Ad

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

`கலெக்‌ஷன், கரப்ஷன்... இவைதான் திமுக-வின் 100 நாள் சாதனை’-ஆளுநரைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுக-வினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரை ஏவி, சோதனை என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுவருவதாகவும், கொடநாடு கொலை வழக்கில் அதிமுக-வினர் மீது அவதூறு பரப்பும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுவருவதாகவும், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அதிமுக முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

ஆளுநர் சந்திப்பில் அதிமுக-வினர்

ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ``தற்போதைய திமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்களின் பாக்கெட்டை நிரப்புவதிலேயே மும்முரமாக இருக்கிறார்கள். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை மறைப்பதற்காக எங்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், தொண்டர்கள் மீதும், கழக நிர்வாகிகளின் மீதும் பொய்யான வழக்கைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குறிக்கோளே, ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல். அவற்றைத்தான் திமுக அரசு செய்துகொண்டிருக்கிறது" என்றார் காட்டமாக.

மேலும், ``கலெக்‌ஷன், கரப்ஷன், வெண்டேட்டா' இவைதான் திமுக அரசு. 100 நாளில் வசூல் செய்துதான் சாதனை படைத்துள்ளார்கள். அரசு உயரதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை, தமிழ்நாடு முழுவதும் பணியிட மாற்றம் செய்ததுதான் அவர்களின் நூறு நாள் சாதனை. திமுக அரசு பொறுப்பேற்ற இந்த நூறு நாள்களில் மக்கள் வேதனையையும், சோதனையையும்தான் பெரும்பாலும் அடைந்திருக்கிறார்கள். அம்மாவின் அரசில் போடப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கடந்தகால ஆட்சியில் தொடங்கப்பட்வை என்று கருதி இன்றைய திமுக அரசு அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறது. எந்தப் பணியையும் செய்யாமல், மக்களுக்குப் பயன்படக்கூடிய திட்டங்களையெல்லாம் திமுக அரசு முடக்கியுள்ளது" என்று பேசினார்.

ஆளுநர் மாளிகையில் அதிமுக-வினர்

தொடர்ந்து பேசியவர், ``இன்று கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதற்கான மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஏழை எளிய மக்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கிடைத்துக்கொண்டிருந்தது. அந்தத் திட்டத்தையும் இந்த திமுக அரசு முடக்கிவைத்திருக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்கள்தான் செய்ய வேண்டும் என்று அதிகாரம் செலுத்திவருகிறார்கள்" என்றார்.

மேலும், ``கடந்த முறை திமுக ஆட்சியிலிருந்தபோது கிட்டத்தட்ட 13-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த வழக்குகளையெல்லாம் விரைந்து முடிக்க முற்பட்டுவருகிறது அரசு. அதை மறைப்பதற்காக எங்களின் முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை என்ற பெயரில் வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். கொடநாடு சம்பந்தப்பட்ட வழக்கில், சயானின் கூட்டாளிகள் அத்துமீறி அந்த இல்லத்துக்குள் சென்று கொள்ளையடித்து, அந்தக் காவலாளிகளைக் கொலை செய்திருக்கிறார்கள். அது சம்பந்தமாக வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளது" என்று கூறினார்.

ஆளுநர் மாளிகையில் அதிமுக-வினர்

தொடர்ந்து, ``வழக்கு முடியும் தறுவாயிலுள்ள இந்த நேரத்தில் மீண்டும் அந்த விசாரணையில் புதிதாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். `தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்’ என்று கூறுகிறார். தேர்தல் அறிக்கைக்கும் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. ரகசிய விசாரணை என்ற பெயரில் எனது பெயர் உட்பட இன்னும் சிலரின் பெயரை இணைத்துக்கொண்டதாகக் கூறுகிறார்கள். அது உண்மையா என்பது தெரியவில்லை. பத்திரிகையில் வந்த செய்திகளின் அடிப்படையில் இதை நான் குறிப்பிடுகிறேன்" என்று பேசினார்.

விகடன் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் `ஆதலினால் காதல் செய்வீர்’ தொடரின் Promo...


source https://www.vikatan.com/government-and-politics/politics/corruption-collection-vendetta-this-is-the-100-day-record-of-the-dmk-government-edappadi-palanisamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக