Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

வாடிக்கையாளர்களை வதைத்த பஜாஜ் ஃபைனான்ஸ்... ₹2.5 கோடி அபராதம் விதித்த ஆர்.பி.ஐ... என்ன பிரச்னை?

ரிசர்வ் வங்கியானது இந்தியாவின் முதல் பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமான (Non Banking Finance Company - சுருக்கமாக NBFC) பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், கடன் வசூல் செய்யும் நடைமுறைகளை சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறி அபராதமாக ரூ. 2.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான நெறிமுறைகளை (Fair practice code) ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது.

Bajaj Finance

சரியாகக் கடனை திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் கடனை வசூலிக்கும் பொழுது நிதி நிறுவனங்கள் அந்த நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் நிறுவனங்களுக்கிடையே சற்று மாறுபட்டு இருந்தாலும் இதை ஒவ்வொரு நிறுவனமும் பொதுவெளியில் தெரிவித்திட வேண்டும். அந்த நெறிமுறைகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் முறையைப் பின்பற்றி இருந்திடல் வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

பெரும்பாலும் பெரிய நிதி நிறுவனங்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்கள், கடனை சரியாகத் திரும்ப செலுத்த முடியாத வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் பொறுப்பை வேறு நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடுகின்றன. கடனை வசூல் செய்வதற்கு என்றே பிரத்யேகமாக நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கடனை வசூல் செய்வதற்கு எந்த நிலைக்கும் செல்கின்றன. ரிசர்வ் வங்கியின் எந்த வழிமுறைகளையும் இந்த நிறுவனங்கள் பின்பற்றுவது கிடையாது. ரவுடிகளை கூட கடன் வசூல் செய்வதற்கு பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

கடன் கொடுத்த நிறுவனங்கள் தங்கள் கடன் வசூல் ஆனால் போதும் என்ற நிலையிலேயே இருக்கின்றன. அவர்கள் அனுப்பும் கடன் வசூல் செய்யும் நிறுவனங்களின் தவறுகள் பற்றி எந்தக் கவலையும் கொள்வதில்லை. இதுதான் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றது.

ஷியாம் ராம்பாபு

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடன் வசூலில் அதிக கெடுபிடி காட்டுவதாகப் பல வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்தப் புகாரை ஏற்று ரிசர்வ் வங்கி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு பஜாஜ் ஃபைனான்ஸ் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. மேலும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்களை நேரில் அழைத்து விசாரித்ததில் கடன் வசூலிக்கும் முறையில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது ஊர்ஜிதமானது. அதனால் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த இரண்டு நாள்களில் 4% வரை குறைந்துள்ளது.

இப்போது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக பல விதமான ஆப்கள் (App - Application) வந்துவிட்டன. பல வாடிக்கையாளர்களும் பணம் வந்தால் போதும் என்று எதைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் அதிக அளவில் கடனை வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களில் கடன் வசூல் செய்யும் முறை இன்னும் மோசமாக இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளை பலமுறை பார்த்துவிட்டோம். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வரும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நிறுவனங்களே விதி மீறலில் ஈடுபடும்போது இது போன்ற நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு எந்த அளவுக்கும் செல்வார்கள். அதனால் பணம் கிடைக்கிறது என்று இது போன்ற நிறுவனங்களில் இருந்து கடன் பெறாமல் இருப்பது நம்மை இதுபோன்ற சிக்கலில் இருந்து காப்பாற்றும்.

மேலும், கடன் சிக்கலில் ஒருவர் மாட்டிக்கொண்டால், கடன் கொடுத்த நிறுவனங்கள் விதி மீறலில் ஈடுபட்டால் தைரியமாக நிறுவனத்தின் புகார் குழுவிற்கோ, ரிசர்வ் வங்கியிடமோ புகார் அளிக்கலாம். அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம். சரியாய் முறையில் கடனைக் கையாண்டால் எந்தச் சிக்கலிலிருந்தும் மீள முடியும்.

Rupee

நெறிமுறைகள்

கூடுதல் தகவலாக நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கடனை வசூலிக்க ஆர்.பி.ஐ வகுத்துள்ள விதிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கடனை சரியாகத் திரும்ப செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் நிறுவனங்கள் பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பின்வருமாறு:

1. வாடிக்கையாளர் கடனைச் செலுத்தவில்லை என்றால் முதலில் நிறுவனம் வாடிக்கையாளருக்கு நினைவூட்டல் கடிதம் எழுத வேண்டும். எடுத்த உடனே நேரடியாக நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளரைச் சந்திக்கக் கூடாது. நினைவூட்டல் கடிதம் அனுப்பிய பிறகும் வாடிக்கையாளர் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் மட்டுமே நிறுவன ஊழியர்கள் அல்லது நிறுவனம் சார்பாகக் கடன் வசூல் செய்யும் முகவர்கள் வாடிக்கையாளர்களைச் சந்தித்து கடனைக் கட்ட சொல்ல வேண்டும்.

2. இவ்வாறு வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் முகவர்கள் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய விவரங்களை அறிந்து இருக்க வேண்டும். அதற்கு நிறுவனங்கள் அந்த முகவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கி இருக்க வேண்டும்.

3. வாடிக்கையாளரை அலுவலக நேரத்தில் மட்டுமே சந்திக்க வேண்டும். பொதுவாக, காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சந்தித்து கடனை கட்ட சொல்ல வேண்டும். அதிகாலை நேரங்களில் இரவு நேரங்களில் அல்லது விடுமுறை நாள்களில் அவர்களை சந்திக்கக் கூடாது.

money

4. ரவுடிகள் போன்றோரை கடன் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்தக் கூடாது.

5. வாடிக்கையாளர் தமது தரப்பு நியாயத்தை மற்றும் புகார்களை அனுப்புவதற்கும் நிறுவனம் சார்பாக புகார் தெரிவிக்கும் குழு (Grievance Redressal committee) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது பற்றிய விவரங்கள் பொதுவெளியில் இருக்க வேண்டும். அதாவது, அவற்றின் கிளை நிறுவனங்களில் அறிவிப்பாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும். மேலும், இந்த விவரங்களை நிறுவனத்தின் இணைய தளத்திலும் வெளியிட்டிருக்க வேண்டும்.

6. வாடிக்கையாளர் நியாயமான காரணங்களுக்காக கடனை திரும்ப செலுத்த முடியாமல் இருந்தால் கடனை மறுசீராய்வு செய்வதற்கு வாய்ப்பு இருந்தால் நிறுவனம் வாடிக்கையாளருக்கு உதவ வேண்டும்.



source https://www.vikatan.com/business/finance/rbi-imposed-25-crore-penalty-on-bajaj-finance-for-breaching-norms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக