Ad

புதன், 21 ஜூலை, 2021

குமரி: கேரளாவுக்கு கனிமவளம் கடத்திய 11 லாரிகள் பறிமுதல்! - இரு மடங்கு பாரம்; அதிகாரிகள் அதிர்ச்சி

கட்டுமானப் பணிகளுக்காக பாறைகளை உடைத்து பெறப்படும் கற்கள், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் என பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து கேரளாவுக்கு எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி என பல விதங்களில் கேரளாவுக்கு கடத்தி வருகின்றனர்.

கேரளாவில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகள், நான்கு வழிச்சாலை, விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்காக என தினம்தோறும் 50 டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் போன்றவைகளுக்கு அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால், தினமும் 700 லாரிகளுக்கும் மேல் கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர். தமிழக - கேரள எல்லை பகுதியான நெட்டா, களியக்காவிளை போன்ற சோதனை சாவடிகள் வழியாக டிப்பர் லாரிகள் அளவுக்கு அதிகமான பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.

தோட்டியோடு பகுதியில் அழிக்கப்படும் மலைகள்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் சென்றது. இதையடுத்தி கடந்த இரண்டு மாதங்களில் அதிகபாரம் ஏற்றிச் சென்றதாக இரண்டாயிரம் டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் 40 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், சில அதிகாரிகளின் ஆசியோடு லாரிகளில் அனுமதி இல்லாமல் கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்துவது அதிக அளவில் நடந்து வருகிறது. அபராதம் விதிப்பது கண்துடைப்புக்காக என சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டினர்.

Also Read: `ஆன் டூட்டி, ரயில்வே; லாரியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்!'- கனிமவள அதிகாரிகளைப் பதறவைத்த கும்பல்

மேலும் தமிழக மலைகளை உடைத்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக அதிக அளவு கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், இது தொடர்ந்தால் கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகள் விரைவில் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கனிமவள கடத்தலுக்கு எதிராக சில அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்தன. இதையடுத்து மாவட்ட வருவாய்துறை சார்பில் கேரள எல்லையோரப் பகுதிகளில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்

அதில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், முறையான அனுமதியில்லாமலும், அதிகபாரத்தோடு சென்ற 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 15 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரிகளில் 30 டன் கனிம வளங்கள் ஏற்றி செல்லப்பட்டது. 25 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரியில் 50 டன் ஏற்றி செல்வதும் தெரியவந்துள்ளது. லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட இரு மடங்கு அதிக பாரம் ஏற்றிச்செல்வதைக் கண்ட அதிகாரிகளே அதிர்ந்து போயினர்.



source https://www.vikatan.com/news/crime/lorry-seized-in-kerala-border-with-high-load-of-mineral-resources

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக