Ad

திங்கள், 12 ஜூலை, 2021

உத்தரப்பிரதேசம்: அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கை; அவசியமா, ஆபத்தா?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. விரைவில் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் நாடக இந்தியா இடம்பெறும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அதிக மக்கள்தொகை கொண்ட முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 19.98 கோடி மக்கள் உத்தரப்பிரதேசதில் உள்ளனர். இந்த மக்கள்தொகையானது 2021-ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 24 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை

இந்நிலையில் உலக மக்கள்தொகை தினமான ஜூலை 11-ம் தேதி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவை வெளியிட்டார். அப்போது "மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் உத்தரப்பிரதேசத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தை 2.1 சதவிகிதமாகக் குறைக்க அரசு விரும்புகிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அனைத்து பிரிவினருக்கும் மகிழ்ச்சி உண்டாக்க முடியும். சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில்கொண்டுதான் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது" என்று அம்மாநில முதல்வர் பேசினார்.

இந்த புதிய மசோதாவைப் பொறுத்தவரை, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் குடும்பத்திற்கு அந்த குழந்தைக்கு இலவச கல்வி, மருத்துவம் போன்ற பல சலுகைகள் கிடைக்கும். இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்பவர்களுக்குப் பணிக்காலத்தில் சம்பள உயர்வு, 12 மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். அதேபோல, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்கள் அரசு வேளையில் விண்ணப்பிக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கனவே அரசு வேளையிலிருந்தால் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளை அதிகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத்

தற்போதைய உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையானது ரஷ்யா (14.5 கோடி), ஜப்பான் (12.64 கோடி), ஜெர்மனி(8.37 கோடி), இங்கிலாந்து (6.78 கோடி), கனடா (3.77 கோடி) போன்ற பல்வேறு உலக நாடுகளின் மக்கள் தொகையைவிட மிக அதிகம். பரப்பளவு அடிப்படையில் மிகப்பெரிய மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் முதல் மாநிலமாக இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 3.0 சதவிகிதமாக உள்ளது. அதை 2.1 சதவிகிதமாகக் குறைக்க அந்த மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

புதிய கொள்கை அவசியமா ஆபத்தா.?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனா முன்னொரு காலத்தில் 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற கொள்கையை மிகக் கடுமையாகப் பின்பற்றி வந்தது. அந்த முடிவிலிருந்த பின்வாங்கிய சீன அரசு கடந்த 2016-ம் ஆண்டு இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிவந்தது. தற்போது, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறது. சீனாவில் மட்டுமில்லை உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. சமீபத்திய ஆய்வில், ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளின் மக்கள் தொகை வரும் 2100-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைவாகும் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

மக்கள் தொகை

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்? மக்கள்தொகை குறைவது நல்ல விஷயம் தானே என்று? அப்படி கிடையாது… 128 மில்லியனாக இருக்கும் ஜப்பானின் மக்கள்தொகை 2100-ம் ஆண்டு 53 மில்லியனாக குறைந்திருக்கும். 61 மில்லியனாக இருக்கும் இத்தாலியின் மக்கள்தொகை 28 மில்லியனாகக் குறைந்திருக்கும். இப்படிப் பல நாடுகளின் மக்கள்தொகையும் பாதிக்கும் குறைவாக இருக்கும். குழந்தை பிறக்கும் விகிதம் குறையும்போது, ஒரு கட்டத்தில் அந்த நாட்டில் குழந்தைகளும், இளையவர்களைவிட வயதானவர்கள்தான் அதிகம் இருப்பார்கள். இது சமூகக் கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விஷயங்களைக் கருத்தில்கொண்டுதான், ஒரு குழந்தை போதும் என்று கூறிக்கொண்டிருந்த பல்வேறு நாடுகளும் தற்போது அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையைச் சமாளிக்க சில நாடுகள் ஒருபடி மேலே சென்று குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கிக்கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை ( மாதிரி படம் )

தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த 1981-ம் ஆண்டு 3.4 சதவிகிதமாக இருந்த குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதம் 2017-ம் ஆண்டுக் கணக்கின் படி 1.6 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதமானது 2.1 சதவிகிதமாக இருப்பதே சிறந்தது என்றும். இப்படி தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே சென்றால் நாளடைவில் தமிழகத்தின் பல்வேறு கட்டமைப்பில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

உலகநாடுகள் பலவும் தங்களின் தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் குழந்தை கொள்ளும் விகிதத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் உத்தரப் பிரதேசத்தின் இந்த முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறன.



source https://www.vikatan.com/news/general-news/uttar-pradesh-governments-population-control-policy-was-necessary-or-dangerous-one

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக