Ad

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சென்னை: பஸ்ஸுக்குக் காத்திருந்த இளம்பெண்ணிடம் வம்பிழுத்த காவலர் - ரவுண்டு கட்டிய பொதுமக்கள்!

சென்னை வடபழனியில் உள்ள பிபரலமான தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் வருபவர் ரதி (20). (பெயர் மாற்றம்). இவர், நேற்றிரவு பணி முடித்து வீடு திரும்ப வடபழனி 200 அடி சாலை நெடும்பாதை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். தனியாக நின்றுகொண்டிருந்த ரதிக்கு நீண்டநேரமாக பஸ் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் மழை பெய்ததால், சாலையிலும் பொதுமக்களின் நடமாட்டம் இல்லை. அப்போது, பைக்கில் வந்த இளைஞர், பேருந்து நிறுத்தத்தில் தனியாக இளம்பெண் நிற்பதைப் பார்த்ததும் உடனடியாக அங்கு பைக்கை நிறுத்தியிருக்கிறார்.

காவலர் ராஜூவைத் தாக்கும் பொதுமக்கள்

பின்னர் ரதியிடம், `நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?’ என்று இளைஞர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் அமைதியாக இருந்தார். அதன்பிறகும் இளைஞர், `பஸ் வர லேட்டாகும். நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ரதி, `நான் வரவில்லை’ என்று கூறியபடி பஸ்சை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அதன்பிறகும் விடாத இளைஞர், ரதியை வலுகட்டாயமாக பைக்கில் ஏற்ற முயற்சி செய்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த ரதி, `நீங்கள் யாரு? நான் ஏன் உங்களுடன் பைக்கில் வர வேண்டும்’ என்று இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Also Read: `காவலர் குடியிருப்பில் மதுவிற்பனை; மோதிக்கொண்ட சென்னைக் காவலர்கள் - வீடியோவால் சிக்கிய பின்னணி

ஆனால் அந்த இளைஞர், மீண்டும் மீண்டும் ரதியின் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல், அநாகரீகமாக நடந்திருக்கிறார். அந்த இளைஞர் மதுபோதையில் இருப்பதை தெரிந்த ரதி, உடனடியாக செல்போனில் தனக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தனர். அப்போதும் இளைஞர், ரதியிடம் தகராறு செய்திருக்கிறார். ரதிக்கு ஆதரவாக வந்த பெண்கள், பொதுமக்கள் போதையிலிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான் அவர் காவல் சீருடையில் இருந்தது தெரியவந்தது. மேலும், போதையில் இருந்த காவலரும் தகராறில் ஈடுபட்டார்.

காவலர் ராஜூ

ஆத்திரமடைந்த பெண்கள், தங்களின் காலனியைக் கழற்றி காவலரைத் தாக்கத் தொடங்கினார். பொதுமக்களின் பிடியில் சிக்கிக் கொண்ட காவலரால், எதுவும் செய்ய முடியவில்லை. காவலரைப் பெண்கள் தாக்கும் காட்சியை சிலர், தங்களின் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். பின்னர், வடபழனி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார் அங்கு வந்து காவலரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் காவலரின் பெயர் ராஜூ எனத் தெரியவந்தது. இவர், எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் பணியாற்றுவதும் தெரிந்தது. தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

காவலரை பெண்கள் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-public-beating-police-in-vadapalani-video-gone-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக