Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

`முதலில் கொளத்தூரில் வாங்கிய மனுக்களுக்கு தீர்வு சொல்லட்டும்!’ - ஸ்டாலினை விமர்சித்த ஜெயக்குமார்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் அரசியல் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று காலை கோபாலபுரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிடப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலின்

செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், `` 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் வரும் 29-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையை ஆரம்பிக்கவுள்ளோம். அப்போது, மக்களிடம் விண்ணப்பம் வழங்கப்படும். அதில் மக்கள் தங்களின் பிரச்னைகளை குறிப்பிடலாம். தி.மு.க ஆட்சி அமைந்ததும் மக்கள் பிரச்னைகள் போர்க்கால அடிப்படையில் 100 நாள்களில் தீர்க்கப்படும். இதனை எப்படிச் செய்வோம் என்ற சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம். செய்வதைத் தான் சொல்வோம். தேர்தல் அறிக்கை வேறு, இந்த 100 நாள் திட்டம் என்பது வேறு” என்றார்.

Also Read: `மு.க ஸ்டாலின் ஆகிய நான்... 100 நாளில் தீர்வு!’ - புதிய கோணத்தில் தி.மு.க பிரசாரம்

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் வாங்கிய மனுக்களுக்கே இதுவரை எந்த தீர்வும் இல்லை. அம்மாவின் ஆட்சியிலே 234 தொகுதிகளிலும் சாலை, குடிநீர், மின்சாரம், சமுதாயக் கூடம், பள்ளிக்கூட கட்டடங்கள் போன்று கோடிக்கணக்கான செலவில் கட்டிக்கொடுத்திருக்கிறோம். 'உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், வெளியூரில் போய் புலியைப் பிடிப்பான. 'கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். சொந்த தொகுதியில் மூட்டை மூட்டையாக வாங்கிய மனுக்களுக்கே எந்த தீர்வும் இல்லை. முதலில் கொளத்தூர் தொகுதியில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யட்டும்" என்றார்.

Minister Jayakumar

தொடர்ந்து பேசியவர், `` நாங்கள் எல்லாம் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக பணியாற்றி வருகிறோம். சட்டமன்ற உறுப்பினர் என்பவர் அப்படி தான் இருக்கவேண்டும். கொளத்தூர் தொகுதியில் வெள்ளை சட்டை அழுக்காகாது, கசங்காது அரசியல் செய்பவர் ஸ்டாலின். அவர் செய்வது அனைத்துமே தேர்தல் ஸ்டண்ட் தான். கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஆலோசனைகளைக் கேட்கிறார்கள். ஏனென்றால் இவர்களுக்குச் சுயபுத்தி கிடையாது. அ.தி.மு.கவின் படங்கள் ஓடும், பிரசாத் கிஷோர் கதையெழுதிய படம் ஓடாது. உங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் அமைதியாகச் சந்தோசமா இருக்கிறார்கள். தி.மு.க எத்தனை அவதாரங்கள் எடுத்துவந்தாலும். அ.தி.மு.க என்ற பிரமாண்ட அவதாரம் முன்பு எதுவும் எடுபடாது" என்று பேசினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/let-stalin-find-a-solution-to-the-petitions-bought-in-kolathur-first-minister-jayakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக