Ad

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

Covid Questions: எகிறும் ரத்தச் சர்க்கரை அளவு; இன்சுலின் போட்டுக் கொண்டுதான் தடுப்பூசி போட வேண்டுமா?

எனக்கு 15 வருடங்களாக நீரிழிவு இருக்கிறது. இப்போது சர்க்கரை அளவு 430 இருக்கிறது. இன்னும் கோவிட் தடுப்பூசி போடவில்லை. ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் தடுப்பூசி போடக்கூடாது என்கிறார்கள். நான் என்ன சிகிச்சை எடுத்தும் எனக்கு சர்க்கரை அளவு குறையவில்லை. இன்சுலின்தான் தீர்வா? இன்சுலின் எடுக்க ஆரம்பித்து எத்தனை நாள்களில் சர்க்கரை அளவு குறையும்? எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

- கயல்விழி (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``15 வருடங்களாக நீரிழிவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். பல வருடங்களாக உங்கள் ரத்தச் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்காதது தெரிகிறது. அதனால்தான் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் காணப்படுகிறது. நம் உடலில் இன்சுலின் சரியாகச் சுரக்க வேண்டியது அவசியம். இப்படியே தொடர்ந்தால் கணையத்திலுள்ள பீட்டா செல்கள் நாளடைவில் மிகவும் சோர்வடைந்து, முழுமையாக இயங்க முடியாத நிலை ஏற்படலாம். இது கிட்டத்தட்ட டைப் 2 டயாபடீஸ், டைப் 1 டயாபடீஸாக மாறுவதற்குச் சமம். அதாவது இன்சுலினை சார்ந்திருக்கக்கூடிய டயாபடீஸாக மாறக்கூடிய தன்மைதான் இது.

பத்து வருடங்களுக்கும் மேலாக சர்க்கரை அளவைச் சமநிலையில் வைத்திருக்காத நோயாளிகளுக்கு இந்த நிலைமை பொதுவாக வரும். இன்சுலின் போடுவதுதான் தீர்வா என்று கேட்டால், தீர்வும் அதுதான், இப்போதைய சூழலில் உங்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிப்பதும் அதுதான். இன்சுலின் எடுத்துக்கொண்டால்தான் நீரிழிவின் பாதிப்பால் அடுத்தடுத்து உங்களுக்கு ஏற்படக்கூடிய மற்ற பிரச்னைகளைத் தடுக்க முடியும்

அதிக அளவிலான ரத்தச் சர்க்கரை இருப்பது என்பது நோய்களை வரவேற்க வாசல்கதவை நீங்களே விரியத் திறந்து வைத்திருப்பது போன்றது. மற்ற நோய்கள் உங்கள் உடலுக்குள் புகாமலிருக்க அந்தக் கதவுகளை அடைக்கும் ஒரே வழி இன்சுலின் மட்டும்தான்.

COVID-19 vaccine (Representational Image)

Also Read: Covid Questions: கோவிட் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமா?

இன்று நிறைய விதமான இன்சுலின் மருந்துகள் வந்துவிட்டன. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்துகளும் வந்திருக்கின்றன. மருத்துவரின் ஆலோசனையோடு இந்தச் சிகிச்சைகளைப் பின்பற்ற ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே ரத்தச் சர்க்கரையின் அளவில் மாற்றம் தெரியும். கூடவே உணவுக்கட்டுப்பாடும் அவசியம். ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகளுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அதன் வீரியம் மிக அதிகமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சரியான மருத்துவ ஆலோசனையோடு இன்சுலின் உள்ளிட்ட சிகிச்சைகளை முறையாகப் பின்பற்றி உங்கள் ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்த ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் கழித்து நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/my-diabetic-level-is-high-should-i-take-insulin-before-taking-covid-vaccines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக