Ad

திங்கள், 25 ஜனவரி, 2021

`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது!’ - மும்பை உயர் நீதிமன்றம்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்குள் அழைத்து சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பின்னர் அப்பெண்ணின் ஆடையையும் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறார் வதை

ஆனால், அச்சிறுமி கத்தி கூச்சல் போட, அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அச்சிறுமியின் வாயை பொத்தி அக்கொடூரத்தை செய்துவிட்டு சிறுமியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு வெளியில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார் அந்த நபர். சிறுமியை அவரின் தாயார் தேடிய போது எங்கும் கிடைக்காத நிலையில் பக்கத்துவீடு அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே இருந்து அவரது மகளின் அழுகை சத்தம் வந்ததால் கதவை திறந்த போது, சிறுமி நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார்.

உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி புஸ்பா கனடிவாலா வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ள விளக்கம் தற்போது விவாத பொருளாகி இருக்கிறது. ``குழந்தைகள் பாலியல் குற்றதடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்க வேண்டுமானால் கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்கவேண்டும். இவ்வழக்கில் சிறுமியின் ஆடையை குற்றவாளி கழற்றிவிட்டு மார்பகத்தை தொட்டாரா அல்லது அப்படியே ஆடையுடன் தொட்டாரா அல்லது கையை ஆடைக்குள் விட்டு தொட்டாரா என்று தெளிவாக குறிப்பிடப்படப்படவில்லை.

சிறார் பாலியல் வன்கொடுமை

எனவே இச்செயல் பாலியல் தாக்குதலில் வரவில்லை. சிறுமி உட்பட இவ்வழக்கில் அனைவரின் வாக்குமூலத்திலும் எந்த வித முரண்பாடும் இல்லை. அதோடு குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியின் மார்பகத்தை தடவியிருக்கிறார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் சட்டப்பிரிவு 7ன் கீழ் தோல் மீது தோல் பட்டு செய்யப்படும் அத்துமீறல்கள் தான் பாலியல் தாக்குதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. 7வது சட்டப்பிரிவுப்படி பாலியல் நோக்கத்தோடு பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றை கையால் தொட்டதாக இருக்கவேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார். இவ்வழக்கு 7வது சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வரவில்லை” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆனால் சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாக கருதவேண்டும் என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தண்டனை குற்றத்தின் தீவிரத்தை பொறுத்ததாக இருக்கவேண்டும் என்று தெரிவித்தார். அதோடு இவ்வழக்கில் சிறுமியை மானபங்கப்படுத்தியதாக கருதி 354வது சட்டப்பிரிவின் கீழ் ஒரு ஆண்டு மட்டும் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு

மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த தீர்ப்பு அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், இதனை பாலியல் தாக்குதலாக கருதமுடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது, இது போன்ற மற்ற வழக்குகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இவ்வழக்கில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Also Read: புதுக்கோட்டை: சிறார் வதை; கொடூரக் கொலை! -குற்றவாளிக்கு மூன்று மரண தண்டனைகள் விதித்த மகிளா நீதிமன்றம்



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/touching-a-girl-with-a-dress-cannot-be-accepted-as-sexual-assault-mumbai-high-court-verdict

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக