Ad

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

`கொஞ்சம் இனிப்பு, அதிக கசப்பு’ - திமுகவின் 100 நாள் ஆட்சி குறித்து அண்ணாமலை

சுதந்திரப் போராட்ட வீரர், ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய மீன்வளம், தகவல் ஒலிபரப்புத் துறை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ”தமிழகத்தில் தி,மு.க அரசு புதிதாகப் பொறுப்பேற்று 100 நாட்களுக்கு மேல்தான் ஆகிறது.

அண்ணாமலை

குறைந்தபட்சம் 6 மாத காலத்திற்குப் பிறகே தி.மு.க ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்ட முடியும். அதுதான் மரபும்கூட. எனினும், தி.மு.க ஆட்சியின் இந்த 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம் போன்றது. இதில், இனிப்பு என்னவென்றால், மத்திய அரசுடன் இணைந்து கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தியுள்ளதுதான். கசப்பு என்னவென்றால், ஒன்றிய அரசு என்பதில் ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருகின்றனர். தமிழகத்தில் அநேக இடங்களில் பா.ஜ.க தொண்டர்களை வேண்டுமென்றே குறி வைத்து கைது செய்துள்ளனர்.

Also Read: அண்ணாமலை ஆட்டம், ராமதாஸ் ரூட்; பதறும் எடப்பாடி !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட வழக்கு. அந்த வழக்கை, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வழக்கை மீண்டும் கையிலெடுப்பது போலவே தோன்றுகிறது. இதுபோலவே, அமலாக்கப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவினரின் சோதனைகளையும் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் விட்டுவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகளையும், கொரோனா மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதைத் தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

அண்ணாமலை

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 54 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 2.5 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. எனவே அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

Also Read: `ஐ.பி.எல் நினைப்பிலேயே திமுக எம்.பி-க்கள் நாடாளுமன்றம் செல்கின்றனர்!’ - அண்ணாமலை



source https://www.vikatan.com/news/politics/100-days-of-dmk-rule-is-a-mixture-of-sweet-and-bitter-says-tamilnadu-bjp-leader-annamalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக