Ad

வியாழன், 22 ஜூலை, 2021

Tokyo Olympics : நெய்வேலியில் தொடங்கிய எதிர்நீச்சல்... தாயின் கனவை நிஜமாக்க போராடும் சஜன் பிரகாஷ்!

தனிப்பட்ட பிரச்சனைகள், காயங்கள், மன அழுத்தம் என அத்தனையையும் தாண்டி, நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முதல் ஆளாக தேர்வானவர் சஜன் பிரகாஷ். 27 வயதாகும் இவர் 200மீ பட்டர்ஃப்ளை பிரிவில் பங்கேற்க இருக்கிறார்.

சஜன் பிரகாஷின் தாய் சாந்திமோள் ஒரு தடகள வீராங்கனை, ஜுனியர் பிரிவில் ஆசிய போட்டிகள் வரை பங்கேற்றிருக்கிறார். தடகளத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டலாம் என்று நினைக்கும்போது கணவர் மூலம் பிரச்னை உண்டானது. குடிப்பழக்கத்துகு ஆளான சஜனின் தந்தை 90-களின் தொடக்கத்திலேயே குடும்பத்தை தனியே தவிக்க விட்டுவிட்டார். சஜனை வளர்க்க வேண்டுமெனில் ஒரு நிரந்தர வேலை வேண்டுமென்பதற்காக தன்னுடைய தடகள கனவுகளை மூட்டை கட்டிவிட்டார் சாந்திமோள். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பணிக்கு சேர்ந்தார். அங்கே உள்ள ஒரு நீச்சல் குளத்தில்தான் சஜன் நீச்சல் பயில தொடங்கியிருக்கிறார்.

சஜன் பிரகாஷ்

சஜனுக்கு நீச்சல் மீதிருக்கும் ஆர்வத்தை பார்த்து ஆச்சர்யமடைந்த தாய், தன்னுடைய மகனை தான் எட்டாத உயரத்துக்கு ஏற்றிவிட வேண்டும் என்பதில் முழு கவனத்தையும் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். சஜன் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில், வெளியூருக்கு சென்று பயிற்சி பெற்றாக வேண்டிய சூழலில் பெங்களூருவுக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்திருக்கிறார்.

2015 வரைக்குமே சீனியர்கள் பயன்படுத்திவிட்டு கொடுக்கும் உபகரணங்களையே சஜன் பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் 6 தங்கம் மற்றும் 3 வெள்ளியை வென்றார். இதுதான் அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது.

2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நீச்சல் போட்டிக்கு தகுதிபெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். அதில் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், ஒரு அரசு வேலை கிடைத்தது.
சஜன் பிரகாஷ்

அரசு வேலை கிடைத்துவிட்டது இனிமேல் முன்னேறிவிடலாம் என்றாலும் அந்த வேலைக்கு கிடைத்த சம்பளம் நீச்சல் பயிற்சிகளுக்கே போதாமல் இருந்தது. வெளிநாடுகளுக்கு செல்ல சில பதக்கங்களை விற்றே செலவு செய்திருக்கிறார்.

இத்தனை கஷ்டங்களைத் தாண்டி டோக்கியோ ஒலிம்பிக்கை இலக்காக வைத்து பயிற்சி பெற்றவருக்கு, மேலும் சில தடைகள் வந்து முடக்கியது. 2019-ல் கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் பல மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் உண்டானது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் பொருட்டு பயிற்சிக்காக தாய்லாந்து சென்றார். அந்த நேரத்தில் லாக்டெளன் அமலுக்கு வர, அங்கேயே எட்டுமாதங்கள் தங்கியிருக்க வேண்டிய இக்கட்டான சூழல்.

நீண்ட எதிர் நீச்சலுக்குப்பிறகு சஜனுக்கான நேரம் வந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிப்பெற சமீபத்தில் நடந்த ரோம் தொடரில் பங்கேற்றார். இத்தனை கால அழுத்தம், ஏக்கம், வலி அத்தனையையும் சக்தியாக ஆச்சர்யப்படும் வகையில் சிறப்பாக நீந்தினார். ரெக்கார்ட் டைமிங்கில் முடித்து 'A' கட் ஆகி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நேரடியாக தகுதிப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

ஒற்றை தாயின் மகனாக பல சிரமங்களையும் புறக்கணிப்புகளையும் கடந்து டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு வந்திருக்கிறார் சஜன். பொதுவாக விளையாட்டு வீரர்கள் தங்களுடைய தந்தையின் கனவை நிறைவேற்றுபவர்களாகவே இருப்பார்கள். ஆனால், சஜன் தனது தாயின் கனவை நிறைவேற்ற போராடிக்கொண்டிருக்கிறார். அதற்காக அவர் பெற்றிருக்கும் வலிகள் அதிகம். அதற்கான பலனை டோக்கியோவில் அவர் பெற வேண்டும்.



source https://sports.vikatan.com/olympics/kerala-swimmer-sajan-prakash-keen-on-to-fulfill-his-mothers-dream-in-tokyo-olympics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக