Ad

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

மதங்கள், கடவுள்கள் குறித்து ஆபாச பேச்சு! - சர்ச்சை சாமியார் யோககுடில் சிவகுமார் கைதின் பின்னணி

சென்னை, செங்குன்றத்தை அடுத்த புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அதே பகுதியில் யோககுடில் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று நடத்தி வருகிறார். அதே போல், வல்லரசு என்ற பெயரில் கட்சி ஒன்றும் நடத்தி வருகிறார். யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வரும் சாமியார் சிவகுமார் சாதி, மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கார சாரமாகப் பேசி பதிவிட்டு இணைய வெளியில் சர்ச்சைக்குப் பேர் போனவராக மாறினார். இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதக் கடவுள்கள் மற்றும் மத குருமார்களை அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகத் திட்டித்தீர்த்துத் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். 'மதம் மறப்போம்..மனிதம் வளர்ப்போம்!' என்ற போர்வையில் சிவகுமார் பதிவிடும் கருத்துக்கள் அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக இவர் மீது ஏற்கெனவே பலரும் பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பொன்னேரி காவல்நிலையத்தில் இவர் மீது அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் பேரில், பொன்னேரி காவல்துறையினர் இவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீன் பெற்று யோககுடில் சிவகுமார் வெளியில் வந்தார்.

சிவகுமார்

ஆனால் , சிவகுமார் அதற்கு பிறகும் தொடர்ந்து அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் புதூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் யோககுடில் சிவகுமார் மீது திருச்சி உறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . மணிகண்டன் தனது புகாரில், "அனைத்து மதத்தினரும், சாதியினரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் நபிகள் நாயகம் , இயேசு, சிவபெருமான் என அனைத்து மத கடவுள்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவிட்டு வருகிறார். அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பேசி வரும் சிவகுமார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மணிகண்டனின் புகார் மனுவினை பெற்றுக்கொண்ட உறையூர் போலீஸார், உறையூர் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சிவகுமாருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், சிவகுமார் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், அவரின் யூடியூப் சேனல் குறித்தும், ஆபாச பேச்சுக்கள் குறித்தும் வெவ்வேறு மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததை அடுத்து யோககுடில் சிவகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் கட்சிக் கொடியுடன் கழுத்தில் மாலை, கூலிங் கிளாஸ் என சிறிதும் பயமில்லாமல் உறையூர் காவல்நிலையத்தில் ஆஜராகினார்.

தொடர்ந்து போலீஸாரின் விசாரணையில், "நான் எனது ஆதரவாளர்களிடம் பேசுவதற்காகவே தனியாக சேனல் ஆரம்பித்து அவர்களுக்கு எனது கருத்துக்களை வழங்கி வருகிறேன். மத குருமார்கள் யாரும் என்னுடைய வீடியோக்களை பார்க்க வேண்டாம் என்று வீடியோவின் துவக்கத்திலேயே கூறி விடுகிறேன். அதனால் என்னுடைய வீடியோக்கள் எதையும் நீக்க முடியாது. நான் எதையும் சந்திக்கத் தயார்" என்று போலீஸாரிடமே தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, உறையூர் போலீஸார் சர்ச்சை சாமியார் சிவகுமாரின் வாக்குமூலத்தைக் குறித்து வைத்துக் கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். சிவகுமாரை கைது செய்வது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர்.

போலீஸாரின் எச்சரிக்கையை மதிக்காத சாமியார் சிவகுமார் உறையூரிலிருந்து வந்த சில நாள்களிலேயே மீண்டும் தனது அடுத்த வீடியோவிற்கான வேலைகளை ஆரம்பித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் புழல் காவல்நிலையத்தில் யோககுடில் சிவகுமார் மீது மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி சாதிக் பாஷா என்பவரளித்துள்ள புகார் மனுவில், "சென்னை புழல் அருகிலுள்ள புத்தாகரம், அன்னை இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார்.

புகார்
புழல் காவல்நிலையம்

சிவகுமார் தனது யூடியூப் சேனலில் மதக்கடவுள்களை கொச்சைப்படுத்தி ஆபாசமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றார். இஸ்லாம் மார்க்கம் குறித்தும் இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் குறித்தும், இஸ்லாமியப் பெண்கள் குறித்தும் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். அதே போல், பிற மதத்தினரையும் மதக்கடவுள்களையும் கொச்சையாகப் பேசி வருகிறார். வேண்டுமென்றே மத உணர்வுகளைப் புண்படுத்தியும் , மக்களின் உணர்ச்சிகளை தூண்டியும் பொது அமைதிக்கும், இந்திய இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கும் நோக்கத்தில் சிவகுமார் செயல்பட்டு வருகிறார். எனவே யோககுடில் சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்" என்று பாஷா குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: ``என்னால் மட்டும்தான் எல்லாம் முடியும்” பலரிடம் மோசடி செய்த போலிச் சாமியார் கைது!

சாதிக் பாஷாவின் புகாரைப் பெற்றுக் கொண்ட புழல் போலீஸார், சிவகுமார் மீது ஐ.பி.சி 153(A) மத, இன, மொழி சாதி, சமயம் தொடர்பாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட முயற்சி செய்வது, 295(A) தெய்வ நிந்தனை சட்டம், 298 மக்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவது என மொத்தம் 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து மாதவரம் காவல் துணை ஆணையர் சுந்தரவதனம் சாமியார் சிவகுமாரைப் பிடிக்க மாதவரம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்றினை அமைத்தார். இந்நிலையில், இன்று தனிப்படை போலீஸார் யோககுடில் சிவகுமாரை அதிரடியாகக் கைது செய்தனர்.



source https://www.vikatan.com/news/crime/police-have-arrested-yogakudil-sivakumar-a-priest-who-spreading-slander-about-religion

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக