ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழா நடைபெறுவது வழக்கம். மறைந்த பத்திரிகையாளர் சோ உயிருடன் இருந்தவரையில், இந்த ஆண்டுவிழா மிக உன்னிப்பாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டது. பிரதமரில் தொடங்கி ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வரை பலரும் சங்கமிக்கும் நிகழ்வாக இந்த ஆண்டுவிழா நடந்து வந்தது. சோ மறைந்த பிறகு, துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி, ஜனவரி 14, 2017-ல் நடைபெற்ற ஆண்டு விழாவில் ரஜினி, வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வைத்தார். 2018-ல் நடைபெற்ற 48-வது ஆண்டு விழாவில் அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற 49-வது ஆண்டு விழா, கோவையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் கோபண்ணா, பா.ஜ.க-வின் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுப்பராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். துக்ளக் இதழுக்கு குருமூர்த்தி பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக 2020-ல் நடைபெற்ற 50-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி வீடியோ மூலமாக வாழ்த்தினார். பொன்விழா மலரை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். “கையில் முரசொலி வைத்திருந்தால் தி.மு.க-வினர் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” என்று ரஜினிகாந்த் கமெண்ட் அடித்தது இந்த நிகழ்வில் தான். வருடா வருடம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படும் துக்ளக் ஆண்டுவிழாவில், இந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்வதாக இருந்தது. திடீரென அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.
Also Read: ``சசிகலா முதல்வராவதைத் தடுக்கவே நான் பதவியேற்றேன்!'' - ஆடிட்டர் குருமூர்த்தி
இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலர், “அமித் ஷாவின் பயணம் ரத்தானதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, கொரோனா அச்சுறுத்தல். இரண்டாவது கூட்டணிக் கணக்கு. ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கும் அமித் ஷா, நுரையிரல் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கே படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. கொரோனா இரண்டாவது அலை பரவல் தொடங்கியிருக்கும் இந்த நிலையில், மீண்டும் தொற்றை ஒட்டிக் கொள்ள அமித் ஷா தரப்பு விரும்பவில்லை. கடந்த நவம்பர் மாதம் அவர் சென்னை வந்திருந்தபோது, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில்தான் தங்கினார். சமீபத்தில் அந்த ஹோட்டலில் தமிழக சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தபோது, 20 ஊழியர்களுக்குக் கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது. கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதியில் 85 பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையிலுள்ள நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தங்களது திட்டமிட்ட நிகழ்வுகளை உடனடியாக ஒத்திவைக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் சூழலில், அமித் ஷா சென்னைக்கு வந்தால் அவர் தங்குவதற்கு ஏதுவான இடம் ஏதுமில்லை. ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பா.ஜ.க தலைவர்களை அழைத்து அரசியல் குறித்துப் பேசுவதும் கூட்டணி விவகாரங்களைக் கையாள்வதும் மரபாக இருக்காது. தவிர, ‘இவ்வளவு ரிஸ்க் எடுத்து சென்னை செல்ல வேண்டுமா?’ என்று அமித் ஷா குடும்பத்தினர் தடுத்ததால், அவரது பயணம் ரத்தாகி இருக்கிறது. கொரோனா அழுத்தம் மட்டும் காரணமல்ல... சில கூட்டணி கணக்குகளும் இருக்கின்றன.
Also Read: ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?
இதுவரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க ஏற்கவில்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி உடன்படிக்கை முடிவாகாத நிலையில், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் பா.ஜ.க-வுக்கு எந்த லாபமும் இல்லை. இதனால்தான், ‘முதல்வர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க தலைமையே முடிவு செய்யும்’ என்று மாநில பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறிவருகிறார். சென்னைக்கு அமித் ஷா வரும்போது, அவரிடம் முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்துப் பேசி தீர்வுகாண அ.தி.மு.க தரப்பில் ஆயத்தமாகினர். இது இங்குள்ள பா.ஜ.க தலைவர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை.
காரைக்குடி தொகுதியைக் குறிவைத்திருந்த பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜா, தற்போது தி.நகர் தொகுதிக்காக காய் நகர்த்துகிறார். ஆனால், சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா விட்டுத்தர மறுப்பதால், பா.ஜ.க - அ.தி.மு.க இடையே மனகசப்பு உருவாகியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி வரை இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு பஞ்சாயத்தாகி இருக்கிறது. அதேபோல, துறைமுகம் தொகுதியை பா.ஜ.க மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் கேட்கிறார். ஆனால், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பாலகங்கா துறைமுகம் தொகுதியில் தேர்தல் வேலையை ஆரம்பித்திருப்பது பா.ஜ.க தலைமையை கடுப்பேற்றியிருக்கிறது. இப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பா.ஜ.க எதிர்பார்க்கும் தொகுதிகளுக்கு முட்டுக்கட்டைகளை அ.தி.மு.க-வினர் போடுகின்றனர்.
Also Read: `வேல் யாத்திரைக்குப் பிறகு தி.மு.க-விலிருந்து அதிகமானோர் பா.ஜ.க-வில் இணைகிறார்கள்' - ஹெச்.ராஜா
இதற்கு ஓர் தீர்வு எட்டப்படாத சூழலில், அமித் ஷா சென்னை வருவதால் என்ன அரசியல் லாபம் இருக்கப் போகிறது. அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வந்து, ‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது, முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அமித் ஷா ஏற்றுக் கொண்டார்’ என்று அ.தி.மு.க தரப்பில் செய்தியைப் பரப்பிவிடுவார்கள். இந்தக் குழப்பம் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்றுதான், தமிழக பா.ஜ.க தலைவர்களே அமித் ஷாவிடம், ‘நம் அரசியல் நிலைப்பாட்டில் தெளிவு இல்லாமல் சென்னைக்கு வரவேண்டாம். ஜனவரி மாதம் முடிவதற்குள் நிலைமை என்னவென்று தெரிந்துவிடும். அதன்பிறகு பயணத்தை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டனர். இதுதான், அமித் ஷா பயணம் ரத்தான பின்னணி” என்றார்கள்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, அமித் ஷாவின் பயணம் திடீர் ரத்தாகியிருப்பதும் அரசியல் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டுவிழாவில், அமித் ஷாவுக்குப் பதிலாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அல்லது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரில் ஒருவர் கலந்து கொள்ளவிருக்கிறார்களாம். டெல்லியின் கூட்டணிக் கணக்குகள் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/why-amit-shahs-chennai-visit-canceled
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக