Ad

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

14 நாட்கள் போன் கூட எடுக்கல! இளைஞரின் பொன்னியின் செல்வன் வாசிப்பனுபவம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழின் ஆகச்சிறந்த நாவலான "பொன்னியின் செல்வன்" நாவல் தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்களால் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் கதாபாத்திரங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியது படக்குழு. இருப்பினும் மதுராந்தகன், வானதி, ரவிதாஸன், சேந்தன் அமுதன், பூங்குழலி, செம்பியன் மாதேவி, சம்பு வரையர், கந்த மாறன், அநிருத்தர் போன்ற கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்பதையும் படக்குழு தெரிவித்து இருக்கலாம்.


எந்த வேலையும் செய்யாமல் முழுக்க முழுக்க வாசிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் சரியாக பதினான்கு நாட்களில் பொன்னியின் செல்வன் நாவலை படித்து முடிக்கலாம். ஒரு நாளுக்கு இத்தனை பக்கங்கள் படிக்க வேண்டும் என்று நமக்கு நாமே நிபந்தனை வைக்காமல் புத்தகத்தை அதன் போக்கில் வாசித்தால் போதும். மற்றபடி படித்து முடிக்க நாம் மெனக்கெட தேவையில்லை.

பொன்னியின் செல்வன்

ஒரு நல்ல புத்தகம் வாசகனின் மனதை அதுவாகவே உள்ளீர்த்துக் கொள்ளும். பொன்னியின் செல்வன் அப்படித்தான். அந்தப் புத்தகத்தை படிக்கும்போது என்னையறியாமல் அந்தப் புத்தகத்தில் மூழ்கிப் போனேன். தொடர்ந்து அதை வாசிக்க வாசிக்க தற்கால உலகில் உடலை மட்டும் வைத்துக் கொண்டு மனதை அதன்போக்கில் புத்தகத்திற்குள் திரிய விட்டேன். அதனால் தான் வெறும் பதினான்கு நாட்களில் அவ்வளவு பெரிய பொன்னியின் செல்வன் நாவலை படிக்க முடிந்தது. இந்த பதினான்கு நாட்கள் நான் போன் உபயோகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு பொன்னியின் செல்வன் புத்தகம் என்னை கட்டுக்குள் வைத்திருந்தது. டைம் மிஷின் ஒன்றில் ஏறி பொன்னியில் செல்வன் உலகிற்குள் பயணித்து வந்ததை போன்ற ஒரு அனுபவத்தை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது.

பொன்னியின் செல்வனில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் மிக சுவாரஸ்யமானது என்றால் அது நந்தினி கதாபாத்திரம் தான். அந்தக் காலத்திலேயே ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட படைப்பு. நந்தினியின் கம்பீரம் படையப்பா படத்தின் நீலாம்பரியை நினைவூட்டியது. பிறகு யாரோ சொல்லி தான் தெரிய வந்தது நீலாம்பரி கதாபாத்திரம் நந்தினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதாபாத்திரம் என்று.

பொன்னியின் செல்வன்

நந்தினியை அடுத்து நம் மனம் கவரும் கதாபாத்திரம் என்றால் அது ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் தான். அவருடைய கம்பீரம் பற்றிய விவரிப்புகளில் வந்தியத்தேவனும் அருள்மொழிவர்மனும் ஓரங்கட்டபட்டு ஆதித்த கரிகாலன் தான் மாஸ் ஹீரோ என்பது போல கதை எழுதப்பட்டிருக்கும். அதிலும் ஆதித்த கரிகாலன் கொல்லப்படும் இடமெல்லாம் வாசிக்கும்போது அவ்வளவு நுட்பமாக மிக சுவாரஸ்யமாக இருக்கும். "ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு" என்ற தலைப்பில் எழுத்தாளர் சரவண கார்த்திகேயன் ஒரு தொடரே எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கதாபாத்திரத்துக்கு விக்ரம் என்றதும் சரியான தேர்வு தான் என்றது உள்மனம்.

அடுத்ததாக மனம் கவர்ந்தவர் ஆழ்வார்க்கடியான். கிட்டத்தட்ட காமெடியன் கதாபாத்திரம் போல். ஹீரோ வந்தியத்தேவன் எப்போதெல்லாம் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாரோ அப்போதெல்லாம் சரியாக வந்து காப்பாற்றிவிடுவார் ஆழ்வார்க்கடியான். இந்தக் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் "இதோ வந்துட்டான்ல... என் தலைவன்..." என்று என்னை மீறி எனக்குள் சிரிப்பு தோன்றியது. குள்ளமான தொப்பை வைத்த இந்த கதாபாத்திரத்துக்கு மணிரத்னம் குழு ஜெயராமை நியமித்தது ஏன் என்று தெரியவில்லை.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் கதை நாடகமாகவும் இன்றும் சில நாடக குழுக்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. TVK Cultural academy மற்றும் The real theatre people குழுவினர் இணைந்து நடத்திய பொன்னியின் செல்வன் நாடகத்தை 22.12.2019 அன்று மாலை 6.00 - இரவு 10.30 நேரத்தில் சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் காண முடிந்தது. புத்தகத்தை வாசித்தவர்கள் முடிந்தால் மேடை நாடகங்களையும் பாருங்கள். நான்கு மணி நேரத்திற்குள் ஒட்டுமொத்த பொன்னியின் செல்வனையும் காட்சிபடுத்துகிறார்கள். ஆனால் அவை வாசிப்பு தந்த உணர்வை எனக்கு தரவில்லை. நிறைய இடங்களில் போர் அடித்தது. அடிக்கடி போனை எடுத்து டைம் பார்க்க வைத்தது நாடகம். இருப்பினும் ஒரு தடவை பார்க்கலாம், தப்பில்லை.


இப்போது முதன்முறையாக திரைப்படமாக உருவெடுக்க இருக்கிறது பொன்னியின் செல்வன். வாசிப்பு தந்த அந்த மறக்க முடியாத டைம் மிஷின் அனுபவத்தை திரைப்படம் தருமா என்பது கேள்விக்குறியே. முக்கியமான கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இருப்பினும் ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் நாவலையும் தாங்கிப் பிடிக்கும் நந்தினியாக நடிப்பவரின் தேர்வு மட்டும் சரியில்லை என்று தோன்றுகிறது.


- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-ponniyin-selvan-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக