Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

`முன்பு பள்ளியில் 71 மாணவர்கள்; இப்போது 816 மாணவர்கள்!' - `நல்லாசிரியர்' ஆஷா தேவியின் நம்பிக்கை கதை

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிற்கும், ஆத்மார்த்தமான செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், ஒவ்வொரு வருடமும் மத்திய கல்வி அமைச்சகம் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. இந்த வருடம் நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 44 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர், திருச்சி மாவட்டம் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஷா தேவி.

ஆசிரியர் ஆஷா தேவி

71 மாணவர்களுடன் இருந்த பள்ளியை தற்போது 816 மாணவர்கள் உள்ள பள்ளியாக மாற்றியது, 4 பேராக இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தியது, தமிழ்க் கலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பது, முக்கியமாக, அரசுப் பள்ளி மாணவர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில் துவக்கப்பள்ளி மாணவர்கள் முதல் ஆங்கில வழி உரையாடலைக் கட்டாயமாக்கி திட்டங்களைச் செயல்படுத்துவது என, தன் 33 வருட ஆசிரியர் வாழ்க்கையில் ஆசிரியர் ஆஷா தேவி செயல்படுத்தியவை ஏராளம். இதற்காக மாவட்ட அளவில், மாநில அளவில் விருதுகள் வாங்கியிருக்கும் தலைமை ஆசிரியர் ஆஷா தேவிக்கு மற்றுமொரு அங்கீகாரமாக தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவரிடம் பேசினோம்.

``திருச்சிதான் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் சொன்னதால் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். ஆனால் நாள்கள் செல்லச் செல்ல ஆசிரியர் பணியின் மீது எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு வர ஆரம்பித்தது. கல்லூரி முடித்ததும் 1998-ம் ஆண்டு அரசு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். தொடங்கிய ஒரு செயலில் எப்போதும் முழுமையாக இருக்க வேண்டும், நாம் முன்னேறும் அதே வேளையில் நம்மால் பலரும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் குளித்தலை அருகே உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தேன். தொடர்ந்து 2003-ம் ஆண்டு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றேன். 2009-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமையாசியராகப் பணியாற்றினேன். அதன் பின் 2010-ம் ஆண்டு முதல் தற்போது வரை பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன்.

ஆசிரியர் ஆஷா தேவி

Also Read: பொம்மலாட்ட வீடியோ மூலம் மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு; அரசுப்பள்ளி ஆசிரியையின் புது முயற்சி!

நான் பணிபுரிய ஆரம்பித்த போது இந்தப் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 71, தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை 816. நான்கு ஆசிரியர்கள் இருந்தார்கள், தற்போது 8 பேர் உள்ளனர். மேலும் 16 ஆசிரியர்கள் பணிபுரிய இருக்கின்றனர். எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்குக் காரணமாக நாங்கள் நினைப்பது, எங்கள் பள்ளியின் உட்கட்டமைப்பும், இங்கு இருக்கும் ஆசியர்கள் உழைப்பும்தான். எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கில வழி உரையாடல் என்பதை கட்டாயமாக்கியுள்ளோம்.

ஏனெனில் அரசுப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலோனோர் எத்தனை திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் ஆங்கில மொழியில் வளமை இல்லை என்ற காரணத்தினால் பின்தங்கியே உள்ளனர். குறிப்பாக அவர்களின் திறமைகள் நசுக்கப்படுகிறது. அதனால் பள்ளி வளாகம் முழுவதும், ஆங்கிலத்தில்தான் உரையாட வேண்டும் என்பதை கொண்டு வந்தேன்.

கூடவே பரதம், இசை, ஓவியம், கராத்தே என மாணவர்களின் திறமைக்கேற்ப பயிற்சி வழங்க முடிவு செய்தேன். இதற்கான கட்டணங்களை ஆசிரியர்கள் நாங்கள் ஏற்றுக்கொண்டு மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து வருகிறோம். தொடர்ந்து கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் கற்றலை மேம்படுத்தினோம். குறிப்பாக ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற முடியாத குழந்தைகளுக்கு எப்படியேனும் படிப்பை கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று நினைத்தோம். அதனடிப்படையில், நாம் மாணவர்களின் இடத்திற்குச் சென்று பாடம் நடத்தலாமே என எண்ணி அதற்கான அட்டவணையை உருவாக்கி அதனடிப்படையில் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறோம். ஏனெனில் 80% மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கும், அவர்கள் ஆன்லைன் வகுப்பில் கற்பார்கள். ஆனால் மீதமுள்ள 20% மாணவர்களுக்கும் கல்வி போய் சேர வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அதற்கு மற்ற ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்தனர்.

ஆசிரியர் ஆஷா தேவி

Also Read: `பசங்க கையெழுத்தையே மறந்துட்டாங்க, அதான்..!' - மாணவர்களின் வீட்டிற்கே சென்று கற்பிக்கும் ஆசிரியை

முக்கியமாக பொதுமக்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள் என இவர்கள் அனைவரும்தான் என்னை நல்லாசிரியர் விருதுக்கு ஊக்கப்படுத்தினார்கள். என் கணவர் தமிழ்செல்வன், மிகுந்த பக்கபலமாக இருந்தார். பல நாள்களில் பள்ளியில் மாணவர்களின் வகுப்புகள், மற்ற வகுப்புகள் என முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்ல இரவு 9, 10 மணி ஆகி விடும். அந்த நேரங்களில் எல்லாம் என் குடும்பத்தினர் மிகவும் ஆதரவரோடு இருந்தனர்'' என்றார்.

தொடர்ந்து தலைமையாசிரியர் ஆஷா தேவி பேசுகையில், ``முதலில் ஆங்கில முயற்சிக்கு, அனைத்து தரப்பிலும் `இது சரியாக வராது, வேண்டாம்' என்றார்கள். நானும் சிறிது கலக்கமடைந்துவிட்டேன். ஆனால் ஆறு மாதங்களுக்குள்ளாக என் மாணவர்களுக்கு நங்கள் கொடுத்த பயிற்சியின் காரணமாக மிக அருமையாக ஆங்கிலம் பேச ஆரம்பித்தனர். ஒரு நிகழ்ச்சிக்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க என் மாணவர்களை அழைத்து சென்றிருந்தேன். அந்த நேரத்தில் என் மாணவர்கள் ஆட்சியரிடம் ஆங்கிலத்தில் உரையாடிய தருணம் என் வாழ்வில் மறக்கவே முடியாதது'' என நெகிழ்ந்தார்.

சாதனை பெண்மணி, மாவட்ட, மாநில அளவிலான நல்லாசிரியர் போன்ற 20-க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ள இவருக்கு தற்போது தேசிய நல்லாசிரியர் விருதும் கிடைத்துள்ளது. ``இது போன்ற விருதுகள் என்னை இன்னும் இன்னும் மாணவர்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது. எந்த விருது கிடைத்தாலும் அதோடு என் பயணம் நின்றுவிட்டது என கருதாமல் மேலும் மேலும் உழைப்பதற்கே என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

இன்னும் 7 வருடம் உள்ள என்னுடைய பணிக் காலத்தில், தொடக்கப்பள்ளியாக இருந்த பள்ளியை நடுநிலையாக உயர்த்தியுள்ளது போலவே உயர்நிலை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த, மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க, உள்கட்டமைப்பை இன்னும் இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதற்கான தொடக்கமே இந்த விருது'' என்று தன் கனவுகளைச் சொல்லி முடித்தார்.

ஆசிரியர் ஆஷா தேவி

Also Read: `டிவியில் பாடம், வாட்ஸ்அப்பில் அசைன்மென்ட், பிறகு பரிசு!' - அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புது முயற்சி

``தமிழ் மீதும், தமிழ்நாட்டின் கலைகளின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். இளைஞர்களால் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டமான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளில் முன் நின்று நியாயம் கேட்பவர், சமூகத்துக்காகக் குரல் கொடுப்பவர் ஆஷா டீச்சர்'' என்கிறார்கள் சக ஆசிரியர்கள்.

பணியும் பொறுப்பும் தொடரட்டும்!

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



source https://www.vikatan.com/news/education/national-award-won-school-teacher-asha-devi-speaks-about-her-journey

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக