Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

வைகோ : பொங்கி எழுவாரா, பொறுமையைக் கையாள்வாரா..! - இந்த சட்டமன்றத் தேர்தலிலாவது கரையேறுமா ம.தி.மு.க?

சட்டமன்றத் தேர்தல் வந்தாலே ம.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் ஒரு அச்சம் உருவாகிவிடும். ஆம், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எடுக்கும் திடீர் முடிவுகளால் இதுவரை அந்தக் கட்சி இழந்தது ஏராளம். வருடம் முழுவதும் போராட்டங்களில் கலந்துகொண்டு, எந்தவிதத் தொய்வுமின்றி மக்களுக்காகக் களத்தில் நிற்கும் அந்தக் கட்சி, தேர்தல் காலங்களில் மட்டும் கோட்டைவிடும்.

தி.மு.க கூட்டணி தலைவர்கள்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் சார்பில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது ம.தி.மு.க. கூடவே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் தி.மு.கவால் வழங்கப்பட்டது. தற்போதுவரை, அதே கூட்டணியில்தான் தொடர்கிறது ம.தி.மு.க. இந்தநிலையில்தான் தொகுதிப் பங்கீட்டு விஷயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் சிறு மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே, ம.தி.மு.க தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என வைகோ அறிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தமுறை மட்டுமல்ல, இதேபோல தேர்தல் காலங்களில் அந்தக் கட்சி பலமுறை நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, வைகோ எடுத்த அதிரடி முடிவுகளால் அந்தக் கட்சி பல பின்னடைவையும் சந்தித்துள்ளது.

இந்தநிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலாவது அந்தக் கட்சிக்கு சக்சஸ் தேர்தல் ஆகுமா.... என்று பார்ப்பதற்கு முன்பாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.

முதல் தேர்தல் '1996' ;

ம.தி.மு.க என்கிற கட்சி தொடங்கப்பட்டு அந்தக் கட்சி 1996-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாகப் போட்டியிட்டது. தி.மு.கவில் இருந்து வெளியேறியே கட்சி தொடங்கியிருந்தார் வைகோ. மறுபுறம், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். இருவருக்கும் மாற்று ம.தி.மு.க தான் என்கிற முழக்கத்தை முன்வைத்தார் வைகோ. அவர் தி.மு.கவில் இருந்து வெளியேறியபோது, அவருடன் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும் வெளியேறியதால் மிகுந்த எதிர்பார்ப்பு அப்போது உண்டானது. பா.ம.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.

ரஜினி

அதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது ம.தி.மு.க. அதேநேரம், காங்கிரஸில் இருந்து விலகி மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார். கூடவே, ரஜினியின் ஆதரவும் அந்தக் கூட்டணிக்கு இருந்தது. அந்தத் தேர்தலில், தி.மு.க, த.மா.கா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ம.தி.மு.க கூட்டணியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜனதா தளமும் ஒரு இடங்களில் வெற்றிபெற 177 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. அதேவேளை அந்தக் கட்சிக்கு 5.8 சதவிகித வாக்குகள் கிடைத்தன. அந்தத் தேர்தலில், ரஜினி கொடுத்த வாய்ஸ் எனக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என சமீபத்தில்கூட வைகோ தெரிவித்திருந்தார்.

2001 தேர்தல்!

2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தி.மு.க உள்ளிட்ட பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.க தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறியது. பா.ஜ.கவுக்கு இணையாக 23 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தது ம.தி.மு.க. ஆனால், அந்தக் கட்சிக்கு 22 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது தி.மு.க. கூடவே, ம.தி.மு.க எதிர்பார்த்த குறிப்பிட்ட மூன்று தொகுதிகளை ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியேறினார் வைகோ. பா.ஜ.க போட்டியிட்ட 21 தொகுதிகளைத் தவிர்த்து, 211 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. ஆனால், ஒரு இடத்தில்கூட அந்தக் கட்சி வெற்றிபெறவில்லை. வாக்கு வங்கியும் 4.7 சதவிகிதமாகக் குறைந்தது.

வைகோ, ஜெயலலிதா

2006 தேர்தல்!

2004-ல் நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் நான்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க, அந்தக் கூட்டணியில் ஏற்பட்ட சில மனக் கசப்புகள், 35 தொகுதிகள் கேட்டுக் கிடைக்காதது ஆகியவற்றின் காரணமாக, 2006-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் சென்றது. அதி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், கம்பம், தொண்டாமுத்தூர் ஆகிய ஆறு தொகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சி வெற்றிபெற்றது. வாக்கு சதவிகிதமும் பழையபடி 5.9 சதவிகிதமானது.

2011 தேர்தல்!

தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ம.தி.மு.க, 2011 சட்டமன்றத் தேர்தலிலும் பழையபடி 35 தொகுதிகளை அ.தி.மு.கவிடம் முதலில் கேட்டது. ஆனால், அதி.மு.க தரப்பில் அதற்கான வாய்ப்பில்லை எனத் தெரியவர, தொடர்ந்து அது 30-ஆகி பின்னர் 21 தொகுதிகள் கொடுத்தால் கூட்டணியில் நீடிக்கலாம் என ம.தி.மு.க சார்பில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ம.தி.மு.க தவிர்த்து மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மிச்சமிருந்த தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டினார் ஜெயலலிதா. இதனால் விரக்தியடைந்த வைகோ, ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார். கடைசியாக 12 தொகுதிகள் வரை தருவதாக அ.தி.மு.க தரப்பில் பேச, இந்தச் சட்டமன்றத் தேர்தலை ம.தி.மு.க புறக்கணிப்பதாக அறிவித்தார் வைகோ.

மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க

2016 தேர்தல்!

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அங்கம் வகித்தது ம.தி.மு.க. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கருணாநிதியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்தார் வைகோ. அது தேர்தல் கூட்டணியிலும் தொடரும் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மக்கள் நலக்கூட்டணியில், இணைந்தார் வைகோ. அந்தத் தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி ஒரு இடங்களில்கூட வெற்றிபெறவில்லை. தொடர்ந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஆதரவு, கருணாநிதியின் மறைவு ஆகியவற்றுக்குப் பிறகு தி.மு.கவுடன் நெருக்கமானார் வைகோ. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் சார்பில் ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். வைகோவுக்கும் ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்பட்டது.

Also Read: எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு... தி.மு.க, அ.தி.மு.கவின் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

இந்தநிலையில், வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் 10-15 இடங்கள் ஸ்டாலினிடம் வைகோ கேட்டதாகவும் அவ்வளவு தொகுதிகள் ஒதுக்கமுடியாது, வழங்கப்படும் தொகுதிகளிலும் பாதியில் உதயசூரியன் போட்டியிட வேண்டும் என ஸ்டாலின் கூறியதாகவும், ''இந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்றால், ம.தி.மு.க என்றொரு கட்சி இருப்பதற்கே அர்த்தமில்லை'' என வைகோ தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. வைகோ, ''ம.தி.மு.க இந்தத் தேர்தலில் தனிச்சின்னதில் போட்டியிடும்'' என அறிவித்ததற்கும் இதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

வைகோ - ஸ்டாலின்

ம.தி.மு.க நிர்வாகிகள் எதிர்பார்ப்பு!

''தமிழக அரசியல் வரலாற்றில், 26 ஆண்டுகால எதிர்நீச்சல் பயணம் எங்களுடையது. தமிழ்நாட்டின் வாழ்வாதரப் பிரச்னைகள் அனைத்திலும் நாங்கள் களத்தில் நின்றிருக்கிறோம். ஆனால், இன்னும் எங்கள் கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. களப்போராட்டங்களை சர்வசாதாரணமாகக் கையாளும் எங்களுக்கு தேர்தல் காலகட்டம் எப்போதும் ஆபத்தான கண்டமாகத்தான் இருந்திருக்கிறது. ம.தி.மு.க என்கிற கட்சியின் தற்போதைய நிலைக்கு எங்களின் கடந்தகால தேர்தல் அணுகுமுறைகள்தான் காரணம் என்பதை நாங்கள் உணந்திருக்கிறோம். அவற்றில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஏதாவது செய்துவிடவேண்டும் என்கிற வேட்கை எங்கள் தலைவருக்கும் இருக்கிறது. அவர் உடல்நிலை மோசமானதற்கும் இதுதான் காரணம். அவர் நினைத்தது நிறைவேறிவிட்டால் எங்கள் கட்சி மட்டும் அல்ல அவர் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்'' என்கிறார்கள் நம்பிக்கையோடு.

''ம.தி.மு.கவுக்கு எப்படி இந்தத் தேர்தலில் சில எதிர்பார்ப்பும் நெருக்கடியும் இருக்கிறதோ, அதேயேளவுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் நூலிலையில் ஆட்சியை இழந்த எங்களுக்கும் இருக்கிறது. எப்படியாவது இந்தத் தேர்தலில் வென்றாக வேண்டும். வரும் தேர்தல் எந்தப் பரிசோதனைகளுக்குமான காலமல்ல'' என்பது தி.மு.க தரப்பு வாதமாக இருக்கிறது.

இந்தநிலையில், வைகோ தனக்கு முன்நிற்கும் சவால்களை எப்படிக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-the-mdmk-win-this-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக