Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

வரிச்சலுகை, சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்... #UnionBudget2021-ல் பங்குச்சந்தையின் எதிர்பார்ப்பு என்ன?

வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட்டில் அனைத்துத் துறையினரும் பல்வேறு விஷயங்களை எதிர்பார்த்துவரும் நிலையில், பங்குச் சந்தை துறை சார்ந்தவர்கள் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, ஓரியன்டல் ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பங்குச் சந்தை நிபுணருமான வ.நாகப்பனிடம் பேசினோம்.

``பங்குப் பரிவர்த்தனை வரியை (எஸ்.டி.டி - Security Transaction Tax) நீக்க வேண்டும் என்பதே எங்களுடைய முதல் எதிர்பார்ப்பு. ஏனெனில், எஸ்.டி.டி கொண்டுவருவதால், நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்குவதாக அறிவித்து அதன்படி நீக்கினார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் மீண்டும் நீண்டகால மூலதன ஆதாய வரியையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். இதைக் கொண்டுவந்தவர்கள் எஸ்.டி.டி-யை நீக்கியிருக்க வேண்டும்.

Also Read: `100 ஆண்டுகளில் இந்தியா பார்த்திராத பட்ஜெட்!' - பட்ஜெட் 2020-21 குறித்து நிர்மலா சீதாராமன்

ஆனால், அப்படிச் செய்யவில்லை. தற்போது இரண்டு வரிகளும் நடைமுறையில் இருந்துவருகின்றன. முதலீடு செய்யும்போதும் வரி, லாபத்துக்கும் வரி என ஒரே தொகைக்கு இரண்டு வரி விதிப்பது எந்த விதத்தில் நியாயம்?

சில ஆண்டுகளுக்கு முன்பு, `சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கொண்டுவரப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று வரை அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கொரோனா பேரிடர் நேரங்களில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்குப் பணம் கிடைப்பதில்தான் சிக்கல் நிலவுகிறது. இது மாதிரியான நேரத்தில் `சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கொண்டுவந்தால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பங்குச் சந்தை வாயிலாக நிதி திரட்டுவதற்கு வசதியாக இருக்கும்.

வ.நாகப்பன்

அதாவது, தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தங்களை ஒரு நிறுவனமாக பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் மூலம் `சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' வாயிலாக ஐ.பி.ஓ வெளியிட்டு, அதன் மூலம் நிதியைத் திரட்டலாம். சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதால், திரட்டப்படும் நிதியை எந்தெந்த தேவைகளுக்கு அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் கட்டாயம் பதிவு செய்தாக வேண்டும். இதனால் சமூக அக்கறையுடன் நிதி வழங்குபவர்களுக்கும் சரியான நிறுவனத்துக்குத்தான் பணத்தை வழங்குகிறோம் என்கிற மனநிறைவும் கிடைக்கும்.

`சோஷியல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' மூலம் லாபம் ஈட்ட முடியாது என்றாலும், புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள முடியும் என்பது நிச்சயம். அதோடு, கொரோனா நோய் தொற்று பரவலால், அரசின் மருத்துவம் மற்றும் பாதுகாப்புச் செலவினங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசின் பொருளாதாரப் பளு குறையும்" என்றார் தெளிவாக.

இந்த பட்ஜெட் மூலம் நிதி அமைச்சரின் கருணைப் பார்வை பங்குச் சந்தையின் பக்கம் திரும்புமா என்று பார்ப்போம்!



source https://www.vikatan.com/business/budget/what-do-share-market-analysts-expecting-from-the-union-budget-2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக