நாம் வழக்கமாக ஈடுபடும் முதலீடுகளான வங்கி எஃப்.டி, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவை பணவீக்கம் தாண்டிய வருமானம் தருவதில்லை. இந்த முதலீடுகள் காலத்தால் மங்கிய நிலையில், பங்குச் சந்தையும், அது சார்ந்த முதலீடுகளுமே முதலீட்டாளர்களுக்கு ஆபத்பாந்தவனாகக் காட்சியளிக்கின்றன. எட்டாயிரம் வருடங்கள் முன்பே உலகில் தோன்றிய இந்த முதலீட்டு முறை, நம் நாட்டில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்ற பெயரில் உருவானதையும், நூற்றைம்பது வருடங்களாக நம்முடன் பயணிப்பதையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இதன் உடன்பிறப்புகளாக உருவாகி, நமக்குப் புதிய முதலீட்டு முறைகளை அறிமுகப்படுத்தும் என்.எஸ்.இ (National Stock Exchange), எம்.சி.எக்ஸ்.(Multi Commodities Exchange) போன்றவற்றை பற்றி இன்று பார்க்கலாம்.
Also Read: பங்குச்சந்தைகளுக்குள் நடந்த பனிப்போர்: BSE-ஐ தட்டிக்கேட்க வந்த NSE-யும் சறுக்கியது ஏன்?
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE)
1992-ல் தொடங்கப்பட்ட நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE), பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சை (BSE) விட இன்னும் மாடர்னாக, இன்னும் அதிக ஆட்டோமேஷனுடனும், எலெக்ட்ரானிக் பரிவர்த்தனைகளுடனும் முன்னேறுகிறது. இதன் வேகம் மற்றும் நவீனத்துவம் காரணமாக இதில் வியாபாரமும் அதிகம் நடைபெறுகிறது. இதிலும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் போலவே பங்கு, கடன், கமாடிட்டி மற்றும் கரன்சி சார்ந்த சந்தைகள் இயங்குகின்றன.
என்.எஸ்.இ உருவாக்கி இருக்கும் குறியீடுகளில் 1996-ல் தொடங்கப்பட்ட நிஃப்டி (என்.எஸ்.இ + ஃபிஃப்டி என்பதன் வார்த்தைக் கலவை) குறியீடு மிகவும் பிரபலமாக விளங்குகிறது. இதில் ஐம்பது பெரிய கம்பெனிகள் இடம் பெற்றுள்ளன. சென்செக்ஸிலும், நிஃப்டியிலும் இடம் பெற்றுள்ள பங்குகள், சந்தையின் தற்போதைய முதலீட்டுக் கலவையை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
நிஃப்டிநெக்ஸ்ட்50, நிஃப்டிபேங்க், நிஃப்டிஃபார்மா, நிஃப்டிமிட்கேப்100 போன்ற பல இண்டெக்ஸ்கள் என்.எஸ்.இ-யில் உருவாகியிருந்தாலும் நிஃப்டி 50-க்கு இருக்கும் மரியாதையே தனி. இது மொத்தம் 13 செக்டார்களின் பங்குகளை உள்ளடக்கியுள்ளது. சிங்கப்பூரில் இது எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி என்ற பெயரில் வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தைகளின் ஏற்ற, இறக்க நிலவரத்தை இது துல்லியமாகப் பிரதிபலிப்பதால், பலரும் காலையில் வர்த்தகத்தைத் தொடங்கும் முன் எஸ்.ஜி.எக்ஸ் நிஃப்டி நிலவரத்தைக் கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
Also Read: பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! - 20
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX)
பி.எஸ்.இ, என்.எஸ்.இ தவிர 2003-ல் நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட எம்.சி.எக்ஸ் எனப்படும் கமாடிட்டீஸ் எக்ஸ்சேஞ்சும் பிரபலமாக விளங்குகிறது. இங்கு தங்கம், வெள்ளி, குரூட் ஆயில், கேஸ், செம்பு, இரும்பு, காபி, அரிசி, சோயா பீன்ஸ் போன்ற மூலப் பொருள்கள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பொதுவாக, இது பொருள்களை உற்பத்தி செய்வோருக்கும், உபயோகிப்போருக்கும் நடுவே பாலமாக விளங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தளம். இந்தப் பொருள்களை உபயோகிப்போர், இவற்றின் விலை தினம்தோறும் ஏறி இறங்குவதால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்தத் தளத்தை உபயோகித்து மூலப் பொருள்களை சரியான விலையில் ரிசர்வ் செய்கிறார்கள்.
ஆனால், உபயோகிப்போரைவிட அதிகமாக இங்கு, முதலீட்டாளர்கள் வருகிறார்கள். காரணம், இங்குள்ள ஃப்யூச்சர்ஸ், ஆப்ஷன்ஸ் போன்ற பரிவர்த்தனைகள் முதலீட்டைப் பல்வகைப்படுத்த (diversification) உதவுகின்றன. (இவை பற்றி விளக்கமாகப் பின்னொரு கட்டுரையில் பேசலாம்). இந்தப் பொருள்களின் விலையில் இருக்கும் அதிக ஏற்றம், இறக்கம் (volatility) பெரிய லாபத்துக்கு வழி என்பது ஊக வணிகர்களையும் சுண்டி இழுக்கிறது.
இந்த முதலீடுகளில் இறங்குவது எப்படி?
பி.எஸ்.இ, என்.எஸ்.இ மற்றும் எம்.சி.எக்ஸ் போன்ற எக்ஸ்சேஞ்சுகளில் முதலீட்டில் இறங்குவது மிகவும் எளிது. பங்குகளை வாங்க, விற்க நமக்கு ஒரு டீமேட் அக்கவுன்ட்டும் டிரேடிங் அக்கவுன்ட்டும் தேவை.
Also Read: `இதற்கெல்லாம் விதை வெனிஸின் வணிகர்கள் போட்டது!' - பங்குச்சந்தையின் சுவாரஸ்ய வரலாறு - 21
ஐசிஐசிஐ டைரக்ட், எஸ்பிஐ கேப்ஸ், ஷேர்கான், ஜெரோதா, ஹெச்டி எஃப்சி செக்யூரிட்டீஸ் போன்ற பல நிறுவனங்கள் நமக்கு இந்த வசதியைத் தருகின்றன. இடல்வெய்ஸ் கம்பெனி, ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் போன்றவை இதில் டிரேடு செய்வதற்காக ஸ்பெஷல் ஆப்ஸ் உருவாக்கியுள்ளன.
நமது அறிவு, ஆர்வம், திறமை, நேரம் ஒதுக்குதல் இவற்றைப் பொறுத்து
முதலீடு செய்தல் (Investing),
வர்த்தகம் செய்தல் (Trading),
ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் (F&O),
டே டிரேடிங் (Day Trading),
மார்ஜின் டிரேடிங் (Margin Trading) என்று பலவிதமான ஆட்டங்கள் இந்த எக்ஸ்சேஞ்சுகளில் உண்டு. நம் இயல்புக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ற முதலீட்டு முறையைத் தேர்ந்தெடுத்து, ஒழுங்குடன் பின்பற்றி வந்தால் பங்குச் சந்தையின் மந்திர ஜாலம், ஆறை அறுபதாக்கும்.
- அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.
source https://www.vikatan.com/business/finance/an-introduction-to-nse-mcx-exchanges-and-its-trading-options
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக