Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கொரோனா 3-வது டோஸ் தடுப்பூசி : சந்தேகங்களும் விளக்கங்களும்!

இந்தியாவில், கொரோனா முதல் தவணை தடுப்பூசிக்கே கடுமையான தட்டுப்பாடு நிலவிவரும் நேரத்தில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் 'கொரோனா 3-வது டோஸ் தடுப்பூசி' செலுத்துவதற்கான அனுமதியை வழங்கி அசத்தியிருக்கிறது!

132 கோடி எண்ணிக்கையிலான மக்கள் தொகையைக்கொண்ட இந்தியாவில், தடுப்பூசி தயாரிப்பில் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிப்பதே பெரும் சவாலாக உள்ளது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் உள்ள பல்வேறு அச்சங்களால், முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதற்கே மக்கள் தயங்கும் சூழ்நிலையும் இருந்துவருகிறது.

கொரோனா வைரஸ்

இந்தியாவின் நிலைமை இதுவென்றால், அமெரிக்காவிலோ 'நோய் எதிர்ப்பு மண்டலக் குறைபாடு உள்ளவர்கள் 3-வது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளலாம்' என்று அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கும் முன்னரே, பலரும் தாங்களாகவே முன்வந்து 3-வது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில், கடந்த மே மாதம் கொரோனா உச்சம் தொட்டிருந்த வேளையில், தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தைத் தொட்டது. இந்த நேரத்தில், புதிதாக பொறுப்பேற்ற தி.மு.க அரசு, முழுவீச்சில் கொரோனா ஒழிப்புப் பணியை முடுக்கிவிட்டதில், இன்றைய தினசரி பாதிப்பு என்பது 2 ஆயிரத்துக்கும் குறைவானதாக நிலைமை கட்டுக்குள் வந்திருக்கிறது.

கொரோனா 3-வது அலையை எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழகம் முன்மாதிரியாக விளங்கிவருகிறது. இந்த நேரத்தில், 3-வது தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் மக்களிடையே எழத் தொடங்கியிருக்கின்றன. அதில், '3-வது டோஸ் தடுப்பூசி என்றால் என்ன, அவசியம் 3-வது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டுமா? இந்தியாவில் 3-வது டோஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்' என்பது போன்ற அடிப்படைக் கேள்விகளில் ஆரம்பித்து, யார், யார் இதைச் செலுத்திக்கொள்ள வேண்டும், ஏற்கெனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள வேண்டுமா, என்பதுவரை ஆயிரமாயிரம் கேள்விகள் அணிவகுக்கின்றன.

ஃபரூக் அப்துல்லா

இந்நிலையில், கொரோனா 3-வது டோஸ் தடுப்பூசி குறித்த விவரங்களைக் கேட்டு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசியபோது, ''கொரோனாவை ஒழிப்பதில், தடுப்பூசிகளின் பங்கு முதன்மையானது. இந்தத் தடுப்பூசிகள் ஒவ்வொன்றுக்குமே 'பூஸ்டர்' டோஸ் என்பது தேவையான ஒன்றுதான் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த 'பூஸ்டர்' டோஸ் என்பது எப்போது தேவை என்ற விஷயத்தில் பல்வேறு மாற்றுக் கருத்துகள் இருந்துவருகின்றன.

ஏனெனில், தற்போது இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டால், அவை கொரோனாவுக்கு எதிராக ஒருவருடம் வரையிலும் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் மூலம் நம் உடலுக்குக் கிடைத்திருக்கும் எதிர்ப்பு சக்தியானது திறம்பட வேலை செய்துவரும்போதே, மூன்றாவது தவணையாக ஒரு 'பூஸ்டர்' டோஸ், செலுத்திக்கொண்டால் அதனால் எந்தப் பயனும் இல்லை.

Also Read: மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை! - அதிமுக கிளைச் செயலாளரை கைது செய்த காவல்துறை

அப்படியென்றால், இந்த 'பூஸ்டர்' டோஸ் என்பது எப்போது தேவை என்ற கேள்வி எழுகிறது. அதாவது, தற்போது நாம் செலுத்திக்கொண்டுள்ள இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறனுக்கெல்லாம் அப்பாற்பட்டு, கொரோனா கிருமியின் பரிணாமம் முற்றிலும் வேறுபட்ட நிலையில் பரவத் தொடங்கலாம். அப்போது பலமிக்க அந்தக் கொரோனா கிருமியை எதிர்கொள்வதற்கு நமக்கு 'பூஸ்டர்' டோஸ் தேவையாக இருக்கிறது. இதை மூன்றாவது டோஸ் தடுப்பூசி என்று சொல்வதைவிட, கொரோனா கிருமியின் உருமாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலான தடுப்பூசி என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், குறிப்பிட்ட கால இடைவெளியில் கொரோனா கிருமி பரிணாமம் அடைந்து வலிமை பெற்றுவரும்போது, அதனை எதிர்கொள்ளும் விதமாக அந்தந்த கால இடைவெளியில் நாமும் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டே ஆகவேண்டும் என்ற சூழலும்கூட ஏற்படலாம்.

கொரோனா வைரஸ்

எனவே, தற்போதைய தடுப்பூசிகளின் எதிர்ப்பு சக்தியையும் தாண்டிய கொரோனா கிருமித் தொற்று ஏற்படும் காலத்தில்தான் நாம் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள அவசியம் ஏற்படும். அப்போது, வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள், எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், 90 % கோவி ஷீல்டு தடுப்பூசிகள்தான் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனம், அடுத்ததாக மூன்றாவது டோஸ் தடுப்பூசி தயாரிப்பு குறித்தப் பணியில் இருந்துவருகிறார்கள். இந்த டோஸானது 'பீட்டா' எனப்படும் உருமாறிய வைரஸை எதிர்கொள்ளும்விதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பரிசோதனைகள் எல்லாம் முழுமையாக முடிக்கப்பட்ட பிறகுதான் நாம் மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ள முடியும். இந்தத் தடுப்பூசி தற்போதைய டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிராகவும் திறம்பட வேலை செய்யும்.

Also Read: மதுரை: பெரிய கண்மாய் மடையில் பழங்காலக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு... சொல்லும் தகவல் என்ன?

முன்னேறிய நாடுகள் பலவும் இந்த டெல்டா வைரஸை எதிர்கொள்ளும் விதமாக இப்போதே மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களும்கூட இந்த டோஸை எல்லோருக்கும் வழங்கவில்லை. வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கிவருகிறார்கள். அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளாதவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்துவருகிறார்கள். இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்கள் வெறும் 8 % மட்டுமே. இந்த நிலையில், நாம் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து யோசிப்பது சரிப்பட்டு வராது. மாறாக, இந்திய அரசே மூன்றாவது டோஸ் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தலாம் என்று முடிவெடுத்தால், ஏற்கெனவே முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதில் யார், யாருக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்பட்டதோ, அதே வரிசையில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம். ஏனெனில், முதல் மற்றும் இரண்டாவது கொரோனா அலைகளில் அதிக எண்ணிக்கையிலான மரணம் என்பது 45 வயதைக் கடந்தவர்கள் மத்தியிலேயே நிகழ்ந்திருக்கிறது. எனவே, வயது முதிர்ந்தவர்கள், எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்!'' என்கிறார் விளக்கமாக.

ராதாகிருஷ்ணன்

இதையடுத்து, இந்திய அளவில் மூன்றாவது தடுப்பூசி குறித்த அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ''கொரோனா ஒழிப்புக்கான தடுப்பூசி குறித்த முடிவுகளை எடுப்பதற்காகவே தேசிய அளவில் தொழில்நுட்பக் குழு ஒன்று (National Expert Group on Vaccine Administration)அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் குறித்த முடிவுகளை மத்திய அரசு எடுக்கும். அப்படி மத்திய அரசு எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில்தான் மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் தனிப்பட்ட எங்களுடைய கருத்து என்று எதுவும் இல்லை'' என்கிறார் தெளிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/doubts-and-explanations-on-corona-3rd-dose-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக