என் குழந்தைகள் 2 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை கொரோனாவிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? தற்போதைய சூழலில் கொரோனா குழந்தைகளிடம் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன்.
``18 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி இல்லை என்பதை நாம் அனைவருமே அறிவோம். இந்த நிலையில் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் செய்ய வேண்டிய முதல் விஷயம், வீட்டிலுள்ள 18 வயதுக்கு மேலான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது. அடுத்த முக்கியமான விஷயம், நாம் பல மாதங்களாக வலியுறுத்தும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது, கைகளைக் கழுவுவது. இவற்றை வீட்டுக்கு வெளியே மட்டுமன்றி வீட்டுக்குள்ளேயும் அவசியம் பின்பற்ற வேண்டும்.
வெளியே சென்றுவிட்டு வரும் பெரியவர்கள், வீட்டுக்குள் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்கள் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வீட்டுக்குள் மாஸ்க் அவசியமில்லை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். குழந்தைகளுக்கு கைகழுவ வேண்டியதன் அவசியம் மற்றும் கைகளை முகத்துக்கு கொண்டுபோகாமலிருப்பது பற்றியெல்லாம் கற்றுத்தர வேண்டியது முக்கியம்.
Also Read: Covid Questions: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டால் குழந்தை எதிர்ப்பு சக்தியுடன் இருக்குமா?
2 வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்கிறவர்கள் அதைத் தொடர வேண்டும். வீட்டில் யாருக்காவது சளி, காய்ச்சல் இருந்தால், குழந்தைகளை இன்னும் கவனமாகக் கையாள வேண்டும். 2 வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்க கைடுலைன் கிடையாது. எனவே சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனை தவிர அவர்களை கூட்டம் கூடும் கடைகள், விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.
குழந்தைகளை செக்கப் அல்லது வேறு தடுப்பூசிகளுக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போதும் முன்கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்கி, கூட்டமில்லாத நேரத்தைத் தேர்ந்தெடுக்கலாம். வீட்டுக்கு வந்தபிறகும் அதிகபட்ச சுகாதாரத்தைப் பின்பற்ற வேண்டும். ஒருவேளை குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருந்தால், பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய காய்ச்சல், இருமல், சளி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அதே அறிகுறிகள்தான் இருக்கும். பலரும் குழந்தைகளிடம் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம், டீஹைட்ரேஷன்.
குழந்தை தாய்ப்பால் உள்பட எதையும் குடிக்க மறுக்கிறது, சாப்பிட மறுக்கிறது, அழுதுகொண்டே இருக்கிறது என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரிதாக சில குழந்தைகளுக்கு மல்ட்டி இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் எனப்படும் MIS-C வரலாம். கோவிட் தொற்றுடன், குழந்தையின் உடலில் தடிப்புகள், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் தென்பட்டால் அதிகபட்ச கவனம் அவசியம்.
Also Read: Covid Questions: கடந்த மாதம் எனக்கு சிசேரியன் நடந்தது; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை, கேட்ட வார்த்தைகளைத் தான் பேசுகிறார்கள். எனவே அவர்கள் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றோர்களைப் பார்த்தே கற்றுக் கொள்கிறார்கள். அந்த விஷயங்களை பெற்றோர் சரியாகச் செய்தால் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.
இவை தவிர ஆரோக்கியமான, சரிவிகித உணவுகளைக் கொடுக்க வேண்டியதும் மிக மிக முக்கியம்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/what-are-the-preventive-measures-to-protect-children-from-covid-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக