Ad

திங்கள், 20 செப்டம்பர், 2021

குடும்பமாக முதன்முதலில் நூடுல்ஸ் சாப்பிட்ட அனுபவம்! - பிரான்ஸ் தமிழரின் ஃப்ளாஷ்பேக்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விகடன் பிரசுரத்தின் மூலம் வெளியான நூல், எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது என்பதாக ஞாபகம்... தலைப்பு மறந்துவிட்டது.

பக்கத்து மேஜையில் நூடுல்ஸ் சாப்பிடுபவரை பார்த்து தனக்கும் நூடுல்ஸ் ஆர்டர் செய்து, அதன் சுவை பிடிக்காமல் சர்வரிடம் சாம்பாரை கேட்டு வாங்கி நூடுல்ஸுடன் பிசைந்து சாப்பிட்ட ஒரு முதியவரை பற்றி நினைவு கூர்ந்திருப்பார் !

பாஸ்ட் புட் கலாச்சாரம் பரவ தொடங்கிய தொண்ணூறுகளில் எங்கள் ஊரின் பிரபல பேக்கரி ஒன்றின் மேல் தளத்தை புட் கோர்ட்டாக மாற்றியமைத்தார்கள். அங்கிருந்துதான் எங்கள் ஊரின் முதல் பிட்சா, பர்கர் விற்பனை தொடங்கியது.

Representational Image

முதலும் கடைசியுமாக நான் அங்கு சென்றிருந்த ஒரு மாலை பொழுதில் விடலை கூட்டம் ஒன்று மெனுவில் இருந்த அனைத்து வகைகளையும் ஆர்டர் செய்தது ! பிட்சா, பர்கர், நூடுல்ஸ் என மேஜை முழுவதும் நிரம்பியதை அதில் ஒன்று இதில் ஒன்று என அவர்கள் ருசி பார்க்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே,

"அண்ணே ! ஒன்னும் சரியில்ல ! நம்ம கடை பப்ஸை ஆளுக்கு ரெண்டுன்னு எடுத்துக்கிட்டு வாங்க ! "

என அரற்றினான் அவர்களில் ஒரு இளைஞன் ! மற்ற எதையும் அவர்கள் தீண்டவில்லை !

இன்று எங்கள் ஊரில் தெருவுக்கு ஒரு பாஸ்ட் புட் கடை இருந்தாலும், அன்று தொடங்கப்பட்ட அந்த புட் கோர்ட்டின் வியாபாரம் பேக்கரிக்கு ஈடாக அமையாததால் திறந்த வேகத்திலேயே இழுத்து மூடப்பட்டுவிட்டது !

பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்பட்டு, பல அடுக்கு பதப்படுத்தல்களுக்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் தொழிற்சாலை உணவுகள் எவையும் முதல் சுவையிலேயே நமக்கு பிடித்துவிடுவதில்லை. தங்களின் தயாரிப்புகளை உள்ளூர் உணவு கலாச்சாரத்தில் நுழைத்து, அவற்றை நம் உணவு தட்டுக்கு கொண்டு வர பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் சாம பேத தான தண்ட வழிமுறைகளையெல்லாம் விளக்க தொடங்கினால் அது ஒரு பெருந்தொடராக நீளும் !

ரவின் நிழல் படர தொடங்கிய ஒரு மாலைப்பொழுதின் இறுதியில், கால்பந்து விளையாடி களைத்த மூச்சிரைப்புடன் பாஸ் அண்ணன் நன்னாரி சர்பத் கடையில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்த முதல் கோலா குளிர்பானத்தில் எந்த சுவையும் தெரியவில்லை ! வறண்டத் தொண்டையில் சோடாவின் காரம் தாக்கி, புரை ஏறியதுதான் நினைவிலிருக்கிறது !


"ஏஹ் தில் மாங்கே மோர் !"


என பன்னாட்டு குளிர்பானத்தை தூக்கி பிடித்துக் குலுக்கி, இந்திய கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நட்சத்திரங்களும் உள்ளூர் நன்னாரியையும் நீர் மோரையும் நாக் அவுட் செய்ததெல்லாம் போர் வியூகங்களுக்கு ஈடான விளம்பர ராஜதந்திரங்கள் ! தங்களின் தயாரிப்புகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலையை விடவும் அதிகமாக விளம்பரங்களுக்கு செலவு செய்யும் பன்னாட்டு பெருவணிக நிறுவனங்கள் ஏராளம் !

Representational Image

தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு அடைந்த நாடுகள் தங்கள் தயாரிப்புகளை சந்தை நாடுகளின் தலையில் கட்டுவது காலங்காலமாக நடந்துகொண்டிருப்பது தான்.

ன்று நம் ரத்தத்துடன் கலந்துவிட்ட நாயர் கடை சாயாவும் டிகிரி காப்பியும் கூட விளம்பர பரப்புரைகளால் நமக்கு பழக்கப்படுத்தப்பட்டவை தான் என்றால் நம்ப முடியாது !

சீனாவிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதில் ஐரோப்பிய நாடுகளுடனான போட்டியினால் சொந்தமாக தேயிலை சாகுபடியை தொடங்க முடிவு செய்த கிழக்கு இந்திய கம்பெனி பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் அஸ்ஸாம் பகுதிகளில் தேயிலையை பயிரிடத்தொடங்கியது.

தேயிலை சாகுபடியை இந்தியாவில் தொடங்கி ஏற்றுமதியிலும் வெற்றி கண்ட ஆங்கிலேயர்களுக்கு தேநீரை உள்ளூர் சந்தையில் கொண்டு சேர்ப்பது அவ்வளவு சுலபமாக கைக்கூடிவிடவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவுக்குள் நுழைத்த தேயிலையை 1920களில் தான் சந்தைப்படுத்த முடிந்தது !

அதுவும் எப்படி ?

குடிக்க கொதிக்கவைக்கும் நீருடன் தேயிலையை சேர்த்தால் அது நீரின் நச்சுத்தன்மையை போக்கும் என்பதான விளம்பரங்களின் மூலம் இந்திய ஆயுர்வேத மூலிகைகளுக்கு ஈடான முக்கியத்துவத்தை தேயிலைக்கும் உண்டு பண்ணி சாதித்தனர் !

கொழும்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்த "சேக்காளி" அனுப்பிய தேயிலை தூளை அவன் குறிப்பிட்ட பதத்தில் பாலில் கொதிக்கவைத்து இரவில் குடித்துவிட்டுப் படுத்த குடும்பம் தூக்கமில்லாமல் புரண்டு அதிகாலை விழிப்பை தவறவிட்டு மற்றவர்களால் கேலிக்கு உட்பட்டதை கோபல்ல புரத்து மக்கள் கதையில் கி.ராஜநாராயணன் விவரிப்பதை படித்தால் முதல் தேநீர் குடித்தவர்களும் முகம் சுளித்திருக்கிறார்கள் என்பது புரியும் !


த்து வயது என ஞாபகம்...


எங்கள் ஊரின் வானிலை ஆராய்ச்சி மையத்தில் வேலை செய்த என் தந்தையின் நண்பர் பணி நிமித்தமாய் மும்பை சென்று திரும்பிய போது பளபளப்பான இரண்டு பாக்கெட்டுகளைக் கொண்டுவந்து கொடுத்தார். ஐந்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம், பிரியாணியைப் போன்ற சுவையோடு இருக்கும் என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற பேசி அவர் கொடுத்தவை நூடுல்ஸ் பாக்கெட்டுகள் !

Representational Image

பளபள பாக்கெட் நூடுல்ஸ் தமிழ்நாட்டு விளம்பரங்களில் கூட தலைகாட்டாத நேரம் அது !


ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு பத்துமணிக்கு மேல் என் தந்தையின் மேற்பார்வையில் குடும்பமே அடுக்களையில் கூடி, அந்தப் பாக்கெட்டில் குறிப்பிட்டிருந்த அளவு நீரை வாணலியில் கொதிக்கவைத்து நூடுல்ஸை கொட்டி அதனுடனிருந்த மசாலாவையும் போட்டுக் கிளறி இறக்கினோம் !

கோபல்லபுரத்து மக்களைப் போலவே நாங்களும் இரவில் புதிய உணவை முயன்ற உளவியல் காரணம் எனக்கு இன்றுவரை பிடிபடவில்லை !


" அய்யே ! இது என்ன பெரிய ஆஸ்பத்திரி மருந்து நாத்தம் ?... "


" உப்பும் இல்லை... உரைப்பும் இல்லை... "


வாயில் போட்டதை விழுங்க முடியாமல் ஆளாளுக்கு புலம்ப,


" இத போயி பிரியாணி மாதிரின்னு சொன்னானே பாவி... எத்தனையோ தடவை நம்ம வீட்டுப் பிரியாணியை சாப்பிட்டும் அவனுக்கு ருசி தெரியல பாரு ! "

என புலம்ப தொடங்கிவிட்டாள் பாட்டி !

திண்ணை இல்லாத வீடுகளும், டீவி தொடர்களும் இல்லாத அந்த காலத்தில் கூப்பிட்ட குரலுக்குத் தெருவே ஓடி வரும் ! ஒரு வீட்டின் நிகழ்வு மிக விரைவாய் பல தெருக்களுக்குப் பயணித்துவிடும் !


வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்பதால் யாரிடமும் சொல்ல வேண்டாம், நண்பரிடம் மட்டும் மரியாதைக்காக நன்றாக இருந்தது எனக் கூறிவிடலாம் என்றெல்லாம் குடும்பச்சத்திய பிரமாணம் எடுத்த பிறகு, வாணலியை நூடுல்ஸுடன் புழக்கடையில் கழுவ போட்டுவிட்டு உறங்கிவிட்டோம்.


பழமையான நான்கு கட்டு ஓட்டு வீட்டின் புழக்கடை கொல்லைப்புறம் பார்த்துத் திறந்திருக்கும். இரவில் எச்சில் பாத்திரங்களில் மிச்சமிருப்பவற்றை பூனைகள் தின்றுவிடும்...


மறுநாள் காலையில் மற்ற பாத்திரங்களிலிருந்த மிச்சங்களெல்லாம் காணாமல் போயிருக்க, நூடுல்ஸ் மட்டும் அப்படியே இருந்தது ! அந்தக் காலப் பூனைகளுக்குக்கூட அது பிடிக்கவில்லை !

Representational Image

ஆரம்பத்தில் நம்மை அப்படிப் படுத்திய நூடுல்ஸ் மற்றும் இன்னபிற அந்நிய உணவுகள் மற்றும் பானங்கள் எல்லாம்,

"இதையெல்லாம் சாப்பிட்டால்தான் இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியானவர்கள்"


என்பதான தந்திர விளம்பரங்களால் நம் அன்றாடத் தேவைகளாக மாறிவிட்டன !


விளைநிலங்களும் காடுகளும் மிக விரைவாக அழிக்கப்படும் இன்றைய சூழலில், பிளாஸ்டிக் அரிசியும், செயற்கை முட்டையும், ரசாயன பாலும் இயற்கையைவிடச் சிறந்தவை என விளம்பரப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ! பெருவணிக நிறுவனங்களும் சுயநல அரசியல்வாதிகளும் கைகோர்த்தால் எதுவும் நடக்கும் !

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-noodles

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக