Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

ரஜினி-யின் அரசியல் என்ட்ரி: மற்ற கட்சிகள் சந்திக்கும் பாதகங்கள்!

`அவரின் வருகை, தமிழ்நாட்டு அரசியலையே மாற்றப்போகிறது’ என்று அவரின் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க, `அந்த அளவுக்கு மாற்றங்கள் நிகழ்கின்றனவோ, இல்லையோ ஏற்கெனவே இருக்கும் கட்சிகளுக்கு கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்தத் தவறாது' என்கிறார்கள் தேர்தல் அரசியலைக் கூர்ந்து கவனிக்கும் வல்லுநர்கள். அந்தவகையில் ரஜினி-யின் புதிய கட்சியால் யாருக்கெல்லாம் பாதகம் என ஐந்து முக்கியப் பாதகங்களை அடுக்குகிறார்கள்.

ஐந்து பாதகங்கள்:

1996-ல் தி.மு.க-த.மா.க கூட்டணி வெற்றிக்கு ரஜினியின் வாய்ஸ் முக்கியக் காரணம். அப்போதிருந்தே தி.மு.க வாக்குவங்கியில் ரஜினி ரசிகர்களும் அடங்குவார்கள். இப்போது ரஜினியின் புதுக்கட்சியின் மூலமாக தி.மு.க-வின் இந்த வாக்குவங்கி அடிபடும். மேலும், எதிர்ப்பு வாக்குகள் ஒருமுகமாக தி.மு.க-வுக்குச் செல்லாமல், ஸ்டார் இமேஜிலுள்ள ரஜினிக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம். இதன் மூலமும் தி.மு.க-வுக்கு அதிக அளவில் பாதகம் உண்டு.

தி.மு.க - அறிவாலயம்

அ .தி.மு.கவைப் பொறுத்தவரை, ஆட்சியின் மீதான அதிருப்தியை, கூட்டணிக் கட்சிகளின் வாக்குவங்கியின் மூலமாக சரிக்கட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஏற்கெனவே அதிக தொகுதிகளைக் கேட்டு குடைச்சல் கொடுத்துவரும் கூட்டணிக் கட்சிகள், தற்போது அதிக தொகுதிகளை எதிர்பார்த்து ரஜினிக் கட்சியோடு கூட்டணி பேச வாய்ப்புகள் அதிகம். புதிய சக்தியோடு இணையும்போது மக்களின் கூடுதல் நம்பிக்கையும் பெறலாம் என்பது கூட்டணிக் கட்சிகளின் கணக்காக இருக்கும். அப்படிக் கூட்டணிகள் இடம் மாறினாலும் அ.தி.மு.க- வாக்குவங்கிக்கு அடிவிழும். இதே பாதிப்பு தி.மு.க கூட்டணிக்கும் உண்டு. அதேநேரம் ரஜினி கட்சியைக் காரணம் சொல்லியே, தற்போதிருக்கும் கூட்டணிக்குள் தங்களுடைய தொகுதிப் பேரத்தை பெருக்கவும் வாய்ப்புகள் அதிகம். 'அதிக தொகுதிகள் கொடுக்கிறீர்களா அல்லது ரஜினியோடு கூட்டணி சேருவதா?' என இந்த மிரட்டல்களை இரண்டு திராவிடக் கட்சிகளும் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

Also Read: ரஜினி வருகை: `அ.தி.மு.க கூட்டணி உடைய வாய்ப்பு... தி.மு.க கூட்டணியில் பேர வலிமை கூடும்!‘

ரஜினிக்கு பட்டியல் சமூகம் உள்ளிட்ட உழைக்கும் மக்களிடம் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக `கபாலி’, `காலா’ போன்ற படங்கள், இந்த மக்களிடம், ரஜினிக்கான செல்வாக்கையும் அதிகரித்தன. தற்போது ரஜினியின் நேரடி அரசியல் , விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டை முன்னிறுத்துகிற கட்சிகளின் வாக்குவங்கியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ரஜினி, கமல்

எப்படியாவது 8% மேல் வாக்குகள் பெற்று தனிச் சின்னத்தைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கிற நாம் தமிழர், மாற்று அரசியலை முன்னிறுத்துகிற மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் வாக்குகளும், ரஜினியின் புதுக் கட்சியால் கடும் விளைவுகளைச் சந்திக்கும். குறிப்பாக, நகர்ப்புறங்களில் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கும் ம.நீ.ம -க்கு கூடுதல் பாதிப்பே. இதன் பொருட்டுமே ரஜினியோடு கூட்டணி சேர தொடர் முயற்சிகளை நண்பர் என்ற அடிப்படையிலும் கமல் தொடரலாம்.

ரஜினி

அதேநேரம், ``தம்முடைய புதிய கட்சியில் தலைமை பொறுப்புகளில் தமிழருவி மணியன், அர்ஜுனமூர்த்தி ஆகியோரை நியமித்திருக்கிறர் ரஜினி. அவர் யாருக்கானவர் என்று தெரிய இந்த ஒன்றே போதும். மேலும், ரஜினியின் கட்சி அறிவிப்பு வந்தவுடனேயே அதை பா.ஜ.க பிரபலங்கள்தான் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆக, பா.ஜ.க-வின் பி டீம்தான் ரஜினி. இங்கே தமிழ்நாட்டு அரசியலில் பா.ஜ.க-வுக்கு எப்போதும் இறங்குமுகம்தான். எனவே, ரஜினியால் எங்களுக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது. வேண்டுமென்றால் ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதால், அது பா.ஜ.க-வின் வாக்குகளை வேண்டுமானால் பாதிக்கலாம்" என்கிறார்கள் திராவிட, தமிழ்த் தேசிய, தலித், இடதுசாரி அரசியலை முன்னெடுக்கிற கட்சிகள்.

இதையேதான் வேறு வடிவில், ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க-வால் வேரூன்ற முடியாது. ஆகவே, ரஜினியின் மூலமாக அவர்கள் நுழைய விரும்புகிறார்கள். ரஜினி, பா.ஜ.க-வின் இன்னொரு முகமாகத்தான் இருப்பார், இயங்குவார்" எனச் சுட்டிக்காட்டுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

ரஜினியின் அரசியல் என்ட்ரி, யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்பதை வரும் தேர்தல் முடிவுகள் தெளிவாகச் சொல்லிவிடும் என்பது மட்டும் நிஜம்!



source https://www.vikatan.com/news/politics/rajinis-political-entry-challenges-for-other-parties-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக