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களின் தகவல்கள்

இன்றைய இளைய தலைமுறை சுதந்திர இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட வீரர்கள் பற்றி அறிந்துகொள்ள பல அரிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

‘ஐ லவ் இந்தியா’ என்ற வார்த்தைகளுடன் செல்பி எடுத்துக் கொள்ளும் வகையில் ஒரு தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் இவ்விடத்தில் நின்று செல்பி எடுத்து அதனை முகநூலில் மற்ற உடகங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர்.

‘ஐ லவ் இந்தியா’
75-வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ள இம்முயற்சி பாராட்டுக்குரியது. இம்முயற்சிக்கு மார்க் மெட்ரோ நிறுவனம் உறுதுணையாய் இருந்து செயல்பட்டுள்ளது.


source https://www.vikatan.com/social-affairs/miscellaneous/a-new-initiative-by-alandur-metro-on-the-75th-anniversary-of-indian-independence

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக