சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசாவில் தொடங்கி, மரணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வலியில் துடிக்கும் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படுகிற மருந்து வரை பலதும் போதைப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுவது உங்களுக்குத் தெரியுமா?
போதை மருந்துகள் பல வகை. சில மருந்துகள், நிஜத்தில் சாத்தியமாகாத கற்பனை உலகில் சஞ்சரிக்கச் செய்பவை. இன்னும் சில உங்களை `அவுட் ஆஃப் தி பாக்ஸ்' சிந்திக்க வைப்பவை. முக்காலங்களையும் மறந்து ஒருவித பரவச நிலையில் திளைக்கச் செய்பவை வேறு சில. இப்படி ஒருவரின் தேவைக்கேற்ப அவர் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மையும் மாறுகிறது. அவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் சுங்கத்துறையில் பணியாற்றும் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவருமான வெங்கடேஷ் பாபு.
``நமது நாட்டில் ஒரு மருந்தை போதைப்பொருள் என்று தடைசெய்துவிட்டு மற்றொரு நாட்டில் அது போதைப்பொருள் பட்டியலில் இல்லை என்று அனுமதித்தால் இந்தப் பிரச்னையைத் தீர்க்கவே முடியாது. தடையில்லா நாடுகளுக்கு அந்தப் போதை மருந்தைக் கொண்டுபோய் குவித்துவிடுவார்கள். அதனால்தான் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மருந்து சட்டவிரோதமானது என்ற முடிவுக்கு வந்தால் அது சட்டவிரோதமான போதைப்பொருள். ஐ.நா-வில் மருந்துகள் மற்றும் குற்றவியல் அலுவலகம் என்ற ஒரு பிரிவு உள்ளது.
ஐ.நா-விலுள்ள உறுப்பினர் நாடுகள் அனைத்தும் இணைந்து சட்டத்துக்கு விரோதமான போதைப்பொருள் என்று பட்டியலிட்டு கையெழுத்திடும் மருந்துகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. இதில் தனிப்பட்ட நாடுகளின் விருப்பு வெறுப்புகள் கணக்கில் கொள்ளப்படாது. ஒருமித்த கருத்துகளே ஏற்றுக்கொள்ளப்படும். அப்படியானால் இந்தியாவில் ஒரு மருந்து சட்டத்துக்குப் புறம்பான போதைப்பொருள் என்றால் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் அது போதைப்பொருள்தான், அதன் பயன்பாடு சட்டத்துக்கு விரோதமானதுதான்.
போதைப்பொருள் தொடர்பாக ஐ.நா 1961, 1971, 1988 ஆகிய ஆண்டுகளில் மாநாடுகளை நடத்தியது. அதற்குப் பிறகு, பெரியளவில் மாநாடுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த மூன்று மாநாடுகளின் முடிவில் கிடைத்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு நாடும் அதன் போதைப்பொருள் சட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் Opium Act, Dangerous Drugs Act என்பன போன்ற சட்டங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் திருத்தி Narcotics drugs and Psychotropic Substances act 1985 (NDPS Act) என்பது அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் போதைப்பொருள் என்கிற பட்டியலில் வரும். இந்தப் பட்டியலில் வரும் மருந்துகள் அனைத்தும் சட்டத்துக்கு விரோதமானவை.
3 வகை போதை மருந்துகள்
தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருள்கள்
Narcotic Drugs,
Psychotropic Substances,
Controlled Substances என மூன்று பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
முதல் இரண்டு பிரிவுகளிலும் மருத்துவ பயன்பாடு மற்றும் சட்டத்துக்குப் புறம்பான பயன்பாடு என்று இரண்டு வகைகள் உள்ளன. Controlled Substances பட்டியலில் வருபவற்றைப் பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளது. ஆனால், அவற்றைக் குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது.
Narcotic drugs
இவை அடிப்படையில் போதை தரும் மருந்து வகை. இந்த மருந்துகள் மத்திய நரம்பு மண்டலத்தை அழுத்தி (suppress) உணர்வுகளை மந்தமாக்கும். அப்படிச் செய்யும்போது உடலில் வலி உட்பட எந்த உணர்வும் தெரியாமல் போய்விடும். வலி மட்டுமல்ல விழிப்புத்தன்மை, திறன், சிந்தனை செயலாக்கத்தையும் தடை செய்துவிடும்.
மனிதனின் ஒவ்வொரு புலனிலும் (senses) தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால்தான் அந்த மருந்தின் தன்மை உடலில் இருக்கும் வரை எந்த வலியையும் உணர முடியாது. மருந்தின் தன்மை குறையக் குறைய வலி தெரியத் தொடங்கும். மீண்டும் அந்த மருந்தை எடுத்துக்கொண்டால் வலி தெரியாது. ஒருவேளை உடலில் வலியே இல்லை. ஆனாலும், அந்த மருந்தை ஒருவர் எடுத்தால் என்னவாகும்? வலி இல்லாதவர்களுக்கு போதையைக் கொடுக்கும். இதை Euphoria என்பார்கள். நிஜமில்லாத ஒரு பரவசநிலையில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்.
opium poppy என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் இயற்கையான பொருள் மார்பின் (Morphine). இதன் விதைகள்தான் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கசகசா. வட இந்தியாவில் இனிப்புகளுக்கும் தென்னிந்தியாவில் அசைவ சமையலிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் செடியில் பசை போன்ற ஒரு பொருளில் இருந்து பெறப்படுவதுதான் மார்பின். முற்றிய நிலையிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு அவர்கள் வாழும்வரை வலியில்லாமல் இருப்பதற்காக வலி நிவாரணியாகக் கொடுக்க இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மார்பின்தான் போதைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மருந்து.
Also Read: இருமல் மருந்து டு பசை; நம் வீட்டிலேயே ஒளிந்திருக்கும் `போதை அபாயங்கள்' - நான் அடிமை இல்லை - 3
மார்பினிலிருந்து கிடைக்கக்கூடியதுதான் ஹெராயின் (Heroin) என்ற போதைப்பொருள். இதே வரிசையில் கோகைன் (Cocaine), ஃபென்டெனில் (Fentanyl) உள்ளிட்டவையும் போதையைத் தரும் மருந்துகள்தான். அடிப்படையில் இவை அனைத்துமே வலி நிவாரணிகள். மார்பின், கஞ்சா, கோகோ (கோகைன் இதிலிருந்துதான் கிடைக்கிறது) மூன்றும் தாவரத்திலிருந்து கிடைக்கும் போதைப்பொருள்கள். கஞ்சா இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும்.
ஓபியம் வட இந்தியாவில் மட்டும் வளரும். கோகோ ஆசிய நாடுகளில் வளராது. லத்தீன் அமெரிக்க நாடுகளில்தான் வளரும். அதனால் இந்தியாவில் அதன் பயன்பாடு குறைவு. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலம் அல்லது அங்கிருந்து கடத்தி வரப்படும்.
Synthetic Opioids
Narcotics drugs வகையைச் சேர்ந்தது இது. தாவரங்களிலிருந்து கிடைக்கும் போதைப்பொருளைப் போன்ற விளைவைக் கொடுக்கும் வகையில் ரசாயனங்களைக் கொண்டு ஆய்வகங்களில் உருவாக்கப்படுபவைதான் Synthetic Opioids. இவை தற்போது அதிக அளவில் புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.
Also Read: `உங்கள் மூளையே உங்களுக்கு வில்லன்!' - போதைக்கு நாம் அடிமையாவது எப்படி? - நான் அடிமை இல்லை - 2
Narcotics மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது அவை உயிரையே குடித்துவிடும். நிதானமாக, சாதாரணமாக இருப்பவர்களால்தான் அது அதீத பயன்பாடு என்பதை உணர முடியும். போதைக்கு அடிமையானவர்களுக்கு அதைக் கண்டறியும் தன்மை இருக்காது. அந்த நேரத்தில் அந்தப் போதைப்பொருள் உடலுக்குள் செல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருக்கும். அளவைப் பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
இதற்கு உதாரணமாகப் பல செலிபிரிட்டிகளைக் கூறலாம். அவர்கள் ஏன் இறந்தார்கள் என்ற காரணமே தெரியாது. மர்மமான சாவு, தூக்கத்தில் இறந்துவிட்டார், சிறிய வயதுதான்... திடீர் மாரடைப்பு என்று காரணங்கள் கூறுவார்கள். மைக்கேல் ஜாக்சன் தொடங்கி பல பிரபலங்களின் இறப்பின் மர்மப் பின்னணியில் போதைப்பொருள்தான் உள்ளது.
Psychotropic Substances
இந்த வகை போதைப்பொருள்களை எடுத்துக்கொண்டவர்கள் ஒரு பொருளைப் பார்க்கிறார்கள் என்றால் அதைப் பற்றிய கண்ணோட்டம் மாறும், மனநிலை மாறும், உணர்வுகள் மாறும். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த மருந்துகள் நேரடியாக மூளையைப் பாதித்து, மூளையின் செயல்பாட்டையே மாற்றும். இவை அனைத்துமே ஆய்வகங்களில் உருவாக்கப்படும் 100% ரசாயனப் பொருள்கள்தான். தூக்க மாத்திரை இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
இதே வகையில் வருபவைதான் ஸ்டிமுலன்ட்ஸ் (stimulants). இதை எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஊக்க மருந்துகள். சாதாரணமாக 10 அடி நடந்தால் அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் 20 அடி எடுத்து வைப்பார்கள். விளையாட்டு வீரர்கள் எடுக்கும் ஊக்க மருந்துகள் இந்தப் பட்டியிலில் வரும்.
Also Read: போதை மாஃபியா: திவ்யாவுக்கு நேர்ந்தது உங்கள் வீட்டிலும் இப்போது நடந்து கொண்டிருக்கலாம்; உஷார்! - 1
Controlled Substances
இதை Precursor Chemicals என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு Narcotic drugs மற்றும் Psychotropic Substances வகையைச் சேர்ந்த மருந்துகளின் தன்மை இருக்காது. சட்டபூர்வமாகவும் இதன் பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வகை மருந்துகள் போதைப்பொருள்களைத் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள்களில் ஒன்றாக இருக்கும். இவை இல்லாமல் போதைப்பொருள்களைத் தயாரிக்க முடியாது. பள்ளி ஆய்வகங்களில் நமக்கு எல்லாருக்கும் பரிச்சயமான ரசாயனமான பொட்டாசியம் பெர்மாங்கனேட்டும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். அந்த ரசாயனம் இல்லாமல் கோகைன் தயாரிக்க முடியாது.
பெற்றோரே பிள்ளைகளை போதைக்கு அடிமையாக்குவது எங்கேயாவது நடக்குமா? நடக்கிறது.
அதுபற்றி அடுத்த அத்தியாயத்தில்...
source https://www.vikatan.com/health/healthy/irs-officer-explains-about-different-types-of-narcotic-drugs-and-its-usages
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக