ஆஸ்ட்ராஜெனிகா-ஆக்ஸ்ஃபோர்டு தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்ட இந்தியர்கள் ஐரோப்பிய யூனியனுக்குப் பயணிப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராகவுள்ள நாடுகளுக்குள் நுழைவதற்கு இம்யூனிட்டி சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் தங்கள் நாடுகளில் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய நடவடிக்கை பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராகவுள்ள நாடுகளுக்குப் பயணிக்க, இம்யூனிட்டி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; அப்போதுதான் அவர்களுக்கு தங்கள் நாடுகளுக்குள் வருவதற்கு கிரீன் பாஸ் கொடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தன் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், கிரீன் பாஸ் என்பது இந்தியாவில் இருக்கும் இ-பாஸ் நடைமுறையைப் போன்றதுதான். இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் பயணிக்க இ-பாஸ் வாங்குவதைப் போல, ஐரோப்பிய யூனியனிலுள்ள 27 நாடுகளுக்குள் பயணிக்க கிரீன் பாஸ் வாங்க வேண்டும். இதை வாங்குவதற்கு ஒருவர் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது பயணம் செய்வதற்கு 90 நாள்களுக்கு முன் கோவிட் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தவராக இருக்க வேண்டும்.
இணையவழியில் டிஜிட்டலாக வழங்கப்படவுள்ள இந்த இம்யூனிட்டி சான்றிதழ், ஐரோப்பிய யூனியனுக்குள் பயணிப்பவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தனிமைப்படுத்தப்படுதல், கோவிட் பரிசோதனைகளுக்கு உட்படுதல் போன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சான்றிதழ்களை இணைய வழியில் இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம். க்யூ.ஆர் கோடு வசதிகளுடன்கூடிய இந்தச் சான்றிதழை வாங்கிவிட்டால், ஐரோப்பிய யூனியனிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுதல், தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகாமலே பயணிக்க முடியும்.
ஸ்பெயின், ஜெர்மனி, கிரீஸ், போலந்து ஆகிய நாடுகள் ஏற்கெனவே இதை அமலுக்குக் கொண்டுவந்துவிட்டன. மற்ற நாடுகள் ஜூலை 1-ம் தேதி முதல் இதை அமல்படுத்தப்போவதாகச் சொல்லப்பட்டது. அதேநேரம், இம்யூனிட்டி சான்றிதழ் வழங்கும் விதிமுறைகளில் ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள நான்கு தடுப்பூசிகள் போக, மற்ற தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கும் அனுமதி வழங்க, உறுப்பு நாடுகள் அதனதன் பயண விதிமுறைகளின்படி முடிவு எடுக்கலாம் என்று ஐரோப்பிய யூனியனுடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் சமீபத்தில் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில்தான், அங்கு ஒப்புதல் பெற்ற தடுப்பூசியைப் போட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு (European Medicines Agency) இதுவரை, ஃபைஸர்/பயோடெக் நிறுவனத்தின் கமிர்னாடி (Comirnaty), ஆஸ்ட்ராஜெனிகா-ஆக்ஸ்ஃபோர்டின் வாக்ஸ்செவ்ரியா (Vaxzervria), மாடர்னா (Moderna), ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஜான்சென் (Janssen) ஆகிய தடுப்பூசிகளை அதில் உறுப்பினராகவுள்ள நாடுகளில் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. ஐரோப்பிய யூனியனுக்குள் ஒருவர் பயணிக்க, இவற்றில் ஒரு தடுப்பூசியைச் செலுத்தியிருந்தால் கிரீன் பாஸ் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி, ஐரோப்பிய யூனியனில் பயன்பாட்டில் இருக்கும் வாக்ஸ்செவ்ரியா தடுப்பூசி ஆகிய இரண்டுமே ஆஸ்ட்ராஜெனிகா-ஆக்ஸ்ஃபோர்டு தயாரிப்புதான் என்றாலும், கோவிஷீல்டுக்கு அங்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இந்தியாவில் பெரும்பகுதி மக்கள்தொகை, பூனேவிலுள்ள சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆஸ்ட்ராஜெனிகா-ஆக்ஸ்ஃபோர்டு தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒரே நிறுவனத்தின் தயாரிப்பாகவே இருந்தாலும் கோவிஷீல்டுக்கு அங்கு அனுமதி இல்லாததால், ஐரோப்பிய யூனியனுக்குள் செல்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து பயணிக்கவுள்ள கோவிஷீல்டு போட்டுக்கொண்ட பயணிகளிடையே என்ன மாதிரியான தாக்கத்தை இது உண்டாக்கும் என்பது இதுவரை தெளிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய மக்களிடையே பயன்பாட்டிலிருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் பட்டியலிடப்பட்டிருந்தாலும் அதற்கு ஐரோப்பிய யூனியனில் இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளிடையே எந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை ஏற்றுக்கொள்ளும், ஏற்றுக்கொள்ளாது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சீரம் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி அடார் பூனவாலா, ``இந்தியர்கள் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதால் எவ்வித பயணச் சிக்கல்களையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வோம். இந்தியாவிலிருந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட பலரும் ஐரோப்பிய யூனியனுக்குச் செல்வதில் சிக்கல்கள் இருப்பது எனக்குப் புரிகிறது. அந்தந்த அரசுகளிடையிலும் இதற்கான கட்டுப்பாட்டு அமைப்புகளிடமும் இந்தப் பிரச்னையை எடுத்துச் செல்கிறோம்" என்று கூறினார்.
ஆனால், தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால்தான் வெளிநாட்டுக்கு பயணிக்க முடியும் என்றோ, குறிப்பிட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால்தான், ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள் நுழைய முடியும் என்றோ, இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிப்பையும் உலக நாடுகள் எதுவும் வெளியிடவில்லை என்கிறார் ஒன்றிய அரசுடைய புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
அவரிடம் பேசியபோது, ``கிரீன் பாஸ் என்பது வெளிநாடுகளிலிருந்து ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளுக்குச் செல்வதற்கானது அல்ல. அந்த யூனியனுக்குள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பயணிப்பதற்கு வாங்க வேண்டியது. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்குள் செல்வதற்கு இதுவரை எந்தத் தடையுமில்லை. சர்வதேச பயணிகளை இந்தத் தடுப்பூசியைத்தான் போட வேண்டும், அப்போதுதான் விசா கொடுப்போம் என்று கட்டாயப்படுத்த முடியாது.
Also Read: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக ஆன்டிபாடி உருவாகுமா? - புதிய ஆய்வு சொல்வது என்ன?
சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில், சர்வதேச பயணிகளுக்கு இந்தத் தடுப்பூசியைத்தான் போட்டிருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. இரண்டாவதாக, தடுப்பூசி போட்டிருந்தால்தான் சர்வதேச பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதுதான் வாக்சின் பாஸ்போர்ட் எனப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுப் பேரிடர் தொடங்கியபோதே, வாக்சின் பாஸ்போர்ட் போன்ற விஷயங்கள் பேசப்பட்டன. அதுகுறித்த ஆலோசனைகள் நடந்துவருகின்றன. ஆனால், தற்போது அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒருவர் தடுப்பூசி போடவில்லை என்றால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும். மற்றபடி, தடுப்பூசி போட்டிருந்தால்தான் பயணிக்கவே முடியும் என்றில்லை" என்று கூறினார்.
மேலும், ஐரோப்பிய யூனியனில் அமல்படுத்தப்படும் கிரீன் பாஸ் விதிமுறைகளில்கூட, அதை வாங்கியாக வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தப்படவில்லை. ஒருவர் கிரீன் பாஸ் வாங்கியிருந்தால் அவர், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல், தனிமைப்படுத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளாகத் தேவையில்லை. கிரீன் பாஸ் இல்லையென்றால் தன்னுடைய பயணத்தின்போது அவற்றுக்கு உட்படவேண்டும் என்றுதான் ஐரோப்பிய யூனியன் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் யூனியனில் உள்ள நாடுகளுக்குள் சென்று வருவதையும் இந்த இணைய சான்றிதழ் உறுதி செய்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த அரசன், ஜெர்மனியில் உள்ள அல்லையன்ஸ் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் பிரிவின் குளோபல் கம்யூனிட்டி மேனேஜராகப் பணியாற்றி வருகிறார். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கும் பயணிக்கும் வழக்கம் உள்ள அவரிடம் தற்போதைய ஐரோப்பிய சூழல் குறித்துக் கேட்டபோது, ``வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் தடை இல்லை என்றோ இருக்கிறது என்றோ அறுதியிட்டுக்கூற முடியாது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவிதமான விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன.
உதாரணத்துக்கு, ஸ்விட்சர்லாந்து நாட்டை எடுத்துக் கொண்டால், அங்கே ஆறு நிறுவனங்களின் (ஆஸ்ட்ராஜெனிகா (Covishield incl.), ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அன் ஜான்சன், சினோபார்ம் மற்றும் சிநோவாக்) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்தவகையான கட்டுப்பாடுகளும் இல்லை. இவை தவிர, வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் தடுப்பூசி போடாதவர்களும்கூட வரலாம். ஆனால், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள் என்பதைப் பொறுத்து நாட்டுக்குள் வந்ததும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Also Read: சான்றிதழில் ஒரு தேதி; குறுஞ்செய்தியில் ஒரு தேதி; தடுப்பூசி குழப்பம் ஏன்?
உருமாறிய கொரோனா பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள், வருவதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை (PCR / Rapid ஆன்டிஜென்) செய்துகொள்ள வேண்டும், வந்த பின் 10 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்விட்சர்லாந்து நாட்டைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலில் தற்போது இந்தியா, நேபாளம் மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் மட்டுமே உள்ளன. இந்தப் பட்டியிலில் இல்லாத நாடெனில் கொரோனா பரிசோதனை (PCR / Rapid ஆன்டி-ஜென்) மட்டுமே போதுமானது.
இதற்கு மாறாக, ஜெர்மனி கணிசமாக வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பாதுகாப்பான பட்டியல் நாடுகள் (16 நாடுகள்) மற்றும் உருமாறிய கொரோனா பரவியுள்ள நாடுகள் (16 நாடுகள்) என வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகைகளில் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நுழைவு விதிகள் மற்றும் சோதனைத் தேவைகளைக் கொண்டுள்ளன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான நாடுகள் ஆகிய பட்டியல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததற்கான ஆதாரத்துடன் அல்லது கோவிட் நெகட்டிவ் சான்றிதழோடு ஜெர்மனியில் விமானம் மூலம் சுதந்திரமாகப் பயணிக்க முடியும்.
இந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் நிலத்தின் மூலம் ஜெர்மனியில் நுழைந்தால் சோதனை தேவை இல்லை. நீங்கள் உருமாறிய கொரோனா பரவியுள்ள நாடுகளில் (இந்தியா உட்பட) ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என்றால், தடுப்பூசி நிலை எதுவாக இருந்தாலும் நீங்கள் ஜெர்மனியில் நுழைய முடியாது. இருப்பினும், Highly-Skilled தொழிலாளர்கள், ஜெர்மன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் ஜெர்மன் குடிமக்கள் போன்றவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு உண்டு. ஜெர்மன் அரசாங்கம் இப்போது நான்கு தடுப்பூசிகளை (ஃபைஸர், மாடர்னா, ஆஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு உள்ளிட்டவை) மற்றும் ஜான்சன் & ஜான்சன்) ஏற்றுக்கொள்கிறது.
தடுப்பூசியைப் பொறுத்தவரை உலக சுகாதார நிறுவனம் சொல்வதைவிட, ஐரோப்பிய சுகாதார நிறுவனம் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்கிறது ஜெர்மனி. அதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை. இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் சிற்சில வேறுபாடுகளுடன்கூடிய கட்டுப்பாடுகள் ஐரோப்பாவில் இருக்கின்றன. அதேநேரம், இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு, அவசர வேலையாகவோ, படிப்பு மற்றும் பணியாற்றவோ ஐரோப்பாவுக்கு செல்லவே முடியாது என நினைக்க வேண்டாம்.
நாளுக்கு நாள் இந்தக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் வருகின்றன. உதாரணத்துக்கு, ஜூலை 1-ம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஐரோப்பாவின் ஒன்பது நாடுகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்கிற உத்தரவு வந்துள்ளது. இதுபோல, மற்ற நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தளரக்கூடும். நம்பிக்கையோடு காத்திருங்கள்'' என்று கூறினார்.
Also Read: Covid Questions: ஆரோக்கியமான டயட்; வெளியேவும் செல்வதில்லை; நானும் தடுப்பூசி போடவேண்டுமா?
அதோடு, ஐரோப்பிய யூனியனின் இந்திய தூதர் உகோ அஸ்டுடோ, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ``இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு எந்தத் தடையும் ஐரோப்பிய யூனியனில் இல்லை. யூனியனில் இருக்கும் 27 நாடுகளுக்குள் தடையின்றிப் பயணிப்பதற்காகத்தான், கிரீன் பாஸ் வழங்கப்படுகிறது. தடுப்பூசி போடாதவர்களும் கிரீன் பாஸ் மூலம் பயணிக்கலாம். ஆனால், அவர்கள் உடல் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். மற்றபடி, பயணிக்க எந்தத் தடையும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு கோவின் தளம் மூலம் வழங்கப்படும் சான்றிதழை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களைக் கட்டாயத் தனிமைப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சான்றிதழை ஏற்காமல் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/vaccinated-indians-are-eligible-to-enter-european-union-or-not
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக