Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

`ஆடையில்லாமல் தொட்டால்தான் பாலியல் தாக்குதலா?!' - என்ன சொன்னது மும்பை உயர்நீதிமன்றம்?

``12 வயது சிறுமியின் மார்பை அழுத்தியதுடன் ஆடையையும் அவிழ்க்க முயன்ற 39 வயது நபரை, போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது" என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கியுள்ள தீர்ப்பும் அதற்குக் கொடுத்துள்ள விளக்கமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சதீஷ் ரக்டே. 39 வயதான அவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 12 வயது சிறுமியை கொய்யாப்பழம் தருவதாக தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். தன் வீட்டுக்குச் சென்றதும் சிறுமியின் மார்பை ஆடையுடன் சேர்த்து அழுத்தியதுடன் சிறுமியின் ஆடையையும் அவிழ்க்க முயன்றுள்ளார். சிறுமி அழ ஆரம்பித்ததால், சிறுமியை வீட்டுக்குள் விட்டு கதவைச் சாத்திவிட்டு அங்கிருந்து ஓடியிருக்கிறார் சதீஷ் .

பாலியல் வன்கொடுமை (Representational Image)

அழுகைச் சத்தம் கேட்டு அங்கே விரைந்து வந்த சிறுமியின் தாய் சிறுமியை மீட்டிருக்கிறார். இதையடுத்து, சதீஷ் ரக்டே மீது நாக்பூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஐபிசி 354, 363, 342 ஆகிய பிரிவுகளின் கீழும் போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. - இந்தச் சம்பவம் நடந்தது 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம்.

இந்த வழக்கை முதலில் விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிபதி, குற்றவாளி மீதான போக்ஸோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி சதீஷ், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கியுள்ள தீர்ப்புதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

``சிறுமியின் ஆடையை முழுமையாக அகற்றிவிட்டு, மார்பகங்களை குற்றவாளி அழுத்தினாரா, ஆடைக்குள் கை விட்டு மார்பகங்களை அழுத்தினாரா என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆடைக்கு மேலே கையை வைத்து மார்பகங்களை அழுத்துவது பாலியல் தாக்குதல் என்ற பிரிவின்கீழ் வராது. இது தவறான செயல்தான். ஆனால், சட்டப்படி, இதுபோன்ற செயல்கள், பெண்களின் மாண்புக்கு குந்தகம் விளைவிப்பது என்ற பிரிவின்கீழ்தான் வரும். தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்தான் பாலியல் தாக்குதல் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளி கைகள் நேரடியாக சிறுமியின் மார்பகத்தில் படவில்லை என்பதால், பாலியல் தாக்குதல் எனக் கூற முடியாது.” என்று கூறியுள்ள நீதிபதி புஷ்பா கனேடிவாலா போக்ஸோ சட்டத்தின் 8-வது பிரிவிலிருந்து குற்றவாளியை விடுவித்து, ஐபிசி 354-ன் கீழ் அவருக்கு ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும் ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

’ஆடையில்லாமல் தொட்டால்தால் பாலியல் தாக்குதலா?’

சஞ்சேஷ் மகாலிங்கம், சத்தியா கோவிந்தராஜ்

இந்தத் தீர்ப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வழக்குரைஞரான சஞ்சேஷ் மகாலிங்கமும், சட்டக்கல்லூரி மாணவியான சத்தியா கோவிந்தராஜும் இணைந்து, போக்ஸோ சட்டத்தை முன்வைத்து தவறான விளக்கமளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்புபின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

அவர்களிடம் பேசினோம், ``போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8-ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளைக் கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இதன்படி குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்க முடியும். கீழமை நீதிமன்றத்தில் இதனடிப்படையில்தான் தண்டனை வழங்கியிருக்கின்றனர்.

ஆனால், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி இது போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று தெரிவித்திருக்கிறார். சிறுமியின் சல்வாரை கழற்றிவிட்டு உடல்ரீதியான தொடர்பு வைத்திருந்தால் மட்டும்தான் போக்ஸோ சட்டத்தின் கீழ் வரும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது அந்த ஆண், சிறுமியின் சருமத்தைத் தொட்டிருக்க வேண்டும் என்கிறார். அதுமட்டுமல்லாது போக்ஸோவில் தண்டிக்க இன்னும் தீவிர குற்றச்சாட்டு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Court (Representational Image)

`அவன் அந்தச் சிறுமியின் மார்பை மட்டும்தான் தொட்டிருக்கிறான். அவன் அதைத் தாண்டி வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும்’ என்ற ரீதியில்தான் இந்தத் தீர்ப்பு சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவன் உங்கள் வயிற்றிலோ அல்லது வேறு பகுதியிலோ குத்திவிட்டான் என்றால் உங்களுக்கு வலிக்கும். அப்போது நீங்கள் சட்டை அணிந்திருந்தால் வலிக்காமலா போய்விடும்? பாலியல் ரீதியான தாக்குதலுக்கு மட்டும் ஏன் இப்படி விநோதமான விளக்கமளிக்கப்படுகிறது என்பது புரியவில்லை.

இது மிகவும் அபத்தமான தீர்ப்பு. பாலியல் ரீதியான புகார்களை பொதுவெளியில் சொல்லத் தயங்கும் சமூகத்தில் தைரியத்தோடு நீதிமன்றத்தை நாடும் ஒரு சிலருக்கும் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்படுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதையெல்லாம் விளக்கி தலைமை நீதிபதி மற்றும் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். நல்ல பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்றார்.

`உள்நோக்கம் இல்லாமல் இப்படி தீர்ப்பு வராது!’

அடுத்ததாகப் பேசிய வழக்கறிஞர் தமயந்தி, ``பாலியல் சீண்டல் செய்தாலே அது போக்ஸோ சட்டத்தில் வந்துவிடும். ஒரு குழந்தையிடம் ஆபாசமான செய்கைகள் செய்துகாட்டினாலோ அல்லது போன் மூலம் தவறான படங்களைக் காட்டினாலோகூட குற்றம் என்று போக்ஸோ சட்டத்தின் பிரிவு 11 மற்றும் 12ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியிருக்கும்போது இது எப்படி போக்ஸோவில் வராது என்று சொல்ல முடியும்? உள்நோக்கம் இருந்தால் ஒழிய இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பில்லை. இப்படியெல்லாம் தீர்ப்பு கொடுத்தால் எப்படி நீதிமன்றத்தை நம்பி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் புகார் கொடுப்பார்கள்? இதெல்லாம் தவறில்லை என்ற தோற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தும்போது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்கள், பாலியல் வன்முறை எல்லாம் இன்னும் அதிகமாகும்.

வழக்கறிஞர் தமயந்தி

`குழந்தைகளைச் சீண்டினாலோ அல்லது வன்புணர்வு செய்தாலோ போக்ஸோவில் தண்டிக்கப்படுவோம். அதில் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது. தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம் என திருத்தம் கொண்டுவந்துவிட்டார்கள்' என்ற பயம் மக்களிடம் இருக்கிறது. அப்படி பயம் இருந்தும்கூட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்படியான சூழலில், இதுபோன்றொரு தீர்ப்பு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். மேல்முறையீடு போனால் நிச்சயம் தீர்ப்பு மாற்றி எழுதப்படும். குற்றவாளிக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் தகுந்த தண்டனை கிடைக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/women/why-bombay-hc-said-groping-minor-without-skin-to-skin-contact-is-not-sexual-assault

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக