Ad

புதன், 21 ஜூலை, 2021

Covid Questions: சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் ஆன பின்னும் தொடரும் இருமல்; விடுபட என்ன வழி?

கொரோனா சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இருமல் தொடர்கிறது. இருமலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

- முருகதாஸ் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``கோவிட் -19 வைரஸ் என்பது சுவாச மண்டலத்தை பாதிப்பதால் தொற்றின் போதும், தொற்றிலிருந்து குணமான பிறகு சில மாதங்கள் வரையிலும் இருமல் இருக்கலாம். சிலருக்கு அது வறட்டு இருமலாக இருக்கும். அவர்கள் வாய் வழியே சுவாசிக்கக்கூடாது. வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். மூக்கு வழியாக சுவாசிக்கும் மூச்சுப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவர வேண்டும். தொண்டை எரிச்சல் அதிகமாக இருந்தால், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கரகரப்பைப் போக்குவதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

Also Read: Covid Questions: பென்சிலின், அனால்ஜின் மருந்துகள் அலர்ஜி; நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

சிலருக்கு கோவிட் தொற்றால் தொண்டைப் பகுதி மற்றும் சுவாச நரம்பிழைகளும் பாதிக்கப்படும். இதனாலும் தொடர் இருமல் (Sensory Neuropathic Cough) இருக்கும். இவர்களுக்கு நரம்பிழைகள் பாதிப்புக்கான மருந்தையும் கொடுக்க வேண்டியிருக்கும்.

சிலருக்கு இருமலுடன் சளியும் வெளிப்படும். இதை Productive Cough என்கிறோம். இதற்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Viral Pneumonia), அழற்சி (Inflammation), பிற பாதிப்புகள் (Pulmonary Fibrosis) போன்றவை காரணங்களாக இருக்கலாம். எனவே இவர்களுக்கு நெஞ்சுப்பகுதிக்கான எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள், சளி, ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படலாம்.

நுரையீரல் பாதிப்பின் தன்மைக்கேற்ப சளியை இலகுவாக்கி வெளியேற்றும் மருந்துகள், அழற்சியைக் குறைக்கும் மருந்துகள், நுரையீரல் பாதிப்பைக் குறைக்கும் மருந்துகள் போன்றவற்றை மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். தவிர இவர்களுக்கு மூச்சுப் பயிற்சியும் ஆவி பிடித்தலும் உதவும். நெஞ்சு சளியை வெளியேற்றவும் பயிற்சிகள் (Chest physiotherapy) தேவைப்படும்.

Steam Inhalation

Also Read: Covid Questions: உயர்கல்விக்காக வெளிநாட்டுப் பயணம்; முன்கூட்டியே 2-வது டோஸ் போட என்ன செய்யவேண்டும்?

ஏற்கெனவே அமிலப் பின்னோட்ட நோய் (GERD), காசநோய் (TB), ஆஸ்துமா, ஒவ்வாமை (Allergic Rhinitis), நீண்டகால சுவாச பாதிப்பு (COPD) போன்றவை இருந்தால் அவற்றுக்கான முறையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முக்கியமாக புகைப்பழக்கம் இருந்தால் நிறுத்தப்பட வேண்டும்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமெனில் மருத்துவரிடம் ஆலோசித்து, ரத்த அழுத்தத்துக்காக எடுத்துக்கொள்ளும் குறிப்பிட்ட சில மருந்துகளை (Angiotensin-Converting Enzyme (ACE) inhibitors) நிறுத்திவிட்டு வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/i-recovered-from-covid-2-months-ago-still-suffering-from-cough-what-should-i-do

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக