தலைப்பைப் பார்த்ததும் இது பர்சனல் ஃபைனான்ஸ் கட்டுரைதானா என்ற சந்தேகம் எழுகிறதா? இந்தப் பற்றாக்குறை சூழ்நிலையில் எப்படி சந்தோஷமாக செலவழிக்க முடியும் என்று தோன்றுகிறதா? பர்சனல் ஃபைனான்ஸ் அதற்கும் வழி கூறுகிறது.
இன்றைய கிரெடிட் கார்டு உலகில் சேமிப்பு என்ற வார்த்தைக்கு மரியாதை குறைந்து விட்டது. முன்பெல்லாம் சிறுக சிறுக சேமித்துதான் எந்த ஒரு பொருளையும் வாங்க இயலும். இன்று அப்படியல்ல. கையில் கிரெடிட் கார்டு இருக்கும் வரை, அதில் பேலன்ஸ் இருக்கும் வரை சேமிப்பின்றியே எதையும் வாங்கலாம் என்பதால் சேமிப்பு தரும் பல நன்மைகளை இழக்கிறோம்.
இழப்பு எண் 1: வாழ்வை எதிர்கொள்ளும் தைரியம்
வாழ்க்கையில் எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை கொரோனா நன்றாகவே உணர்த்திவிட்டது. வேலை போகலாம்; விபத்துக்கள் நேரலாம்; வெள்ளைப் பூஞ்சை, கறுப்புப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற கலர், கலரான வியாதிகள் பரவலாம். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு எல்லாம் சகஜமாகி விட்டன. வாகனம் வாங்கக் கடன் தேடியது போய், வண்டி ரிப்பேருக்குக் கடன் கிடைக்குமா என்று தேடும் காலமாகி விட்டது. சேமிப்பு கையில் இருக்குமானால் இது போன்ற பிரச்னைகளை எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. எதையும் சமாளிக்க நம்மிடம் பணம் இருக்கிறது என்ற எண்ணமே ஆயிரம் யானை பலம் தரும்.
இழப்பு எண் 2: வருடாந்திர செலவுகளுக்கு அஞ்சாமை
நடுத்தட்டு மக்களின் பிரச்னையே வேறு. வீட்டில் வரும் விசேஷங்கள், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற திருவிழாக்கள், குழந்தைகளின் கல்விச் செலவுகள், வீடு ரிப்பேர், கார் ரிப்பேர், என்று எத்தனை விஷயங்கள்... நம் பணத்தை வாரிக்கொண்டு போக? இது போன்ற வருடாந்திரச் செலவுகளை சமாளிக்க சேமிப்பு இன்றியமையாதது. இன்னும் சற்று வசதியானவர்களுக்கு கார் லோன் வாங்க, வீட்டுக் கடன் வாங்க டவுன் பேமென்டாக ஒரு தொகை தேவைப்படும். கார் வாங்க கடன் தருவார்கள்; டவுன் பேமென்ட்டுக்கு யாரிடம் கேட்பது? இது போன்ற தருணங்களில் சேமிப்புதானே கை கொடுக்கும்?
Also Read: நிம்மதியான ஓய்வுக்காலத்திற்கு உதவும் `பேசிவ் இன்கம்'; நீங்கள் தயாரா? - பணம் பண்ணலாம் வாங்க - 3
இழப்பு எண் 3: பொருளாதார சுதந்திரம்
நன்கு படித்து, நல்ல வேலையில் இருந்தாலும், சிலருக்கு வெளிநாடு சென்று உயர் கல்வி கற்கும் ஆசை இருப்பதைப் பார்க்கிறோம். இன்னும் சிலர் பணம் அதிகம் வரக்கூடிய வேலையை விட்டு, மனத்திருப்தி தரும் வேலைகளைப் பார்க்க விரும்புகிறார்கள். வேறு சிலரோ அடிமை வேலையே வேண்டாம்; தானே தொழில் செய்து பலருக்கும் வேலை தரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சிலரின் கனவு சிட்டுக் குருவியாக பல ஊர் சுற்றித் திரிவதாக இருக்கிறது. குடும்பத்தினர் அனைவருக்கும் வாரி வழங்கி மகிழும் ஆசை சிலருக்கு; வேலை, பிசினஸ் எதுவும் இல்லாமல் நாற்பதுகளிலேயே ஓய்வு பெறும் ஆர்வம் சிலருக்கு. இவர்களால் தத்தம் ஆசைகளை நிறைவேற்ற முடிகிறதா? தடையாக இருப்பது எது? பொருளாதார சுதந்திரமின்மைதானே? அதை நிவர்த்தி செய்யும் ஒரே வழி சேமிப்பு மட்டுமே அல்லவா?
சரி, செலவு செய்வதையாவது மகிழ்வோடு செய்கிறோமா என்றால் அதுவும் இல்லை. உலக அளவில் 71% பேருக்கு, ``இந்தச் செலவைத் தவிர்த்து பணத்தைச் சேமித்திருக்கலாமே?” என்ற எண்ணம்தான் மேலோங்குகிறதாம். உளவியல் நிபுணர்கள் இதை `Guilty spending' - குற்ற உணர்வுடன் கூடிய செலவு - என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு மாறாக, `Guilt-free spending' - குற்ற உணர்வு இல்லாத சந்தோஷமான செலவு - செய்ய என்ன வழி?
Also Read: பணமிருந்தும் மகிழ்ச்சி இல்லையா? நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதைத்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 1
இதற்கு கணினி உலகு தரும் தீர்வு - தானியங்கி சேமிப்பு (Automated savings). சம்பளம் அக்கவுன்டில் சேர்ந்த இரண்டு நாட்களிலேயே ரெக்கரிங் டிப்பாசிட்டுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் SIP-க்கு, பிபிஎஃப் அல்லது ELSS-ல் வரி சேமிப்புக்கு, வீடு கட்ட அல்லது ஓய்வு கால சேமிப்புக்கு என்று மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைப் போடும்படி வங்கியில் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து விட்டால் மீதி இருக்கும் தொகையை எந்தக் குற்ற உணர்வும் இன்றி செலவு செய்யலாம். அரியர்ஸ்/போனஸ் மற்றும் எதிர்பாராத வரவுகள் வரும்பொழுதும், சேமிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, முதலிலேயே ஒதுக்கிவிட்டால், மீதம் இருக்கும் பணத்தைச் செலவு செய்யும்போது நம்மைக் குற்ற உணர்வு தாக்காது
``மாதத்தின் முதல் செலவு சேமிப்பு” என்ற கொள்கையை கடைப்பிடிப்பவர்கள் சந்தோஷமாக செலவு செய்ய முடியும். திகட்டத் திகட்டச் செலவு செய்யும் இன்பத்தை முழுமையாக ருசித்துப் பாருங்களேன்.
- அடுத்து புதன்கிழமை சந்திப்போம்.
பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர். திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!
source https://www.vikatan.com/business/finance/important-tips-for-guilt-free-spending-and-increase-savings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக