பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படும்போது, பார்வையாளர்களின் மனம் உண்மையிலேயே வருத்தப்பட்டால் அவர் ஒரு நல்ல போட்டியாளர் என்று பொருள். அந்த நோக்கில் நேற்று சனம் வெளியேறியபோது பெரும்பாலான பார்வையாளர்களின் மனம், ஒரு கணம் நின்று துடித்திருக்கும் என்று நினைக்கிறேன். அதிலும் பலவீனமான போட்டியாளர்கள் இன்னமும் உள்ளே இருக்கும் போது இந்த வலி சற்று அதிகமாகிறது.
அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், இயல்பான நகைச்சுவையுடன் கம்பீரமாக வெளியேறிய சனத்தை நேற்று பார்த்தபோது அத்தனை ஆசையாக இருந்தது. அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது பெரும்பாலானோர்க்கு அவர் யார் என்றே தெரியாது. ஆனால், நேற்று வெளியே செல்லும்போது பலரது மனங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்.
இதர போட்டியாளர்களின் விஷயங்களில் மூக்கை நுழைப்பது, ‘நொய்... நொய்’ என அனத்துவது, அடிக்கடி கோபப்படுவது என்று பார்வையாளர்களின் எரிச்சலை துவக்க நாட்களில் சம்பாதித்துக் கொண்டார் சனம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவரது ஆளுமையின் இன்னொரு பக்கம் தெரிய ஆரம்பித்தது. சமாதானப் பறவையாக, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத நேர்மையுள்ளம் கொண்டவராக அவரது பல பரிமாணங்கள் வெளிப்பட்டன.
சனத்திற்கும் பாலாஜிக்கும் உள்ள உறவு தனித்துவமானது. ஒருவகையான Love & Hate Relationship. சிலர் ஒருவரையொருவர் பரஸ்பரம் தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருப்பார்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களால் பிரிந்து இருக்க முடியாது. அதனால்தான் இந்த ஜோடியை டாம் & ஜெர்ரி, 'குஷி' பார்ட்-2 என்று தொடர்ந்து குறிப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
பாலாஜி சிறைக்குச் சென்றபோது ‘என்னை மிஸ் பண்ணுவீங்க’ என்று சனம் கூறினார். இதைப் போலவே நேற்று சனம் வெளியேறும் போது பாலாஜியும் அதையே சொன்னார். ஷூ சர்ச்சையினால் பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது சனத்தினால் முழு ஈடுபாட்டோடு இருக்க முடியவில்லை. அதே சமயத்தில் ஆரியைப் போல் தனியாகச்சென்று உட்கார்ந்து விடாமல் அதில் கலந்து கொண்டு நாகரிகத்தை கடைப்பிடித்தார். நேற்று மேடையில், '‘உங்களோட பிறந்தநாள் பாட்டை பாட முடியாமப் போச்சு’' என்று உள்ளுக்குள் வைத்திருந்த எண்ணத்தை பாலாஜியிடம் வெளிப்படுத்தினார்.
இதுவரை ‘சனம்’ என்றால் யார் என்று நம்மில் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இனிமேல் தமிழக 'சனம்', இனி சனத்தை அறிந்து கொள்ளும்; ஆதரிக்கும் என்று நம்புவோமாக!
தகுதியுள்ள போட்டியாளர்கள் வெளியேறுவதும், அவர்களோடு ஒப்பிடும் போது தகுதியற்ற போட்டியாளர்கள் உள்ளே இருப்பதும்… ஏன் இது போன்ற தகிடுதத்தங்கள் ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து நடக்கின்றன? இவர்கள் மக்களின் வாக்குகளை உண்மையிலேயே கணக்கில் எடுக்கிறார்களா, அல்லது இவர்களாக உள்ளுக்குள் வேறு வகை விளையாட்டை ஆடுகிறார்களா?
இதைப் பற்றி இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தேன். சரியா என்று தெரியவில்லை. ஒருவேளை பார்வையாளர்களின் எண்ணப்படியே இதன் முடிவுகள் தொடர்ந்து அமைகிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலோனோருக்கு இந்த நிகழ்ச்சி சலித்துப் போகக்கூடும். ஆனால் பார்வையாளர்கள் எதிர்பாராத முடிவுகள் அமைந்தால் என்னவாகும்? இதைப் பற்றி திட்டிக் கொண்டே தொடர்ந்து என்ன நடக்கிறதென்று கவனித்துப் பார்ப்பார்கள். இவர்கள் இதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சியின் மீது கவனஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். பார்வையாளர்களின் மனங்களைச் சீண்டுவதின் மூலம் ஒருவகையான விளையாட்டை ரியாலிட்டி ஷோக்கள் ஆடுகின்றன என்று தோன்றுகிறது. இது ஒருவகையில் நெகட்டிவ் பப்ளிசிட்டிதான். ஆனால் சமயங்களில் இதுதான் நன்றாக ‘வொர்க்அவுட்’ ஆகும். பிக்பாஸூம் இதைத்தான் பின்பற்றுகிறதா?
ஓகே 63வது நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
கறுப்பு நிற உடையில் கலக்கலாக வந்தார் கமல். (ஆச்சர்யமாக சட்டையில் இரண்டு பட்டன்கள்தான் இருந்தன), அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோரை அவர்களின் நினைவுநாளில் பொருத்தமான வார்த்தைகளுடன் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தார். போட்டியாளர்கள் சொல்வதற்கு முன் தான் முந்திக் கொண்டு ‘உங்க டிரஸ் நல்லா இருக்கு’ என்று அவர்களைப் பாராட்டி விட்டார்.
அரைநிமிடம் பேச அனுமதி கேட்டு எழுந்த சனம், நேற்று பாலாஜி விவகாரத்தில் தனக்கு நியாயம் தேடித் தந்ததற்காக நெகிழ்ச்சியுடன் கமலுக்கு நன்றி சொன்னார். கமல் இதை ஆரம்பிக்கவில்லையென்றால் வீட்டில் உள்ளோர் யாரும் இதற்காக சனத்திடம் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஏற்கெனவே நான் இங்கு எழுதியதுதான். யாராவது பஞ்சாயத்து செய்தால்தான் நம்மிடம் உள்ள பிழையை ஒப்புக் கொள்கிறோம். நமக்கு உள்ளேயே ‘மனசாட்சி’ என்கிற பெயரில் ஒரு நேர்மையான பஞ்சாயத்து தலைவர் இருக்கிறார். அவரின் பேச்சை உடனே கேட்கலாம்.
இதையே கமலும் இன்று ஒரு கட்டத்தில் சொன்னார். ரேங்கிங் அளித்துக்கொண்ட விஷயத்தில் குளறுபடியாக போட்டியாளர்கள் பேசிய போது, "இதையும் ‘Boring performer’ உரையாடல் மாதிரியே பண்ணிட்டீங்க போல. யாராவது வந்து பஞ்சாயத்து பண்ணனும்னு நெனக்காதீங்க. வீட்டோட ஜனநாயகத்தை நீங்களே காப்பாத்துங்க" என்றார்.
கூடுதலாக, "பிக்பாஸ் இதில் தலையிடறதில்லை... கவனிச்சீங்களா?" என்றும் கமல் சொன்னதை கவனித்திருக்கலாம். இது ஒரு scripted show என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கான நுட்பமான பதில் அதில் இருந்தது. போட்டியாளர்களுக்கு நெருக்கடியான சூழலை அமைத்து அவர்களிடம் தன்னிச்சையாக எழும் அசலான உணர்வுகளை கைப்பற்றுவதில்தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி அடங்கியிருக்கிறது. ‘ஓகே... ரோலிங்... ஆக்ஷன்... ஆரி கண்ணை உருட்டி கோபப்படுங்க...’ என்று ‘படம்’ காட்டியிருந்தால் இந்த ஷோ எப்போதோ பப்படம் ஆகியிருக்கும்.
"சனம் தன்னோட இன்னொரு அழைப்பையும் முடிச்சிட்டாங்க... அவருக்கு வழங்கப்பட்ட ரேங்க்கிங் சரின்னு யாருல்லாம் ஒப்புக்கறீங்க?” என்ற போது ஆரி, பாலாஜி ரம்யா ஆகியோர் மட்டுமே கை தூக்கினார்கள். மற்றவர்களைப் பற்றி கமல் விசாரித்தபோது அர்ச்சனாவும் உடனே ஒப்புக் கொண்டார். சனத்திற்காக பாலாஜி கை தூக்கியதற்கு சிறப்பு பாராட்டுக்களை வழங்கினார் கமல். (காலைத் தூக்கி சர்ச்சை செய்தவருக்கு இப்போது கைதூக்கியதால் பாராட்டு!).
“யார் யார்லாம் வேர்க்கடலை சாப்பிடறது?" என்று பாலாஜி முன்பு சொன்ன நக்கலை இப்போது கமல் விசாரித்தபோது, எப்போதும் துணிவாக பேசும் பாலாஜி இப்போது நைசாக பம்மி விட்டார். ஆனால், அனிதா அதைத் துணிச்சலாக வெளிப்படுத்தி ரமேஷின் எரிச்சலை சம்பாதித்துக் கொண்டார். (இந்தக் கோபத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. ரணகளமா சண்டை நடக்கும் போது கூட பனகல் பார்க்ல தூங்கற மாதிரி ‘ஹப்பாடா’ன்னு காலை விரிச்சு தூங்கறவருக்கு பேச்சைப் பாரு!).
அனிதா குறிப்பிட்ட சோம், கேபி, நிஷா, ரமேஷ் ஆகிய அனைவருமே வேர்க்கடலை பார்ட்டிகள்தான். இதில் கூடுதலாக ஷிவானி என்கிற வேர்க்கடலையைப் பிரதானமாக இணைக்க வேண்டும். (ஓ... அதனாலதான் பாலாஜி பயபுள்ள கம்முன்னு ஆயிடுச்சா?!).
அடுத்ததாக, அனிதாவிற்கும் ரியோவிற்கும் இடையில் இருந்த பஞ்சாயத்தை கமலின் முன்பு ஒருவழியாக பேசி தீர்த்து ஒருவருக்கொருவர் பாவனையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள். (இனிமே பாசிப்பருப்பு சாம்பார் கிடையாது!).
" ‘எனக்கென்று ஒரு இடம். எனக்கென்று ஒரு மலை’ என்று பழனி முருகன் மாதிரி கோபித்துக் கொண்டு தனியாகச் சென்ற அனிதாவிற்கு இப்போது என்ன இடம்தான் கொடுப்பீர்கள்?" என்று கமல் விசாரித்த போது புதிதாக ஒரு குண்டை வீசினார் அர்ச்சனா. ரியோவிற்குத்தான் நம்பர் 1 இடம் தந்திருக்க வேண்டுமாம். “ஆஜித்கிட்ட ரகசியத்தை முன்னாடியே சொன்னவருக்கா இந்த இடம்?” என்று கமல் சரியாக கிடுக்கிப்பிடி போட்டவுடன் அர்ச்சனாவால் பதில் சொல்ல முடியவில்லை. ஆரிதான் நம்பர் 1 என்பதைப் பிறகு ஏகமனதாக ஒப்புக் கொண்டார்கள். நம்பர் 1 விவகாரத்தில் சோமிற்கும் மாற்றுக் கருத்து இருக்காம். (பார்றா!).
"அனிதாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கணும்" என்று பாலாஜி சொன்னதில் நியாயம் இருந்தது. பாலாஜிக்கு மட்டும் வாக்களிக்க வந்த ஷிவானியை கமல் விசாரித்த போது ‘அப்படி இல்லீங்’ என்று தாழ்ந்த குரலில் பம்மினார் ஷிவானி.
"இந்தச் சண்டையின்போது நீங்களும் கீழே உட்கார்ந்துட்டீங்களே" என்று அர்ச்சனா மற்றும் நிஷாவை கமல் விசாரித்த போது, "சார் அம்பது சப்பாத்தி சுடணும். அதுதான் மைண்ட்ல வந்தது" என்று அவர்கள் சொன்ன போது உண்மையிலேயே நெகிழ்வாக இருந்தது.
இதே நாளின் பிற்பகுதியில் ‘இல்லத்தரசிகள் வீட்டில் செய்யும் பணிகளையும் அதற்குத் தர வேண்டிய சம்பளத்தைப் பற்றியும்’ புத்தக அறிமுகப் பகுதியில் கமல் பேசினார். எந்த இடத்திற்குச் சென்றாலும் வீட்டின் கடமைகளை மண்டையில் தொடர்ந்து சுமந்து செல்லும் இல்லத்தரசிகள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆண்கள் போல அலுவலகம் முடிந்ததும் அதை மறந்துவிட்டு பொழுதுபோக்கில் மூழ்கி விட அவர்களால் முடியாது. சினிமா தியேட்டருக்கு வந்திருந்தால் கூட ‘கேஸை சரியா ஆஃப் பண்ணிட்டோமா?' என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
'மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை’ எனும் பொன்மொழிக்கு ஏற்ப ரம்யா அமைதியாக இருந்தாலும் கமல் விடாமல் சீண்டுவதைக் கவனித்திருக்கலாம். இன்று அதுபோல் அவர் விசாரிக்க '‘நீங்கதான் என் கூட பேசவே இல்லையே... போங்க சார்'’ என்று செல்ல ஊடலில் ஈடுபட்டார் ரம்யா.
"மாஸ்டர் ஹெல்த் செக்கப் போய் வந்த அனுபவம் எப்படி?” என்று கமல் விசாரித்தவுடன் ‘ஆபிஸ் ரூமிற்கு’ சென்று வந்தவர்கள் மட்டும் வெடித்து சிரித்தார்கள். '‘நிஷா ஓவர்ஆக்ட் பண்ணும்போதுதான் எங்களுக்கு டவுட்டே வந்தது'’ என்றார் அர்ச்சனா.
நான் முன்பே குறிப்பிட்ட படி, வரிசைப்படுத்துதல் டாஸ்க்கில் மிக்ஸர் பாக்கெட்டோடு இருந்தவர்களை மட்டும்தான் பிக்பாஸ் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இது Prank call ஆக மாறி பிக்பாஸ் குறும்பு செய்கிறாரோ என்று கூட நான் நினைத்து விட்டேன்.
‘மலேசியா நிஷா’வை கமல் உசுப்பி விட்டு விட்டதால் இன்று நிஷாவின் குரல் சபையில் உயர்ந்து ஒலித்தது. அதைப் பாராட்டிய கமல் ‘'நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்'’ என்றார். இதில் நிஷாவை விடவும் அர்ச்சனாவிற்கு அதிக சந்தோஷம். ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார். (பின்ன ஐம்பது சப்பாத்தி சுடறதுக்கு ஆள் வேணுமே?!) "இனிமே பாருங்க சார்... திங்கட்கிழமைல இருந்து ஒவ்வொருத்தனையும் தூக்கிப் போட்டு மிதிக்கறேன்" என்று ஜாலியாக வீரசபதம் செய்தார் நிஷா.
வேல்முருகனுக்கு நேர்ந்த அதே விபத்து நிஷாவிற்கு நடந்து விடக்கூடாது. தன்னுடைய தகுதிகளை, விருதுகளை வேல்முருகன் அவ்வப்போது சபையில் அவிழ்த்து விட்டிருந்தால் இதர போட்டியாளர்கள் சற்று அடக்கி வாசித்திருப்பார்கள். ‘தாழ்வு மனப்பான்மை’ காரணமாக விரைவில் வெளியேறிய அதே நிலைமையை நிஷாவும் அடைந்து விடக்கூடாது. (அடிச்சு தூக்குங்க நிஷாக்கா!).
"எங்க நிஷா கிடைச்சிட்டா!" என்று அர்ச்சனா கலங்கிய போது "ஆமாம்... நாங்களும் வெளியே இருந்து தேடிட்டுதான் இருந்தோம்" என்று சர்காஸ்டிக்காக ஒரு பவுண்டரியை வீசினார் கமல்.
ரியோவிற்கு ‘குரூப்பிஸம்’, அனிதாவிற்கு ‘சண்டை’, பாலாஜிக்கு ‘குழந்தை’... இந்த மாதிரி சில பிடிக்காத வார்த்தைகள் இங்க சிலருக்கு இருக்கு. அது போல அர்ச்சனாவிற்கு ‘Bossy’யா? என்று விசாரிக்க "ஆமாம் சார்..." என்றார் அர்ச்சனா பரிதாபமாக. கேபி மன்னிப்பு கேட்டும் அர்ச்சனா முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது அதீதமான எதிர்வினை. இந்த வார்த்தையின் நதிமூலத்தை ஆராய்ந்த போது சுரேஷின் பெயர் அடிபட்டு பின்பு ‘சுச்சி’ வழங்கிய பட்டம் என்று தெரிய வந்தது. ஒரு பெண் தலைமைப் பொறுப்பிற்கான உணர்வுடன் இருந்தால் அதில் தப்பில்லையே?! ஆனால் அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு பாரபட்சத்துடன் நடந்து கொண்டால்தான் தவறு.
"எனக்கும் ‘soft hurt’-ன்னு பட்டம் கொடுத்திருக்காங்களே... அதையெல்லாம் விசாரிக்க மாட்டீங்களா?" என்று இப்போது பதிலுக்கு ரம்யாவும் கமலை சீண்டினார். "நீங்கள் குழந்தை மருத்துவர்" என்று முன்னர் அளித்த பட்டத்தை நினைவுகூர்ந்தார் கமல். (கமல் தயாரிக்கும் சினிமாவில் ரம்யாவை விரைவில் எதிர்பார்க்கலாம் போல).
பிக்பாஸ் மற்றும் கமலின் குரலை மட்டுமே இத்தனை நாட்களில் கேட்டிருந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. அருணாச்சலம் என்கிற பார்வையாளர் வெளியில் இருந்து தொடர்பு கொண்டு ஷிவானியிடம் பேச வேண்டும் என்றார். அப்போதே ஷிவானியின் முகத்தில் நவரசங்களும் வெளிப்பட்டன. "எந்த நம்பிக்கைல நீங்க நாமினேஷனுக்கு வந்தீங்க?” என்று உள்குத்தாக கேட்டார் அருணாச்சலம். (ஆண்டவனே அந்த அருணாச்சலத்தை அனுப்பி வெச்ச மாதிரி இருக்கு).
"மக்களை சந்திச்சிட்டு நம்பிக்கையா வரலாம்னு நெனச்சேன்" என்று சொல்லி சமாளித்தார் ஷிவானி. (ஆனா இந்தப் பொண்ணு எப்படி தொடர்ந்து காப்பாத்தப்படுது–ன்ற விஷயம் மகா மர்மமா இருக்கு!). இதற்கு இடையில் ‘ஆஜீத்’ காப்பாற்றப்பட்ட செய்தியை கமல் சொல்லி விலகியவுடன் மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டாடினார்கள். ஏனோ ஆரி மட்டும் அதிலிருந்து விலகியே இருந்தார். தன் பேச்சைக் கேட்காத பையன் இன்னமும் அங்கு இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையோ?!
உண்டியலில் குச்சி போட்டு காசு திருடும் பழக்கம் சின்னவயதில் எத்தனை பேரிடம் இருந்தது என்று தெரியவில்லை. அனிதாவிடம் அது இருந்தது போல. இப்போதே மனதளவில் வெளியேறத் தயாராகி உண்டியலில் இருக்கும் காயின்களை வெளியே எடுக்க ஆரம்பித்து விட்டார். ‘நான்தான் போவேன்’ என்று அரற்றிக் கொண்டே இருந்தார்.
அருணாச்சலம் கொளுத்திப் போட்ட பட்டாசினால் ஷிவானி அரண்டு போனாரோ... இல்லையோ... பாலாஜி நிச்சயம் அரண்டு விட்டார். ஷிவானி வெளியேறி விடுவாரோ என்கிற பீதி அவரது கண்களில் தெரிய ஆரம்பித்தது. ராமாயணத்தில் ஒரு விஷயம் இருக்கிறது. எதிராளியோடு போரிடும் போது அவரின் பாதி பலம் வாலிக்கு வந்து விடுவாம். அது போல பாலாஜியின் பாதி பலம் ஷிவானியின் அருகில் இருப்பதில்தான் இருக்கிறது போல. இதற்காக மட்டுமாவது ஷிவானியை வெளியேற்றி பாலாஜியை சோதித்துப் பார்த்து விட வேண்டும். அரண்டு போன பாலாஜிக்கு பாவனையாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. (லவ் பெட்ல அட்மிஷன் கார்டு போடாம விட மாட்டாங்க போலிருக்கு!).
வாரம் ஒரு புத்தகம் - தொடுவானம் தேடி
‘வாரம் ஒரு புத்தகம்’ பகுதியில், இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்தியது ‘தொடுவானம் தேடி’ என்கிற, சிறு குறு தொழில்முனைவோருக்கான வழிகாட்டி புத்தகம். குறிப்பாக பெண்கள் முட்டிமோதி முன்னேறி வந்த அனுபவங்களும் வழிகாட்டுதல்களும் அடங்கிய நூல் போலிருக்கிறது. தில்லைராஜன், கோ.அருண்குமார், சஜி மேத்யூ ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்த நூலிற்கு முகவுரை வழங்கியிருப்பவர் கமல்ஹாசன்.
பிரதிபலன் எதிர்பார்க்காமல், விடுமுறை என்பதே இல்லாமல் வீட்டுப்பணிகளை செய்யும் இல்லத்தரசிகளுக்கு சம்பளம் தர வேண்டும் என்று கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது. "தாய்ப்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா” என்று வைரமுத்து ஏற்கெனவெ இதை பாட்டாக எழுதி விட்டார்.
ஒரு வீட்டில் குடும்பத் தலைவராக இருக்கும் கணவன் மறைந்து விட்டால் அந்தக் குடும்பமே இடிந்து வீழும் ஆபத்து இருக்கிறது. ஆனால், அவ்வாறு விழாதவாறு தாங்கிப் பிடிக்கும் இல்லத்தரசிகள் ஏராளமாக இருக்கிறார்கள். சட்டென்று ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டு அதன் மூலம் முன்னேறி குடும்பப் பாரத்தைச் சுமந்த பெண்கள் ஏராளம். எளிய சமூகத்தின் பெண்களைப் பாருங்கள். சட்டென்று ஒரு சிறிய இட்லிக்கடை வைத்து பெரிய பொறுப்புகளைச் சுமக்க ஆரம்பிப்பார்கள். அவர்களுக்குப் புத்தகம் எல்லாம் தேவையில்லை. அவர்களே ஒரு புத்தகம்தான்.
எவிக்ஷன் பிராசஸ் லிஸ்ட்டில் மிஞ்சியிருந்தவர்கள் சனம், அனிதா மற்றும் ஷிவானி. ‘இதில் யார் வீட்டில் இருக்க வேண்டும்?’ என்று கேட்டபோது பெரும்பாலோனோர் சனத்தின் பெயரைச் சொன்னார்கள். இது சனத்திற்கே ஆச்சர்யமாக இருந்தது. அனிதாவின் பெயரை ஆஜீத் மட்டுமே சொன்னார். பாலாஜி ஷிவானி பெயரைச் சொல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.
‘அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ என்று கொலைவெறியுடன் அனத்தும் சந்தானம் மாதிரி ‘அனிதாதான் வெளியே போகணும்’ என்றார் ஆரி ஆவேசமாக. வழக்கமாக கேள்வியை சரியாகப் புரிந்து மற்றவர்களுக்கும் விளக்கம் சொல்லும் ஆரி இம்முறை தடுமாறி விட்டார் போல. அனிதா மீதுள்ள அவரின் கொலைவெறி அம்பலமாயிற்று. பிறகு திருத்திக் கொண்டு ‘சனம்’ இருக்க வேண்டும் என்றார்.
'‘மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறோம்'’ என்று தேர்தல் காலத்து அரசியல்வாதிகள் மாதிரி மூவரும் ஒரே குரலில் சொன்னர்கள். ‘சனம்’ என்று எழுதிய அட்டையைக் காட்டினார் கமல்.
பாலாஜி உடனே எழுந்து வந்து சனத்திடம் மன்னிப்பு கேட்க முயலும்போது சனம் அதை மறுத்து விட்டது சுயமரியாதையின் அடையாளம். பின்பு மனம் இளகி அந்த மன்னிப்பை ஏற்றுக் கொண்டது அவரின் பெருந்தன்மையின் அடையாளம்.
தகுதியுள்ள போட்டியாளரான சனம் வெளியேறுவது, பார்வையாளர்களைப் போலவே இதர போட்டியாளர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நிஷா இதை வாய்விட்டே சொன்னார். சனத்தின் பிரிவிற்கு அனிதா அதிகம் அழுததைப் புரிந்துகொள்ள முடிந்தது. அர்ச்சனா குழுவில் இருந்து விலகிய பிறகு அவருக்கு இருந்த ஒரே பெண் துணை சனம் மட்டுமே. “சேஃப் கேம் ஆடறவங்கள்லாம் உள்ளே இருக்காங்க” என்று ஆரியிடம் பிறகு சலித்துக் கொண்டார் அனிதா.
தனது வெளியேற்றத்தை மிக இயல்பாக சனம் கையாண்டது பாராட்டத்தக்கது. அழவில்லை. யாரையும் குற்றம் சொல்லவில்லை. வேண்டாவெறுப்பாக கிளம்பவில்லை. மாறாக ‘நான்தான் டைட்டில் அடிச்சிருக்கணும். என்னமோ என் கெரகம்’ என்று ஜாலியாக அலுத்துக் கொண்டவர், "உங்களுக்கு முன்னாடி போறதுதான் எனக்கு வருத்தம். ஆக்சுவலி நீங்கதான் போயிருக்கணும்" என்று பாலாஜியிடம் ஜாலியாக சவடால் விட்டது ஹைலைட்டான நகைச்சுவை.
"நான் திரும்பி கூட வரலாம்" என்று வைல்ட் கார்ட் ஆப்ஷனை மனதில் வைத்துக் கொண்டு கண்சிமிட்டிய படி சொன்னார் சனம். "வெளியே போனப்புறம் எனக்கு வோட் பண்ணு" என்று பாலாஜி சொன்னது சுவாரஸ்யமான சீண்டல். இந்த டாம் & ஜெர்ரி திரைப்படம் இத்தோடு நின்று போவது குறித்து நமக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது.
‘"ன்னா பாசம் பொங்குது" என்று பாலாஜியை பதிலுக்கு சீண்டிய சனம், "நீங்க ஒரு நல்ல போட்டியாளர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கிட்டு விளையாடினா ஃபைனல்ல ஜெயிக்கலாம்" என்று உபதேசம் செய்தது நல்ல விஷயம்.
அதுவரை யார் விடைபெற்றாலும் கம்மென்று இருந்த பிக்பாஸ், ‘ஐ லவ் யூ பிக்பாஸ்’ என்று உணர்வுபூர்வமாக சனம் சொன்னவுடன் மனம் இளகி ‘ஆல் தி பெஸ்ட் சனம்’ என்று பதில் சொன்னது ஹைலைட்டான தருணம். சனம் இதற்கு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். "இந்த வீட்டுக்குள் நுழைஞ்சப்ப இங்கதான் முதல்ல உட்கார்ந்தேன்" என்று குறிப்பிட்ட இடத்தில் சனம் உட்கார்ந்து பார்த்த போது நமக்கும் நெகிழ்வாகத்தான் இருந்தது.
மேடைக்கு வந்த சனத்திடம், "உங்க தமிழ் நல்லா முன்னேறிடுச்சு... தமிழர்களும் இதைப் பின்பற்றுவாங்கன்னு நெனக்கறேன்" என்று கமல் சொன்னது குத்தலான நையாண்டி. ‘'குரூப் குரூப்பாக இருந்த பிக்பாஸ் வீட்டில் தனியாக விளையாடிய போட்டியாளர் நீங்கள் மட்டுமே'’ என்று வெளிப்படையாக பாராட்டினார் கமல். சனத்தின் வெளியேற்றம் அவருக்கே கூட சற்று அதிர்ச்சியாக இருந்திருக்குமோ, என்னமோ!
"இதுவரை வெற்றியையே பார்த்ததில்லைன்னு சொன்னீங்க. இப்ப அதன் விளிம்பிற்கு வந்துட்டீங்க. இந்தப் புகழை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று வழிகாட்டினார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே, வெளியில் வெற்றி தேடிவரும் என்பதெல்லாம் உட்டாலக்கடி. பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது உங்கள் மீது போடப்படும் மேடை வெளிச்சம் மட்டுமே. அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது சம்பந்தப்பட்டவர்களின் கைகளில்தான் இருக்கிறது.
"தமிழக மக்கள் மீது எனக்கு துளி கூட வருத்தமில்லை. சனத்தின் குரல் நாட்டின் சனத்திற்காக எப்பவும் ஒலிக்கும்" என்று சிலேடையெல்லாம் பயன்படுத்தும் அளவிற்குத் தமிழில் முன்னேறியிருக்கிறார் சனம். பின்பு அவரைப் பற்றிய பயண வீடியோ ஒளிபரப்பானது. வழக்கம் போல் சிறந்த முறையில் எடிட் செய்யப்பட்ட வீடியோ. அதைப் பார்த்து கண்கலங்கினார் சனம்.
பிறகு அகம் டிவி வழியாக உள்ளே வந்து ஒவ்வொரு போட்டியாளருக்கும் அவர் வாழ்த்து சொன்னது சிறப்பு. “ஆரிதான் நேர்மையின் அடையாளம்" என்று பாராட்டிய சனம், "ஏம்ப்பா பாலாஜி..." என்று இழுவையாக அழைத்தது ரசிக்கத்தக்க காட்சி. “நீங்கள் வெளியேற்றப்பட்டதில் நியாயமில்லை" என்கிற உண்மையை உரக்கச் சொன்னார் ஆரி. பாராட்டுக்கள் ப்ரோ... பார்வையாளர்களின் மனதில் இருந்ததும் இதேதான்!
"உங்களுடைய வெற்றிக்குச் செல்லும் பாதையின் முதல் படிகள் இங்கே இருக்கின்றன" என்று கவிதைத்தனமாக சொல்லி சனத்தை வழியனுப்பி வைத்தார் கமல். ‘கெளம்பு... காத்து வரட்டும்…’ என்பதை இப்படி இலக்கியத்தரமாகவும் சொல்லலாம் போலிருக்கிறது. (என்ன இருந்தாலும்... படிச்சவன்... படிச்சவன்தான்யா... Catch my point?!)
ஆக... போட்டியாளர்களின் எண்ணிக்கையில் இன்னுமொன்று குறைந்திருக்கிறது. இனி போட்டிகளின் வழிமுறைகள் கடுமையாகும். புதிய போட்டியாளர் உள்ளே வரலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/sanam-gets-evicted-bigg-boss-tamil-season-4-day-63-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக