Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஈரோடு: `ஏன் பயப்படுறீங்க ஸ்டாலின்..? ; விவாதத்துக்கு வாங்க!’ - எடப்பாடி பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சரும், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் நேற்று 2-வது நாளாக பிரசாரம் மேற்கொண்டார். சேலத்திலிருந்து ஈரோடு வந்த முதல்வருக்கு, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனையடுத்து பன்னீர்செல்வம் பூங்கா வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலை, முதல்வர் கண்ணில் பட்டுவிடக்கூடாது என திரையை வைத்து மறைத்திருந்தனர்.

எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர்

திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்த முதல்வர், ஏழை மக்களுக்கு குடியிருப்பு, மருத்துவ வசதி, குடிநீர்த் திட்டம் என ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசிவிட்டு, பேச்சை ஸ்டாலின் பக்கம் திருப்பினார். “நாங்க என்னென்ன திட்டங்கள் செஞ்சோமுன்னு இப்படி புள்ளிவிபரமா சொல்றோம். ஆனா, ஸ்டாலின் எங்க ஆட்சியில எதுவுமே செய்யலைன்னு சொல்றாரு. மக்கள் மத்தியில் எங்கள் செல்வாக்கு உயர்ந்து வருவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் தினமும் எங்கள் ஆட்சியைப் பற்றி பொய்களையே பேசி, பொய்யான அறிக்கைகளையே கொடுத்து வருகிறார். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கணும்னா, அது ஸ்டாலினுக்கு கொடுத்தா தான் சரியா இருக்கும்” எனச் சாடினார்.

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், “யார் தவறு செஞ்சாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. சாதிச் சண்டை, மதச் சண்டை, அரசியல் அடாவடி இல்லாமல் அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்கிறது. சிறுபான்மை மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்காங்க. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அராஜகம், ரெளடித்தனம், கட்டப்பஞ்சாயத்து அதிகரிக்கும். தமிழகத்தையே பட்டா போட்டு விடுவார்கள்” எனக் கொத்தித்தார்.

Also Read: ஈரோடு: ``சவால் விடுகிறேன்... தைரியம் இருந்தா வாங்க!” - ஸ்டாலினுக்கு எதிராகக் கொதித்த பழனிசாமி

இரவு பெருந்துறை பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நேற்றைக்கு நான் ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தேன். அதற்கு உச்சநீதிமன்றத்தில் இருக்க வழக்கை முடிச்சிட்டு வாங்க நான் சவாலுக்கு தயார் என ஸ்டாலின் பதில் சொல்லியிருக்கிறார். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். ஏன் பயப்படுறீங்க?... வாங்க, என்னென்ன துறையில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்குன்னு சொல்லுங்க, நான் பதில் சொல்றேன். டெண்டர் விட்ட வழக்கு விவகாரத்தில் விசாரிக்க ஒன்னுமில்லைன்னு உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சி. நீங்க அந்த வழக்கை முடிச்சிட்டு வாங்ன்னு சொல்றீங்க.

பெருந்துறை பிரச்சார மேடையில் எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற நீதிபதியைவிட நீங்க என்ன பெரிய அறிவாளியா?... எங்கள் மீது உள்ள மக்களின் செல்வாக்கை ஸ்டாலினால் பொறுத்துக்க முடியலை. ஏதேதோ பொய்யாப் பேசி பார்க்கிறாரு. உங்களின் பப்பு வேகாது. உங்க நாடகம் எடுபடாது. யார் உண்மை பேசுறாங்கன்னு மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. தைரியம் இருந்தால் ஸ்டாலின் விவாதத்திற்கு வரட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில்லை பயமில்லை” என்றார்.

Also Read: `மிஸ்டர் பழனிசாமி சவாலை ஏற்கிறேன்; ஆனால்..!’ - நேரடி விவாதத்துக்கு ஸ்டாலின் சொன்ன நிபந்தனைகள் என்ன?



source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-palanisamy-challenge-stalin-again-in-erode-campaign

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக