தென்காசி மாவட்டம் சில்லிகுளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 3-ம் தேதி மது போதையில் சங்கரன்கோயில் பேருந்து நிலையத்தில், பாசி மாலை வியாபாரம் செய்யும் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அங்கிருந்த மக்கள் தடுத்து, அப்பெண்ணை அவரிடமிருந்து மீட்டனர்.
பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் காவலர் ராமச்சந்திரன் பெண்ணிடம் கேவலமாக நடந்துகொண்ட இந்தச் செயலை சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் இதைப் பார்த்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்தத் தகவல் இத்தனை தூரம் பரவியும், தென்காசி மாவட்ட காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த 4-ம் தேதி உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, சமூக வலைதளத்தில் வந்த இந்தத் தகவலை, தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தனர்.
"பெண்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டிய காவலர், பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்தச் சம்பவத்தில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்கள்.
மேலும், ''இதுபோன்ற மோசமான சம்பவங்கள் சமூக வலைதளங்கள், பத்திரிகைகளில் வெளியாகும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் கொடுப்பார்கள் என்று காத்திருக்கக்கூடாது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற தகவல்கள் சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் வெளிவருவதைக் கண்காணிக்கக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். உயர் அதிகாரிகளும் இதைக் கண்காணிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறையினர், அதுபோல் பொதுமக்கள் காவல்துறையினரால் பாதிக்கப்படும்போது நடவடிக்கை எடுப்பதில்லை. கேட்டால், யாரும் புகார் தரவில்லை என்று கூறுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் யாரும் புகார் கொடுக்க வரமாட்டார்கள். காவல்துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நீதிபதிகள் கடுமையுடன் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோரையும் எதிர் மனுதாரராகச் சேர்த்து வருகிற 11-ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், சுதாரித்துக்கொண்ட தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவால், சங்கரன்கோயில் நகர் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் புகார் பெற்று காவலர் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஐ.பி.சி 294 (பி), 323 ஆகிய பிரிவுகளில் மட்டும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சொந்த ஜாமீனில் ராமச்சந்திரனை விடுவித்தது தற்போது மேலும் சர்ச்சையாகியுள்ளது.
பட்டப்பகலில் பெண்ணுக்குக் காவலரே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவுக்குத்தான் இங்கு பெண்களின் பாதுகாப்பு இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்கு காவல்துறையும் அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
source https://www.vikatan.com/social-affairs/women/madurai-high-court-bench-condemns-lack-of-action-in-woman-sexual-abuse-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக