Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

`பாஜக-வுடன் கூட்டணி அமைத்து எங்களை காப்பாற்றுங்கள்!’ - உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்.எல்.ஏ கடிதம்

மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனா கூட்டணி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக பா.ஜ.க அரசு, மத்திய விசாரணை ஏஜென்சிகள் மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும் பாஜகவால் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முடியவில்லை. தானே சிவசேனா எம்.எல்.ஏ, பிரதாப் சர்நாயக் மீது நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்டில் நடந்த ரூ.5,600 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சர்நாயக் மீது மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரையும் அமலாக்கப்பிரிவு குறி வைத்துள்ளது.

சர்நாயக்கிற்கு சொந்தமான 112 நிலங்களை அமலாக்கப்பிரிவு கையகப்படுத்தி இருக்கிறது. அதோடு அவரது வீட்டிலும் ரெய்டு நடத்தி சர்நாயக்கிற்கு நெருக்கடி கொடுத்தது. தற்போது பிரதாப் சர்நாயக் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே

அதில், பா.ஜ.க கூட்டணியில் சேரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தில் எழுதியிருப்பதாவது, ``பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டணி சேருவது நல்லது. பிரதாப் சர்நாயக், அனில் பரப், ரவி வாய்க்கர் போன்ற தலைவர்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தப்படுவது தடுக்கப்படும் என்று தொண்டர்கள் கருதுகின்றனர். எந்த வித குற்றமும் செய்யாத நிலையில் தேவையில்லாமல் மத்திய விசாரணை ஏஜென்சிகளால் துன்புறுத்தப்பட்டு வருகிறோம். ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் உடனே வேண்டுமென்றே வேறு ஒரு வழக்கில் சிக்க வைக்கின்றனர். போரில் அபிமன்யூ போன்று அல்லாமல் அர்ச்சுனன் போன்று போரிடவேண்டும். கடந்த 7 மாதங்களாக என் மீதும் எனது குடும்பத்தின் மீதான சட்டப்போராட்டத்தை தனியாக யவரின் துணையும் இன்றி எதிர்கொண்டு வருகிறேன்.

அடுத்த ஆண்டு மும்பை, தானே உட்பட மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வுடன் சிவசேனாவின் உறவு முறிந்துவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இரு கட்சி தலைவர்களிடையே இன்னும் சுமூக நட்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே உறவை புதுப்பிப்பதில் எந்த வித பிரச்னையும் இருக்காது. வரும் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தால் மிகவும் நல்லது. மத்திய விசாரணை ஏஜென்சிகளிடமிருந்து எங்களைப்போன்ற தலைவர்களை காப்பாற்ற இனியும் தாமதிக்காமல் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவேண்டும். காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி பலவீனப்படுத்துகின்றன.

உத்தவ் தாக்கரே

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பணிகள் மட்டுமே நடப்பதாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வளரத்தான் பாஜக கூட்டணி உடைக்கப்பட்டதோ என்று சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சந்தேகப்படுகின்றனர். முதல்வராகிய நீங்கள் கொரோனா ஒழிப்பிலும், அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமலும் இருக்கின்றீர்கள். ஆனால் காங்கிரஸ் தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறது. சிவசேனாவை உடைப்பதில் தேசியவாத காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத்திடம் கேட்டதற்கு, ``விசாரணை அமைப்புக்கள் தேவையில்லாமல் துன்புறுத்துவதாக சர்நாயக் முக்கியமான ஒன்றை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். யார் துன்புறுத்துவது என்பதுதான் இப்போது கேள்வி” என்று தெரிவித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலேயிடம் இது குறித்து கேட்டதற்கு, சிவசேனாவின் உள்கட்சி விவகாரம் என்றும், அடுத்த கட்சிகளின் உள்கட்சி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார். பா.ஜ.க மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இது குறித்து கூறுகையில்,` `கடந்த 18 மாதமாக நாங்கள் சொல்வதைத்தான் சர்நாயக் இப்போது தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/form-alliance-with-bjp-and-save-us-from-trial-request-to-uddhav-from-sena-mla

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக