Ad

திங்கள், 21 ஜூன், 2021

நானும் நீயுமா - 10 : 'காதல் மன்னன்' Vs 'சாம்பார்'... தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனின் இடம் எது?

தமிழ் சினிமாவில் இருபெரும் ஆளுமைகள் எதிரும் புதிருமாக இயங்கும் காலகட்டத்தின் வரிசையில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியைப் பற்றி கடந்த வார அத்தியாயங்களில் பார்த்தோம். நிஜத்திலும் சரி, நிழலிலும் சரி, எம்.ஜி.ஆர் தனது பிம்பத்தை மிக கவனமாக வடிவமைத்தார். அதனால்தான் அவரது பிம்பம் இன்றும் கூட கவர்ச்சிகரமாகவும் அதிகம் சேதமடையாமலும் இருக்கிறது. ஆனால் சிவாஜியோ தன் கலையுலக பயணத்தில் விதம் விதமான பாத்திரங்களில் நடிப்பதில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்தினார். தனது பிம்ப கட்டுமானம் பற்றி அவர் அதிகம் கவலைப்படவில்லை.

எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் படங்களின் ஒவ்வொரு துறையிலும் தலையீடு செய்வார். அதாவது தனது படங்களின் அனைத்து அம்சங்களும் மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்கிற வகையில் அந்தத் தலையீடு இருக்கும். எனவே அதை தலையீடு என்று சொல்வதை விட அதீத மெனக்கெடல் எனலாம். இசையமைப்பாளர் என்றால் ஒரு ட்யூனை எம்.ஜி.ஆரிடமிருந்து 'ஒகே' வாங்குவதற்குள் படாத பாடு பட்டு விடுவார்கள். எம்.எஸ்.விஸ்வநாதனை எம்.ஜி.ஆர் ஜாலியாகவும் சற்று சீரியஸாகவும் படுத்திய பாடுகள் தொடர்பான சம்பவங்களை வாசித்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

'உலகம் சுற்றும் வாலிபன்' முதற்கொண்டு பல திரைப்படங்களில் எம்.எஸ்.வி பட்ட திண்டாட்டங்கள் அதிகம். இத்தனைக்கும் சளைக்கவே சளைக்காமல் அதிக மெட்டுக்களை அநாயசமாக உருவாக்கித் தருவதில் எம்.எஸ்.வி. விற்பன்னர். ஆனால் எம்.ஜி.ஆருக்கோ எளிதில் திருப்தி ஏற்படாது. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் எம்.எஸ்.வி, முரண்டு பிடிக்க ஆரம்பித்தால், "பாருங்கம்மா... உங்க பிள்ளை செய்யறதை!" என்று எம்.எஸ்.வியின் தாயாரிடம் நேரடியாக சென்று ஜாலியாக புகார் செய்வாராம் எம்.ஜி.ஆர்.

ஜெமினி கணேசன்

இப்படி ஒவ்வொரு துறையையும் எம்.ஜி.ஆர் படுத்தும் பாடுகள், துன்பமாக முதலில் தெரிந்தாலும் அதன் இறுதி வடிவங்களில்தான் அதற்கான அற்புத விடை கிடைக்கும். இன்றைக்கும் கூட எம்.ஜி.ஆரின் பாடல்கள் கேட்பதற்கு மிக இனிமையாகவும் அருமையான வரிகளுடனும் இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆரின் மெனக்கெடலும் ஒரு வகையான காரணம்.

இவ்வாறு தனது திரைப்படங்களின் ஒவ்வொரு துறையிலிருந்தும் மிகச்சிறந்த கலையை கறாராக பிழிந்து எடுப்பதில் வல்லவர் எம்.ஜி.ஆர். சினிமாவின் பல்வேறு துறைகள் பற்றி அவருக்கு இருந்த ஞானமும் ஒரு காரணம்.

ஆனால், சிவாஜியின் ஸ்டைலே தனி. அவர் ஒரு பக்கா டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். ஒரு குழந்தை போல படத்தின் இயக்குநரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வார். இயக்குநரின் கற்பனை, திறமை போன்றவற்றையொட்டி களிமண் சிற்பம் போல சிவாஜியை எப்படி வேண்டுமானாலும் பிசைந்து அற்புத கலைப்படைப்பாக மாற்ற முடியும். ஒரு கப்பலின் கேப்டன் போல, ஒரு டைரக்டர்தான் ஒரு திரைப்படத்தின் அச்சாணி என்பதில் சிவாஜிக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. அர்ப்பணிப்பு மிக்க ஒரு நடிகன் இயங்கும் விதம் இவ்வாறுதான் இருக்க வேண்டும்.

ஆக... அரசியல், சினிமா, சினிமா அரசியல் என்று செல்லுமிடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் பெற்ற மகத்தான வெற்றிக்கும், நடிப்பு தவிர்த்து பிற ஏரியாக்களில் சிவாஜி எதிர்கொண்ட வீழ்ச்சிகளுக்கும் அவர்களின் பிம்பங்கள்தான் முக்கிய காரணமாக இருந்தன. இதை பல கோணங்களில் அலச முடியும் என்றாலும் இதுதான் அடிப்படையான காரணம். இரண்டு ஆளுமைகளையும் ஒப்பிடும் போது எம்.ஜி.ஆர் முன்னணியில் இருந்தார். சிவாஜி ஓரடி பின்னால் இருந்தார். தமிழ் திரை என்னும் வானில் சூரியனாகவும் சந்திரனாகவும் இந்த இருவரும் இருந்த சமயத்தில் அதே வானத்தில் சில நட்சத்திரங்களும் இருந்தன.

தியாகராஜ பாகவதர் x பி.யூ. சின்னப்பா காலக்கட்டத்தில், அந்த இருபெரும் ஆளுமைகளைத் தாண்டி மூன்றாமவராக டி.ஆர்.மகாலிங்கம் எப்படி பிரகாசித்தாரோ, அதைப் போலவே எம்.ஜி.ஆர் x சிவாஜி காலத்தில் மூன்றாமவராக ஜொலித்தவர் ஜெமினி கணேசன். 'மூவேந்தர்கள்' என்று அழைக்கப்படுமளவிற்கு எழுபதுகளின் காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்னும் வரிசை அமைந்தது.

'கட்டபொம்மன்' படத்தில் ஜெமினி கணேசன்

சிவாஜியைப் போலவே ஜெமினிக்கும் இயற்பெயர் 'கணேசன்' என்பதால் தான் பணிபுரிந்து கொண்டிருந்த சினிமா ஸ்டூடியோவின் பெயரை முன்னால் சேர்த்துக் கொண்டார் ஜெமினி கணேசன். ஆம்... ஜெமினி பட தயாரிப்பு நிறுவனத்தில் காஸ்ட்டிங் டைரக்டராக பணிபுரிந்து கொண்டிருந்தவர்தான் ஜெமினி கணேசன். 'மிஸ் மாலினி்' என்கிற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமாகி பிறகு தென்னிந்திய மொழிகளில் பலவற்றில் நடித்து சாதனை புரிந்தார்.

சில நபர்கள் தோற்றத்தில் கவர்ச்சிகரமாக இருப்பார்கள். நடிப்பிலும் அத்தனை குறை சொல்ல முடியாது. ஆனால் எத்தனை முட்டி மோதினாலும் முதலாம் இடத்திற்கு அவர்களால் வரவே முடியாது. இந்த வரிசையில் சிவகுமார், சரத்பாபு என்று பல நடிகர்களை உதாரணம் சொல்ல முடியும். மக்களை பெருமளவிற்கு ஈர்க்கும் காந்தசக்தி (charisma) என்பது சிலருக்கு மட்டும்தான் இயற்கையில் அமைகிறது.

எம்.ஜி.ஆரைப் போலவே வசீகரமான தோற்றம் ஜெமினிக்கு உண்டு. சிவாஜியைப் போல உணர்ச்சிகரமாகவும் ஒரளவுக்கு நடிக்க வரும். என்றாலும் இவரைப் போன்ற நடிகர்கள் பார்வையாளர்களால் மெலிதான கேலிக்கு ஆளாவதுண்டு. அந்த வகையில் ஜெமினி கணேசனின் மென்மையான நடிப்பை பார்த்த அந்த காலத்து ரசிகர்கள், இவருக்கு 'சாம்பார்' என்கிற அடைமொழியை வழங்கி சந்தோஷப்பட்டார்கள். ஆண் ரசிகர்கள் இப்படி கிண்டல் செய்தாலும் ஜெமினி கணேசனுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தார்கள். பொலிவான முகத்தோற்றம், அழகான சுருள்முடி, மென்மையான குரல் போன்ற அம்சங்களைக் கொண்டிருந்ததால் இவரை பெண்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். 'காதல் மன்னன்' என்கிற பட்டமும் இவருக்கு எளிதாக கிடைத்தது.

எம்.ஜி.ஆர் நிஜத்திலும் நிழலிலும் தன் பிம்பத்தை கவனமாக பாதுகாத்தார். சிவாஜியோ திரையில் தன் பிம்பத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் ஜெமினி கணேசனோ நிஜத்திலும் சரி, நிழலிலும் சரி, 'காதல் மன்னனாகவே' திகழ்ந்தார். தனது 'காஸனோவா' பிம்பத்தைப் பற்றி கவலைப்படாதது மட்டுமல்ல. அதை புன்னகையுடன் பொதுவெளியில் ஒப்புக் கொள்ளவும் செய்தார். முதல் மனைவி அலமேலுவைத் தவிர, நடிகை புஷ்பவல்லி, சாவித்திரி என்று இவர் செய்த காதல் திருமணங்களின் பட்டியல் நீண்டது. அந்திமக் காலத்தில் கூட ஜூலியானா என்கிற பெண்ணை திருமணம் செய்து சாதனை படைத்தார். இவையெல்லாம் அதிகாரபூர்வ கணக்குகள் மட்டுமே. நடிகை புஷ்பவல்லியின் மூலம் பிறந்த மகள்தான் பின்னாளில் புகழ்பெற்ற இந்தி நடிகை ரேகா.

ஜெமினி கணேசன்


முன்னணி நடிகர்கள் என்றால் அவர்களை குறிப்பிட்ட இலக்கணத்திற்குள் அடக்கப்பட்ட பாத்திரங்களில் மட்டுமே நடிக்க வைக்க முடியும். ஏனெனில் அவர்களுக்கு என்று ஒரு பிரத்யேக இமேஜ் உருவாகி விடும். பார்வையாளர்களும் அதைத்தான் எதிர்பார்ப்பார்கள். சிவாஜி தன் பிம்பத்தைப் பற்றி பெருமளவு கவலைப்படவில்லை என்றாலும் கூட தன் பாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து கவனம் கொள்வார். ஆனால் இப்படிப்பட்ட முன்னணி நடிகர்களைத் தாண்டி 'சாமானியர்களின் நாயகர்களாக' சிலர் இருந்தார்கள். மோகன், முரளி என்று ஒரு பெரிய வரிசையை உதாரணமாக சொல்ல முடியும். இந்த சாமானிய நாயகனின் முன்னோடி என்றால் அது 'ஜெமினி கணேசன்'தான் அந்த அளவிற்கு எந்தவொரு எளிமையான பாத்திரத்திலும் இவரைப் பொருத்தி வைத்து விட முடியும்.

பிற்காலத்தில் 'உன்னால் முடியும் தம்பி்', 'அவ்வை சண்முகி' போன்ற திரைப்படங்களில் மாறுதலான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் செயலாக இருந்த காலக்கட்டத்தில் இவரை 'ரொமான்ஸ் ஹீரோ' என்கிற கூண்டிலேயே பெரும்பாலும் போட்டு அடைத்து வைத்திருந்தார்கள். இவரும் ‘'பாடு சாந்தா பாடு’' என்று கன்றுக்குட்டி பாலுக்கு குரல் தருவது போன்ற மென்மையான குரலில் நெகிழ்ந்து, அழுது, காதல் செய்து, கதறித் தீர்த்து... ஏராளமாக நடித்து தீர்த்து விட்டார். முக்கோண காதல் கதை என்றால் 'கூப்பிடு ஜெமினி'யை என்று சொல்லி விடுவார்கள் போல. அந்தளவிற்கு 'கல்யாணப் பரிசு' முதற்கொண்டு இரண்டு பெண்களின் நடுவே சிக்கித்தவிக்கும் பரிதாபமான காதலன் பாத்திரங்கள் நிறைய வந்தன. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், பாலசந்தர் என்று சில குறிப்பிட்ட இயக்குநர்கள், ஜெமினி கணேசனின் ஆளுமையை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்தில் இரு நடிகர்களுக்கு என்று தனித்தனி கோஷ்டிகள் உருவாகி இருந்தன என்பதை முன்பே பார்த்தோம். தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் முதற்கொண்டு அந்தந்த கோஷ்டியில்தான் பெரும்பாலும் இயங்குவார்கள். எதிர் கோஷ்டிக்கு செல்ல தயங்குவார்கள். எம்.எஸ்.வி, கண்ணதாசன், ஆரூர்தாஸ் போன்ற திறமைசாலிகளால்தான் இரு தரப்பு நடிகர்களிடமும் பணியாற்ற முடிந்தது. இந்த நோக்கில் ஜெமினி கணேசனை 'சிவாஜி கோஷ்டி' என்று சொல்லி விடலாம். 'பாசமலர்' முதற்கொண்டு சிவாஜி + ஜெமினி காம்பினேஷன் என்பது 25 திரைப்படங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக அமைந்தது.

'கட்டபொம்மன்' நாடகம்தான் இளம் வயதில் சிவாஜிக்கு நடிப்பு என்கிற கனவை ஊட்டியது. எனவே சிவாஜி பின்னாளில் வெற்றிகரமான ஹீரோவாக ஆன பிறகு, இளம் வயதில் தனக்கு லட்சியப் பாத்திரமாக தெரிந்த 'கட்டபொம்மனை' வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டார். இதில் 'வெள்ளையத் தேவன்' என்கிற உணர்ச்சிகரமான பாத்திரத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனை நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் எஸ்.எஸ்.ஆர், நடிக்க முன்வரவில்லை. இதே சமயத்தில் 'கட்டபொம்மனுக்கு' போட்டியாக 'சிவகங்கைச் சீமை' என்கிற திரைப்படம், கண்ணதாசனின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்தது. எஸ்.எஸ்.ஆர், 'சிவகங்கை சீமை'யில் நடிக்கச் சென்று விட்டார்.

மகள்களுடன் ஜெமினி கணேசன்

'கட்டபொம்மன்' என்பவன் தெலுங்கு நாயகன் என்றும், 'சிவகங்கைச் சீமை' திரைப்படமானது தமிழ் மண்ணைச் சேர்ந்த வரலாற்று நாயகர்களான 'மருது சகோதரர்களைப் பற்றிய படம்' என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் எஸ்.எஸ்.ஆர் நடிக்க மறுத்து விட்டதால், அவசரத்திற்கு வேறு நடிகரைத் தேட வேண்டிய நெருக்கடி. அந்தச் சமயத்தில் சிவாஜிக்கு கைகொடுத்தவர் ஜெமினி கணேசன். அப்போது ஜெமினியின் மனைவியான சாவித்திரிக்கு பிரசவ நேரம். தன் கணவர் அருகில் இருக்க வேண்டும் என்கிற நியாயமான விருப்பம் சாவித்திரிக்கு இருந்தது. 'பாசமலர்' என்கிற படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கூட சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன், தங்கையாகவே பாசத்துடன் பழகினார்கள். சிவாஜியின் வேண்டுகோளை தட்ட முடியாத சாவித்திரி, அந்த நெருக்கடியான சூழலிலும் தன் கணவரை அனுப்பி வைக்க ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பிற்கு சென்று நடித்துக் கொடுத்து விட்டுத் திரும்பினார் ஜெமினி.

'சிவகங்கைச் சீமை'யை விடவும் 'கட்டபொம்மன்' திரைப்படம்தான் பிறகு பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது. சிவாஜிக்கு கூடுதல் புகழையும் தேடித் தந்தது. பின்னர் சினிமாவிற்கு நடிக்க வாய்ப்பு தேடி வருகிற இளைஞர்களில் பெரும்பாலும் 'வானம் பொழிகிறது.' வசனத்தைத்தான் பேசிக் காட்டி இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்க ஆரம்பித்தார்கள். இன்றளவிற்கும் புகழ்பெற்ற திரைப்படமாக 'கட்டபொம்மன்' திகழ்வதற்கு சிவாஜியின் அற்புதமான நடிப்பும், பி.ஆர். பந்துலுவின் நேர்த்தியான இயக்கமும்தான் காரணம். அவசர சமயத்தில் சிவாஜிக்காக நடித்துத் தரும் அளவிற்கு ஜெமினி கணேசனின் நட்பு அமைந்திருந்தது.

சிவாஜியுடன் அதிக திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் இணைந்து நடித்தது ஒரேயொரு திரைப்படத்தில்தான். 1966-ல் வெளியான 'முகராசி' என்கிற திரைப்படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்திருந்தார் ஜெமினி. இந்தப் பாத்திரத்திற்கு அசோகன், கே.பாலாஜி, சக்ரபாணி போன்ற 'எம்.ஜி.ஆர் கோஷ்டி' நடிகர்கள் முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும் ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடிவு செய்தது எம்.ஜி.ஆர்தான். ஏனெனில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமானவர்கள் எல்லாம் அடுத்த திரைப்படங்களில் ஜெமினிக்கு நாயகியாக நடிப்பது ஒரு தற்செயலாக அமைந்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஜெமினியின் மீது எம்.ஜி.ஆருக்கு கோபம் என்கிற வதந்தி அப்போது உலவியது. இதைப் போக்குவதற்காக ஜெமினியை தன் திரைப்படத்தில் தேடி அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர் என்று சொல்லப்படுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி,ஜெமினி என்கிற இந்த மூவேந்தர்களின் கலைப்பயணம், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களைப் பற்றிய மக்களின் பார்வை போன்றவற்றை கவனித்தால் அவர்கள் தானாக ஏற்படுத்திக் கொண்ட அல்லது தன்னிச்சையாக உருவான பிம்பம்தான் அவர்களின் பயணத்தை தீர்மானித்தது.

நீங்கள் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக கூட இருங்கள். ஆனால் 'வெளியே' நீங்கள் எவ்வாறாக காட்டிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்களின் வளர்ச்சியும் பின்னடைவும் ஏற்படுகிறது. இது சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல, சராசரி நபர்களுக்கும் கூட இது பொருந்தும். ஆம்... பிம்பத்தின் வலிமை அத்தகையது. அதனால்தான் சொல்கிறேன். பிம்பங்கள் வழிபடுவதற்கானதல்ல; உடைபடுவதற்கானது.

அடுத்த வாரத்தில் இருந்து கமல் - ரஜினி என்கிற இருபெரும் ஆளுமைகளின் காலக்கட்டத்திற்குள் பயணம் செய்வோம்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/what-is-actor-gemini-ganesans-role-in-tamil-film-industry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக