பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மித்திலேஷ் (23). இவரின் மனைவி மீராதேவி. இந்தத் தம்பதியருக்கு விஷ்ணு (5), ஷியாம் (3) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் பட்டரவாக்கம், மாரியம்மன்கோயில் தெருவில் குடியிருந்துவருகின்றனர். மித்திலேஷும், மீராதேவியும் பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர். 18-ம் தேதி வழக்கம்போல இருவரும் வேலைக்குச் சென்றனர். காலை 9 மணியளவில் மித்திலேஷுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் வீட்டுக்கு வந்தார். வீட்டில் விஷ்ணு மட்டும் விளையாடிக்கொண்டிருந்தான். ஷியாமைக் காணவில்லை. அதனால் விஷ்ணுவிடம், தம்பியை எங்கே என்று மித்திலேஷ் கேட்டார். அதற்கு மாடி வீட்டில் குடியிருக்கும் சிவ்குமார் என்கிற சிபு கபார்ட், மனு கபார்ட் இருவரும் தம்பியைத் தூக்கிச் சென்றதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து மித்திலேஷ் வேலைக்குச் சென்றுவிட்டார். மாலையில் மித்திலேஷ், மீராதேவி இருவரும் வீடு திரும்பியபோதும் ஷியாம் வரவில்லை. அதனால் மாடிக்குச் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து சிவ்குமாரும் மனு கபார்ட்டும் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்று மித்திலேஷ் விசாரித்தார். இருவரும் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த மித்திலேஷ், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் 19-ம் தேதி புகாரளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் கனகராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மல்லிகா விசாரித்தார். மித்திலேஷ், தன் மகன் ஷியாமை வீட்டின் மேல் மாடியில் குடியிருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவ்குமார், மனு கபார்ட் ஆகியோர் கடத்திச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 342, 363, 365 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குழந்தையைத் தேடிவந்தனர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தையைக் கடத்திச் சென்ற தகவலையடுத்து சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களின் விவரங்களை போலீஸார் சேகரித்தனர். அப்போது அன்றைய தினம் மூன்று ரயில்கள் வடமாநிலங்களுக்குச் சென்றது தெரியவந்தது. அதில் பயணித்தவர்களின் விவரங்களையும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது இருவரும் குழந்தையோடு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதை போலீஸார் உறுதி செய்தனர். உடனடியாக குழந்தையின் போட்டோவையும் கடத்திச் செல்பவர்களின் போட்டோக்களையும் நாக்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுகொண்டிருந்த சிவ்குமார், மனு கபார்ட் இருவரையும் போலீஸார் மடக்கிப்பிடித்து, குழந்தை ஷியாமை மீட்டனர். இந்தத் தகவலை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸாருக்கு நாக்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் போனில் தெரிவித்தனர். அவர்களின் புகைப்படங்களையும் போலீஸார் அனுப்பிவைத்தனர். அதைப் பார்த்த பிறகே ஷியாமின் பெற்றோர் நிம்மதியடைந்தனர். குழந்தையைக் கடத்திச் சென்றவர்களையும், குழந்தையையும் சென்னைக்கு அழைத்து வர போலீஸார் நாக்பூருக்குச் சென்றிருக்கின்றனர். இருவரிடம் விசாரித்தால்தான் குழந்தையைக் கடத்தியதற்கான காரணம் தெரியவரும் என அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/news/crime/child-kidnapping-in-chennai-saved-by-police-from-train
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக