Ad

ஞாயிறு, 20 ஜூன், 2021

நீலகிரி: 40 ஆண்டுகால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவ பயிற்சி மையம்! - தவிக்கும் கிராம‌ மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெல்லிங்டன் பகுதியில் எம்.ஆர்.சி எனப்படும் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையம் மற்றும் டி.எஸ்‌.எஸ்.சி எனப்படும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த மையங்களைச் சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்த மையத்தின் மிக அருகிலேயே அமைந்துள்ளது மேல்பாரத் நகர். 100-க்கும் அதிகமான குடும்பங்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

40 ஆண்டுகால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்

பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களான இந்த கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சாலையை ராணுவத்தினர்‌ முள்வேலியிட்டுத் தடுத்துள்ளனர். மேலும் பஞ்சாயத்து சார்பில் சமீபத்தில் அமைத்து கொடுக்கப்பட்ட சாலையை ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு சேதப்படுத்தியுள்ளனர். ராணுவத்தின் இந்த திடீர் நடவடிக்கையால் இந்த கிராம மக்கள் அவசரத் தேவைகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேல்பாரத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர்,"இங்க பெரும்பாலும் தேயிலைத் தோட்ட கூலிங்கதான் இருக்கோம். 40 வருஷத்துக்கு மேல இந்த ரோட பயன்படுத்திட்டு இருக்கோம். பஞ்சாயத்துல புதுசா சரி செஞ்சி குடுத்தாங்க. ஆஸ்பத்திரி, ரேஷன் கடைனு எல்லா அத்தயாவசியத்துக்கும் இந்த ரோடு தான் இருக்கு. திடீரென வந்த ராணுவம் இந்த ரோடு குறுக்க முள் வேலி அடிச்சி, ஜே.சி.பிய வச்சி தோண்டி போட்டாங்க. இதைப் பேசவே எங்க மக்கள் அச்சப்படுறாங்க. வேற சாலை வசதி இல்லாததால கர்ப்பிணிங்க, நோயாளிங்க எல்லாமே தடுமாறி நடந்தே போகவேண்டியதா இருக்கு. என்ன பன்றதுணு தெரியல" எனப் புலம்பினார்.

40 ஆண்டுகால சாலைக்கு முள்வேலியிட்ட ராணுவம்

இந்த சாலை குறித்து ராணுவம் ஊர் மக்களிடம், "இந்த சாலை அமைந்துள்ள இடம் ராணுவத்திற்குச் சொந்தமான இடம். எனவேதான் தற்போது முள் வேலி அமைத்து சாலையையும் அகற்றியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ வீரர்களுக்கான பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எனினும் அவர்கள் நமது அழைப்பை அவர்கள் ஏற்க வில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில் அதனையும் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்!



source https://www.vikatan.com/news/tamilnadu/villagers-suffer-as-army-barricades-40-year-old-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக