Ad

திங்கள், 5 ஜூலை, 2021

நாமக்கல்: `டவர் இல்லை; ஆன்லைன் கிளாஸூக்கு சிரமம்!' -சிக்னலுக்காக மரத்தில் ஏறும் மாணவ, மாணவிகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக, மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே செல்போன், லேப்டாப்கள் வழியே ஆன்லைன் கிளாஸில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஆலமரத்தில் ஏறி அமர்ந்து ஆன்லைன் கிளாஸை அட்டென்ட் செய்யும் காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மரங்களில் அமர்ந்துள்ள மாணவர்கள்

Also Read: `அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால், ₹1000 பரிசு!' - அசத்தும் தலைமை ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இருக்கிறது, முள்ளுக்குறிச்சி. இந்த கிராமத்துக்கு அருகே இருக்கும் பெரப்பஞ்சோலை, மங்களபுரம் வழியாக முள்ளுக்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அதேபோல், இந்த ஊராட்சிக்கு அருகில் பெரியக்கோம்பை என்ற கிராமமும் உள்ளது. மலை அடிவாரக் கிராமங்கள் என்பதால், இங்கு செல்போன் டவர்கள் அமைக்கப்படாமல், செல்போன் சிக்னல் சரிவரக் கிடைப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.

மரங்களில் அமர்ந்துள்ள மாணவர்கள்

இந்த பகுதிகளைச் சுற்றி 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரும் தினமும் ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ள வேண்டிய சூழல். ஆனால், பெரப்பஞ்சோலை பகுதியில் சிக்னல் சரியாக கிடைக்காத சமயத்தியில், அருகில் இருக்கும் மரங்களில் ஏறி அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய மக்கள் தன்னுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் நல்வினைச்செல்வன், ``பெரப்பஞ்சோலை கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், செல்போன் சிக்னல் இங்கே வீக்காக உள்ளது. வீடுகளில் அமர்ந்து மாணவர்கள் ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளும்போது, அடிக்கடி சிக்னல் கட்டாகி, கிளாஸில் இருந்து அடிக்கடி வெளியே வரவேண்டிய சூழல். இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் க்ளாஸில் முழுமையாக இருக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு எந்த செல்போன் கம்பெனி டவர்களும் இல்லை என்கிறார்கள். அதனால், மாணவர்கள் சிக்னலுக்காக அருகில் உள்ள பலா மரம், ஆலரமம், வீட்டு மொட்டை மாடிகள், மலைக்குன்றுகள், மலை என்று உயரமான இடங்களில் ஏறி அமர்ந்துகொண்டு, ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்கிறார்கள்.

நல்வினைச்செல்வன்

இதில், மாணவிகள் சிலரும் அப்படி மரமேறி கிளாஸில் கலந்துகொள்ள வேண்டிய சூழல். இதனால், அவர்களுக்கு ஆபத்து இருக்கிறது. அதனால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, அந்தப் பகுதியில் நிலவும் செல்போன் சிக்னல் பிரச்னையைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக செல்போன் டவரை அந்தப் பகுதியில் அமைக்க ஏதாவது ஒரு நெட்வொர்க் நிறுவனம் முன்வர வேண்டும். மாணவர்களின் நலன் கருதி இந்த ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும்" என்றார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட நாமக்கல் உதவி ஆட்சியர் கோட்டைக்குமார், 'மாணவர்கள் சிக்னல் பிரச்னைக்காக மரங்களில் ஏறி அமர்ந்து ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்வதாக கேள்விப்பட்டேன். உடனே, அங்கு சென்று ஆய்வு செய்வதுடன், அங்கு சிக்னல் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்' என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/namakkal-village-students-attend-online-class-in-the-trees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக