மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்கு, டிக்ரி உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு தரப்பினருக்கமான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணியை நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். டெல்லி காவல்துறை எந்த இடம் வரை அனுமதிக்கிறதோ, அந்த இடத்தில் பேரணியை முடித்துக்கொள்வோம் என்றும், காவல்துறை அனுமதி தந்தால் ஒழிய டெல்லி நகருக்குள் நுழைய மாட்டோம் என்று போராடும் விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், குடியரசு தினத்தன்று நடந்ததே வேறு. விவசாயிகளின் ஒரு பகுதியினர் டிராக்டர்களிலும் குதிரைகளிலும் டெல்லி நகருக்குள் நுழைந்ததுடன், செங்கோட்டையில் ஏறி கொடியேற்றினர். அனுமதி அளிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி டிராக்டர்களில் விவசாயிகள் பலர் நகருக்குள் நுழைந்ததால், விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அமைதி வழியில், அற வழியில் டிராக்டர் பேரணி நடக்கும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் வாக்குறுதி அளித்ததற்கு மாறாக, போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர் அத்துமீறி நடந்துகொண்டனர்.
குடியரசு தின அணிவகுப்புகள் முடிந்து அனுமதியளிக்கப்பட்ட வழிகளில் வந்த டிராக்டர்களை டெல்லி பொதுமக்கள் பலரும் வரவேற்ற காட்சிகளும் நடந்தன. ஆனால் ஒரு பகுதியினர் டிராக்டர்களைக் கொண்டு டெல்லி அரசுப் பேருந்தைக் கவிழ்த்ததும், போலீஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்று அத்துமீறினர். போலீஸாரை ஒரு பகுதியினர் அடிக்க முற்படுவதும், அதே சமயம் போராட்டக்குழுவில் இருந்த சிலர் போலீஸாரைக் காப்பாற்றி, கோபமான சிலரை அமைதிப்படுத்தும் நடந்தது.
கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டதும் மேலும் நிலைமை களேபரமானது. போராட்டக்குழுவினர் கண்ணீர் புகைகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட நிருபர்களின் கேமராவை சரிசெய்யவும் போராட்டக்காரர்களில் சிலர் உதவினர்.
இதனிடையில் ஒரு பகுதிப் போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் உள்ள கம்பம் ஒன்றில் ‘Nishan Saheb' எனப்படும் சீக்கிய மதத்தின் புனிதக் கொடி ஒன்றை ஏற்றினர். ‘தேசியக் கொடியை இறக்கிவிட்டு கொடியேற்றினர்’ என்று சிலர் வதந்தி பரப்பினர். ‘இல்லை... தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் தொடவே இல்லை. தேவையற்ற வதந்தி பரப்பாதீர்கள்” என்று பலரும் இதைக் கண்டித்தனர்.
நங்கோலி சாலையில் போலீஸார் வாகனங்களை போராட்டத்தில் ஒருபகுதியினர் சிதைத்தனர். போராட்டத்தை ஒடுக்க வந்த Riot Control வாகனமும் அதில் அடங்கும். மோகன் கார்டன் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் உட்பட, 30 காவலர்கள் தாக்கப்பட்டதை அடுத்து துவாரகா மாவட்ட காவல்துறை, வன்முறையாளர்கள் மீது மூன்று FIR பதிவு செய்தது.
கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடைபெற்றுவந்த போராட்டத்துக்கு, இந்த வன்முறை சம்பவங்கள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்கள், விவசாயிகளின் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
#WATCH | Delhi: Protestors attacked Police at Red Fort, earlier today. #FarmersProtest pic.twitter.com/LRut8z5KSC
— ANI (@ANI) January 26, 2021
போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவியதாகவும், அவர்களால்தான் வன்முறை ஏற்பட்டதாகவும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், வன்முறை சம்பவங்கள் நிகழ்வதற்கு போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அமைப்புகள் இடம்கொடுத்திருக்கக்கூடாது. போராட்டத்தில் அமைதியை உறுதிசெய்ய வேண்டியது அதன் தலைவர்களின் பொறுப்பு.
விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் விவசாயிகள் கூட்டமைப்பில் ஓர் அங்கமான ஸ்வராஜ் இந்தியாவின் தலைவரான யோகேந்திர யாதவ், “இந்த வன்முறை சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைக் கண்டித்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, செங்கோட்டையில் நிகழ்ந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், நாட்டின் விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களை அவமதிக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது. “புனிதமான குடியரசுத்தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மோசமானவை, வேதனையளிக்கக்கூடியவை” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி கூறியிருக்கிறார்.
“மதத்தின் கொடியை செங்கோட்டையில் ஏற்றுவது என்பது அராஜகமான செயல். இத்தகைய செயல் நடைபெற்றபோது விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களைக் காணவில்லை. எல்லா குழுக்களையும் கட்டுப்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று ஊடகவியலாளர் சேகர் குப்தா கூறியிருக்கிறார்.
முகார்பா சௌக், காஸிபூர், சீமாபுரி, ஏ பாய்ண்ட் ஐடிஓ, டிக்ரி பார்டர், நங்கோலி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளில் 86 காவலர்கள் தாக்கப்பட்டதாகவும், பொதுச்சொத்துகள் சேதமடைந்ததாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்தது.
நியாயமான கோரிக்கைகளுக்காக ஜனநாயகமான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை ஆதரிக்கலாம். ஆனால், போராட்டம் என்ற பெயரில் நிகழும் வன்முறைகளை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/delhi-farmers-protest-violence-can-not-accepted
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக