Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

காஷ்மீர்: உறைய வைக்கும் குளிர்... தாய், சேயை பத்திரமாக வீடுசேர்த்த ராணுவ வீரர்கள்!

நாட்டின் எல்லையைக் காப்பது மட்டுமல்ல, நாட்டில் யாருக்கு என்ன சிக்கல் என்றாலும் நாங்கள்தான் முதலில் அங்கு சென்று நிற்போம் என்பதை தங்களது சமீபத்திய செயல் ஒன்றின் மூலம் மீண்டும் நாட்டிற்கு உணர்த்தியுள்ளனர் இந்திய ராணுவத்தினர்.

காஷ்மீரின் சினார் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவம், மருத்துவமனையில் மாட்டிக்கொண்ட பெண் ஒருவரையும் அவருக்குப் பிறந்த குழந்தையையும் பத்திரமாக வீடு சேர்த்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ள ட்விட்டர் தகவல், நாடு முழுவதிலும் நெகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தர்போரா என்கிற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு வசித்துவரும் ஃபரூக் ஹசானா என்பவரின் மனைவிக்கு குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவனையில் சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.

அப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் ஃபரூக்கின் மனைவியும், அவரின் பச்சிளங்குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகும் வீடு திரும்பமுடியாமல் மருத்துவமனையிலேயே மாட்டிக்கொண்டனர்.

இப்படி வீடி திரும்பமுடியாமல் தவித்த அவர்கள் இருவரையும் பத்திரமாக வீடு சேர்க்க இந்திய ராணுவத்தின் சினார் பிரிவு காவல்துறையினர் முடிவு செய்தனர்.

Also Read: கிழக்கு லடாக் பகுதி; மைனஸ் 40 டிகிரி! - எல்லையில் குளிர்காலத்துக்குத் தயாராகும் இந்திய ராணுவம்

மருத்துவமனையிலிருந்து ஃபரூக்கின் மனைவியையும், பச்சிளங்குழந்தையையும் ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிக்கொண்டு ஃபரூக்கின் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கின்றனர் ராணுவ வீரர்கள். உயிரை உறைய வைக்கும் குளிரில், முழங்கால் அளவுக்கு விழுந்திருந்த பனியில் ஒரு கிலோமீட்டர், இரண்டு கிலோமீட்டர் அல்ல, மொத்தம் ஆறு கிலோமீட்டர் அவர்களைச் சுமந்தபடி பயணித்து தாயையும், சேயையும் பத்திரமாக வீடு சேர்த்திருக்கின்றனர்.

'28RR பட்டேலியன் பிரிவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் எங்கள் வீட்டுப் பெண்ணையும், எங்கள் குழந்தையையும் பத்திரமாக வீடு சேர்த்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்' என்று ஃபரூக் மற்றும் அவரின் குடும்பத்தினர் ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சியும், உருக்கமும் கலந்து நன்றி தெரிவித்துள்ளனர்.

வீரவணக்கங்கள் தோழர்களே!



source https://www.vikatan.com/news/women/indian-army-soldiers-carried-mother-and-infant-in-kashmir-cold-weather-to-reach-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக